வாழ்வியல் சிந்தனைகள்; பொய் நல்லது!

குழந்தை முதன் முதலாகப் பொய் சொல்ல ஆரம்பித்தால், அதுவும் நம்புகிறாற்போலச் சிரிக்காமல் சொன்னால், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று குழந்தை நம்மிடம் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்

டி.ஐ. ரவிந்திரன்

அமரர் கல்கியின் நாவலான, பொன்னியின் செல்வனில், வந்தியத் தேவனும் ஆழ்வார்க்கடியானுகும் இடையில் வரும் உரையாடல். ‘உன்னைப் போல வாய் கூசாமல் தொடர்ந்து பொய் சொலபவனை நான் பார்த்ததேயில்லை’ அதற்கு வந்தியத் தேவன், ‘இதெல்லாம் கவி மனம் உள்ளவர்க்கு சாதாரணம். உன்னைப் போல பாமரர்கள் அதை பொய் என்று சொல்வார்கள்’.

‘என் பையன் வாயத் தொறந்தா பொய்யா சொல்றான், அதுவும் நம்பறா மாதிரி. உதைச்சிதான் சரி செய்யணும்’ என்று கறுவும் தந்தையா நீங்கள்? ஆய்வாளர்களின் கணக்குப்படி ஒவ்வொருவரும் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டிற்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்கிறார்களாம்.

உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர்

தார்மிக அடிப்படையில் பார்த்தால் பொய் என்பது தவறுதான். உண்மை என்பது மிக உயர்ந்த மதிப்பீடு என்பதிலும் ஐயமில்லை. உண்மையையே பேச வேண்டுமென்றால் அதற்கு மிகுந்த ஆன்ம பலம் வேண்டும். “அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்” என்று வள்லுவர் சொல்வது முக்காலும் உண்மை. எப்போதும் உண்மை பேசுபவர்கள் சங்கடங்களுக்கு மட்டுமின்றித் தியாகங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். மகாத்மா என்னும் பெயர் நமக்குக் கிடைக்கலாம். ஆனால், அதற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகம்.
தவிர, நாம் உண்மை சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் எல்லாச் சமயங்களிலும் இருக்காது. ஒருவர் தான் அணிந்திருக்கும் சட்டை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். நன்றாக இல்லை என்று உண்மையைச் சொன்னால் அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் நாம் சில சமயம் பொய் சொல்கிறோம். இப்படிச் சின்ன விஷயத்திலிருந்து கடன், வேலை, உறவுகள் எனப் பல விஷயங்களிலும் பொய் நம்மைக் காப்பாற்றுகிறது. பொய் இல்லாவிட்டால் பணம், உறவுகள், வேலை எனப் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும்.

பார்க்கப்போனால் பொய் சொல்வது என்பதில் நமது தவறு என்று அதிகமில்லை. சூழல் ஒருபுறம் இருக்க, இது புதிடும் இல்லை. எல்லாம் முன்னோர்கள் காட்டிய வழிதான். மொழியின் மூலமாகத் தொடர்புகொள்ளத் துவங்கியதும், பொய் சொல்லக் கற்றுக்கொண்டார்கள். இப்படிப் பொய் சொல்லி மற்றவர்களை நம்பவைப்பதால், சண்டை, சச்சரவு, வன்முறை ஆகியன குறைந்து, விரும்பியதை அடைய முடிந்ததாம்.
ஆதிகாலத்திலிருந்தே, பொய்களைச் சொல்லி அதிகாரத்தைக் கைப்பற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. இன்ரைய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் கொஞ்சம் நினைவுபடுத்திப்பாருங்கள்.

மூளைக்கு அதிக வேலை

பொய் சொல்வது, அதாவது நம்பும்படி பொய் சொல்வது, மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு விஷயம். யாரிடம் பொய் சொல்கிறோமோ அவரைப் பற்றிய புரிதல், அவரது நோக்கத்தைத் தெரிந்துகொள்ளுதல், எப்படிச் சொன்னால் நம்புவார்கள், போன்றவற்றில் ஆரம்பித்துப் பல விஷயங்களில் திறமை பெற்றிருக்க வேண்டும். ‘அதெல்லாம் ஒரு கலையப்பா’ என்று சொன்னால் அது சரிதானோ என்று நம்பத் தோன்றுகிறது இல்லையா?
உங்களது குழந்தை முதன் முதலாகப் பொய் சொல்ல ஆரம்பித்தால், அதுவும் நம்புகிறாற்போலச் சிரிக்காமல் சொன்னால், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று குழந்தை நம்மிடம் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம். 2 வயது நிரம்பிய குழந்தைகளில் 30 சதவீதம் குழந்தைகள் பொய் சொல்கிறார்களாம். அது மட்டுமின்றி இவ்வாறு தானாகப் பொய் சொல்லாத, பொய் சொல்லத் தெரியாத குழந்தைகளைவிட, பொய் சொல்லப்போறேன்’ என்ற முடிவோடு சொல்லும் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி அதிகமாம். ஏனென்றால் பொய்சொல்ல மூளை அதிகமாக வேலைசெய்தாக வேண்டும். படைப்புத் திறன் என்று சொல்வதெல்லாம் அடிப்படையில் இல்லாததை உருவாக்குவதுதானே!

3 வயதாகும்போது, 50% குழந்தைகள் பொய் சொல்கின்றனவாம். 8 வயதாகும்போதுதான் இதன் உச்சமாக, 80% குழந்தைகள் பொய் சொல்கின்றன என்று ஆராய்ந்து தெரிவித்திருக்கிறார்கள்.

வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பொய் சொல்வது கடினமான காரியமாம். பொய் சொல்வது பெரிய வேலை. மனமும், மூளையும் ஓவர்டைம் செய்ய வேண்டும். அப்போதுதான் மாட்டிக்கொள்ளாமல் பொய் சொல்லி நம்பவைக்க முடியும்.
தீங்கற்ற பொய்களும் நடைமுறை வாழ்க்கையை ஒழுங்காக நடத்திச் செல்லப் பயன்படும் பொய்களும் பொது நன்மை கருதிச் சொல்லப்படும் பொய்களும் தவிர்க்க இயலாதவை. ஆனால், பேராசை காரணமாகவும் பொறாமையாலும் சொல்லப்படும் பொய்கள் இந்தக் கணக்கில் வராது. அதாவது, தெரிந்தே கெட்ட நோக்கத்துக்காகச் சொல்லப்படும் பொய்கள்தாம் ஒதுக்கப்பட வேடியவை. மற்ற பொய்களுக்கு நம் வாழ்வில் இடம் இருக்கத்தான் செய்கிறது.

நமது நாட்டில் பின்தங்கிய மாநிலங்களில் முதன்மையான மாநிலத்தை பல வருடங்கள் முதல்வராக இருந்த ஒருவர், ஆரம்பத்தில் அரசாங்கக் கடைநிலை ஊழியர்களின் குடியிருப்பில் வாழ்க்கையை நடத்தியவர். அவர் அரசியலுக்கு வந்தார். 37 வருடங்களில் அவரது சொத்தின் மதிப்பு ரூ. 20,000 கோடி. பொய் இல்லாமல் இந்த அளவுக்குச் சம்பாதிக்க முடியுமா?

குழந்தையின் பொய்யும், பிறரைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் பொய்யும் உறவைக் காப்பாற்றிக்கொள்வதற்காகச் சொல்லப்படும் பொய்யும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதியின் பொய்யும் ஒன்றா?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close