இந்தியா முழுவதும் சமீபக் காலமாகவே ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் மட்டுமே இந்த வகை உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது பெற்றோர்கள் மற்றும் முதியோர்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.
பொதுவாகவே நாம் அன்றாடம் பசிக்கு ஆரோக்கியமாக வீட்டு உணவை உட்கொள்வோம். அதைத் தவிர பிற நேரங்களில், கடைகளில் இருந்து வாங்கிச் சாப்பிடும் அனைத்து ஜங்க் ஃபுட் என்று கூறப்படும். இதில், சிப்ஸ், பர்கர், பிஸா, கேக், சாட் என்று பலவகை உண்டு.
இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால் வரும் பின் விளைவுகள் குறித்து நிறைய நாம் பார்த்திருப்போம், படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். உதாரணத்திற்கு இந்த உணவின் அருந்தும் அளவு அதிகமாக இருந்தால் வயிற்று பிரச்சனை, கேஸ் பிரச்சனை, கிட்னி கோளாறு, உடல் எடை கூடுவது, சரும பிரச்சனை என பல்வேறு பின் விளைவுகள் வரக்கூடும். ஆனால் ஒரு மனிதனுக்கு முக்கியமான தூக்கத்திற்கும் ஜங்க் ஃபுட்டிற்கும் என்ன சம்மந்தம்? ஏன் குறிப்பாக இரவு நேரங்களில் நொறுக்கு தீனி சாப்பிடக்கூடாது?
சமீபத்தில் 3 ஆயிரம் பேரை வைத்து ஆய்வு ஒன்று நடத்தியதில், சுமார் 60% பேர் இரவு நேரங்களில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதாக ஒப்புக்கொண்டனர். அதில் பெரும்பாலானோருக்கு இரவு தூங்குவதில் சிரமம் ஏற்படும் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
ஜங்க் ஃபுட் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு விரைவில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது என்பது நம்மில் பலரும் அறிந்தது. ஆனால் தற்போதைய ஆய்வில், ஒரு மனிதனின் தூக்கத்தையும் ஜங்க் ஃபுட் கெடுத்துவிடும் என்ற அதிர்ச்சி ரிபோர்ட் வந்துள்ளது.
இந்த உணவுகளில் சர்க்கரையில் கலவை ஏதோ ஒரு விதத்தில் அடங்கி இருக்கும். இந்த உணவைச் சாப்பிட்டால் அதற்கு ஏற்ற உடல் பயிற்சி தேவை. ஆனால் இரவு நேரத்தில் நாம் உறங்கி விடுவதால் உடல் பயிற்சி எதுவும் இருக்காது. அந்தச் சமயத்தில், உடலில் எடை கூடுவதற்கான வேலைகள் உடலின் உள்ளே நடைபெறும். இது சர்க்கரை நோயாகப் பின் நாட்களில் மாறும்.
இரவில் சாப்பிடும் நொறுக்கு தீனியினால், இந்த விளைவுகள் ஏற்படும்போது சிலருக்கு தூங்குவதில் கடினம் உண்டாகும். இதனை ஒபீஸிட்டி அல்லது சர்க்கரை நோய்க்கான அறிகுறி என்று கூறுகின்றனர். எனவே அனைவரும், குறிப்பாகச் சிறிய குழந்தைகளும் பெரியவர்களும் இரவில் ஜங்க் ஃபுட் சாப்பிடாமல் இருப்பதே நோயற்ற வாழ்விற்கான வழி என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.