/indian-express-tamil/media/media_files/2025/10/22/download-2025-10-22t12472-2025-10-22-12-47-45.jpg)
இன்றைய காலகட்டத்தில், வீடுகளில் இருந்து தொடங்கி திருமண ஹால்கள், பள்ளிகள், அலுவலகங்கள் வரை பெரும்பாலும் நாம் பிளாஸ்டிக் நாற்காலிகளை (Plastic Chairs) பயன்படுத்துகிறோம். விலை குறைவாக இருக்கிறதோடு, எடை குறைவாகவும், தாங்கும் திறன் அதிகமாகவும் உள்ளதால் பிளாஸ்டிக் நாற்காலிகள் அதிகம் விருப்பமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அந்த நாற்காலிகளில் அடிக்கடி காணக்கூடிய ஒரு சிறிய அம்சத்தை பற்றி பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.
நாம் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாற்காலிகளில், நடுப்பகுதியில் ஒரு சிறிய துளை (hole) இருக்கும். இது பலருக்கும் சாதாரணமாகவே தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, தொழில்நுட்பம் அடிப்படையிலானவை.
அந்த துளையின் உண்மையான நோக்கம் என்ன?
பலர் இதனை "டிசைனுக்காகவே (design purpose)" என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில், இந்தத் துளி பல முக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவற்றில் சில:
1. நாற்காலிகளை அடுக்கி வைப்பதில் உதவுகிறது
பிளாஸ்டிக் சேர்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும்போது, அவற்றுக்கிடையே காற்று சிக்கி 'வெற்றிடம்' (vacuum) உருவாகும். இதனால் சேர்கள் ஒரே மாதிரி ஒட்டிக் கொண்டு, மேலே உள்ள சேரை பிரிப்பது கடினமாகிறது. ஆனால், நடுவில் உள்ள இந்த சிறிய துளி வாயிலாக காற்று வெளியேற வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் வெற்றிடம் உருவாகாமல் தடுக்கும். இதனால், சேர்களை எளிதாக பிரித்து எடுக்க முடிகிறது.
2. உற்பத்தி செயல்முறையில் முக்கிய பங்கு
பிளாஸ்டிக் சேர்கள், உருகிய பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும். இந்த பிளாஸ்டிக், "மோல்டு" (Mould) எனப்படும் வார்ப்பில் ஊற்றப்பட்டு வடிவமைக்கப்படுகிறது. அந்த நேரத்தில், நாற்காலியை வார்ப்பிலிருந்து எளிதாக அகற்ற இந்தத் துளி உதவுகிறது. இல்லையெனில், மோல்ட்டில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக, அதனால் சேரின் தரத்திலும் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இந்தத் துளி, சேரை பாதுகாக்கும், மற்றும் தயாரிப்பு செயல்முறையை விரைவுபடுத்தும் வேலை செய்யிறது.
3. உற்பத்திச் செலவைக் குறைக்கும்
ஒரு நாற்காலியில் இருக்கும் அந்தத் துளி, அதன் ஒட்டுமொத்த எடையைக் குறைக்கிறது. எடை குறையும்போது, அதற்குத் தேவைப்படும் பிளாஸ்டிக் அளவையும் குறைக்க முடிகிறது. ஒரு சேருக்கு மிகச் சிறிய மாறுபாடு போல தோன்றினாலும், லட்சக்கணக்கான சேர்கள் தயாரிக்கப்படுவதால் இந்த சிறிய மாற்றம் கூட பெரிய செலவுக் குறைப்பாக மாறுகிறது.
4. காற்றோட்டம் மற்றும் வசதிக்காக
இந்தத் துளி நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபருக்கு சிறந்த காற்றோட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக வெயிலுக்காலங்களில் உடலின் பின்புறத்தில் வியர்வை ஏற்படாமல் தடுக்கிறது. இது அமர்வதில் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கும்.
மேலும், ஒருவேளை நாற்காலியில் தண்ணீர் சிந்தியிருப்பின், அந்தத் துளி வழியாக தண்ணீர் வெளியேறி, மேற்பரப்பில் தண்ணீர் தேங்காமல் தடுக்கும். இது நாற்காலியின் ஆயுளையும் நீட்டிக்கும்.
ஒரு துளையின் பல பயன்கள்!
ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் உள்ள அந்த சின்ன துளி, முதலில் பார்த்தால் சாதாரணமாகவே தெரிந்தாலும், அதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தையும், பொருளாதார நுணுக்கத்தையும் புரிந்துகொள்ளும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
அதனால், இனிமேல் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைப் பார்த்தவுடன், அதன் நடுவில் இருக்கும் அந்த சிறிய துளியை வெறும் டிசைன் அல்ல, மிக முக்கியமான ஒரு பாவனை சார்ந்த அம்சம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.