ஆர்.சி. சம்பத்.
தசரா! மைசூர் நகரில் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் அகில இந்தியப் புகழ் பெற்ற பண்டிகைத் திருவிழா!
நம்மூரில் தீபாவளி, கேரளாவில் ஓணம், வடக்கே ஹோலி என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பண்டிகைகள் இருந்தாலும், இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். ஆயினும் அடிப்படை அம்மன் வழிபாடு!
இந்தியாவில் பல மதங்கள் இருப்பினும், பெண் தெய்வங்களை வழிபடுவோர் இந்துக்கள் மாத்திரமே! ஆண் கடவுளர்களான பிள்ளையார், முருகன், பெருமாள் போன்றோருக்குப் பயப்படாத பக்தர்கள், மகமாயி, காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களை ’ பய’ பக்தியுடன் வழிபடுவது, ஒரு வினோதம்!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தான மக்களிடையே ‘அம்மன் காசு’ என்றொரு சின்ன்ஞ்சிறு நாணயம், சிறிய நெற்றிப் பொட்டு அளவில் புழக்கத்தில் இருந்த்து. தசரா பண்டிகை நடக்கும் பத்து நாட்களும் இந்தக் காசுகள் சமஸ்தானத்தில் ஏழைகளுக்குத் தானமாக அழங்கப்படுவதற்காகவே அச்சிடப்பட்டன. நாணயத்தின் ஒரு பக்கம் அம்மன் திருவுரு பொறிக்கப்பட்டிருக்கும். அதனால், அம்மன் காசு என்று பெயர். எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், ஒரு காலத்தில் தசரா பண்டிகை தமிழ் நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தரசா விழாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
தசம் என்றால் பத்து. பத்து ராத்திரி என்னும் பொருளில் தசரா எனப்பட்டது. மைசூர் பகுதியிலும்
கொல்கத்தாவிலும் இந்த பத்து நாட்களும் விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். அம்மன், பூஜை, ஊர்வலம் என ஒவ்வொரு நாள் இரவெல்லாம் கொண்டாட்டம்; விடிந்த பிறகு படுத்துறங்கி, மதியம் வரை தூங்குவர்.
மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பண்டிகை நடக்கும் ஒவ்வொரு நாள்
மாலையிலும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து வட்டமாக சற்றிச் சுற்றி ஆடுவர். கூடவே இசை வாத்தியங்களின் முழக்கம். இப்படி ஆடிக்கொண்டே ஒவ்வொரு குழுவினரும் நான்கைந்து தெருக்களை சுற்றி வருவர். ஆட்டம்பாட்டம் முடிய நள்ளிரவு தாண்டிவிடும். துர்க்கை மகிசா சூரனை அழித்தொழித்த நாளே விஜயதசமி என்பது, வடக்கே உள்ள ஐதிகம். பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர்.
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ‘ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி.
இவ்வருடம் செப்டம்பர் 21ம் தேதி வியாழனன்று (இன்று) நவராத்திரி தொடங்கி, செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை.மறுநாள் 3௦ம் தேதி விஜயதசமி.
நவராத்திரிக்கு முதல் நாள், அதாவது அமாவாசை தினத்தன்றே பூஜைக்கு வேண்டியதை சேகரிக்க வேண்டும். அன்றே பூஜையரையைக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மறுநாள் பிரதமை அன்று, அதிகாலையில் நீராடி, பூஜையறையில் அம்பாளின் திருவுருவம் அல்லது உருவப் படத்தை வைத்து மலர்களால் அர்ச்சித்து,
பூஜை செய்ய வேண்டும். தங்கள் இல்லத்திகு அம்பாளின் திருவருள் பூரணமாகக்கிட்ட மனமாரப் பிரார்த்திக்க வேண்டும்.