என்னைப் போல என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது. நான்தான் படிக்கவில்லை, எப்பாடு பட்டாவது என் பையனை / பெண்ணை, டாக்டருக்கு / இன்ஜினியருக்கு…. படிக்க வெச்சிருவேன். என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் பிள்ளைகளுக்கும் அதே ஆர்வமும் துடிப்பும் படிப்பில் இருக்கிறதா இல்லையா என்று பார்க்காமல் பிள்ளைகளைப் படுத்தி எடுப்பவர்கள்தான் இப்போது மிகவும் அதிகம்.
+2 முடித்த பிறகு
மே மாதம் +2 ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, ஐ.ஐ.டி., அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு, பிரபல பல்கலைக்கழகங்களில் தேர்வு, இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையையும் எழுதவைத்து விடுவார்கள். 10, 15 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் (இந்தியா முழுவதும்!) அப்ளிகேஷன்ஸ் வாங்கிவிடுவார்கள். ரிசல்ட் வந்த 24 மணி நேரத்திற்குள் எல்லா கல்லூரிகளுக்கும் அப்ளிகேஷன்கள் பறந்துவிடும்!
ஐ.ஐ.டிதான் வாழ்வின் இறுதி இலக்கா?
வெறும் 10 ஆயிரம் இடங்களுக்கு நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். இந்தப் போட்டியை வைத்து கோச்சிங் கிளாஸ் என்ற பெயரில் ஏராளமானோர் கொள்ளை கொள்ளையாக லாபமடைகின்றனர். மாணவர்களை காலை முதல் மாலை வரை இதைத் தவிர வேறு எதையுமே இவர்கள் சிந்திக்க விடுவதில்லை. அப்படியும் எல்லாராரும் வெற்றிபெற முடியாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பல புத்திசாலி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பல படிப்புகள் மாணவர்களுக்கு வாழ்க்கையின் இறுதி இலக்காக "செய் அல்லது செய்துமடி"(do or die) என பெற்றோர்களால் திணிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் எதுவுமே வாழ்க்கையின் இறுதி இலக்காக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. காலம் மாற மாற எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கும்.
பிள்ளைகளின் ஆர்வம்?
அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள யாருமே முயற்சிப்பதில்லை. மகனுக்கோ/மகளுக்கோ எழுதுவதில், இலக்கியத்தில், மொழியில், நடனத்தில், நாடகத்தில், சினிமாவில் இப்படி எதில் வேண்டுமானாலும் ஆர்வமும் திறமையும் இருக்கலாம்.
யார் முடிவெடுப்பது? எது சரி?
சில மாணவர்கள் தங்கள் ‘ஃபிரென்ட்ஸ்’ என்ன சொல்கிறார்களோ, எங்கே சேர்கிறார்களோ அதையே செய்ய விரும்புவார்கள். அது அவர்களது திறனுக்கும் ஆர்வத்துக்கும் புறம்பாகவும் இருக்கலாம். எனவே, யாராவது ஒருவர் எடுக்கும் முடிவு தவறாகிவிடலாம். யாரும் தனியாக தங்கள் விருப்பம், லட்சியத்தின் அடிப்படையில் ‘முடிவு’ எடுக்கக்கூடாது.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அமர்ந்து அவர்களின் விருப்பம், அதன் எதிர்காலம், அதில் அவர்களுக்கு இருக்கும் திறமை எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து, முடிந்தால் அந்தந்த துறை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று உங்கள் பிள்ளைகளை அதிலேயே தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள ஊக்கப்படுத்தலாம்.
ஆனால் வெகு சிலருக்கே அவர்கள் விரும்பியதைச் செய்ய முடிகிறது. பிள்ளைகளும் சரி, பெற்றோரும் சரி, இவ்வாறு பரஸ்பரம் அமர்ந்து பேசி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு எதிர்காலப் படிப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். மேல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நேரம் வரும்போது குழப்பங்கள் இல்லாமல் தயாராக இருப்பது மிகவும் அவசியம். தாங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான் சரி என்ற பிடிவாதத்துடன் பெற்றோர்கள் இருக்கக்கூடாது.
இந்தப் பரந்த உலகில் மாணவர்கள் வெற்றிகளை ஈட்ட, சாதிக்க, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எத்தனையோ துறைகள், களங்களின் கதவுகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. தங்களுக்கு விருப்பமான கதவுகளைத் தட்டி புது உலகில் அவர்கள் பிரவேசித்து சாதனைபடைக்க வழிவிடுங்கள்.