ஏன் தேவைப்படுகிறார் ராமானுஜர்?

அதனால் வேதனையடைந்த ராமானுஜரோ, தனது மனைவியை அவரது தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு துறவறம் பூண்டார்...

சந்திரன்

ஆன்மிக வழியில் சமுதாய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவரும், விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தைத் தந்தவருமான ஸ்ரீ ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் 2017, மே 1ஆம் தேதி திங்கட்கிழமை உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

கடந்த ஓராண்டு காலமாகவே அதற்காக தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் உள்ள வைணவத் தலங்களிலும் ஆன்மிக அமைப்புகளும் கொண்டாட்டங்களை முன்னெடுத்தன. திருக்கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருபெரும்புதூரிலும் திருவரங்கத்திலும் உற்சவங்கள் நடைபெற்றன. தமிழக அரசு சார்பிலும் விழாக்கள் நடைபெற்றன.

வெறும் வைணவ சமயம் சார்ந்த விழாவாக மட்டும் ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு விழா நடக்கவில்லை. மாறாக, எதிரெதிர் கொள்கைகளைப் பேசுபவர்களும் கூட ராமானுஜருக்கு விழா எடுத்தார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஓராண்டுக்கு முன்னதாகவே நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. வைணவ பெரியவர்களைத் தொடர்பு கொள்ளுதல், தலித் பகுதிகளில் துறவிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருபெரும்புதூரில் கருத்தரங்கம் நடத்தி, “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது தான் ராமானுஜருக்கு செய்யும் சேவை” என்றது. கடவுள் நம்பிக்கைக்கும், பிராமணர்களுக்கும் எதிரான திராவிட இயக்கமும் கூட ராமானுஜரைக் கொண்டாடத் தவறவில்லை. கருணாநிதியின் வசனத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பானது. அண்மையில் நடந்த தி.மு.க. செய்ற்குழுவில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமானுஜருக்கு மணி மண்டபம் கட்டப்படும்” என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அனைத்துத் தரப்பினரையும் ஒரே குரலில் ஈர்க்கும் அளவுக்கு ராமானுஜர் செய்த சேவைதான் என்ன?

அத்தனைக்கும் ராமானுஜரின் வைணவ தத்துவங்கள் இன்றளவும் விமர்சிக்கப்படுகின்றன. “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மதமாற்றத்தில் ஈடுபட்டவர் ராமானுஜர்” என்ற குற்றச்சாட்டை சைவர்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அத்வைதிகளுக்கும், ராமானுஜரைப் பின்பற்றும் விசிஷ்டாத்வைதிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவுகின்றன. வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மகான் என்றாலும், அவரது விசிஷ்டாத்வைதத்தை தயக்கத்துடன் பார்க்கும் வைணவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி ராமானுஜரை அனைவரும் தூக்கிப் பிடிக்க காரணம் என்ன?

அவரது வழிபாடு ஒரு சார்பாகவே இருந்தாலும், அவரது பணிகள் எல்லோருக்குமானதாக இருந்தது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரையும் ‘நாராயணன் வழிபாடு’ என்ற ஒற்றை குடையில் இணைத்தவர் அவர். தன்னை எதிர்த்தவர்களையும் கூட அரவணைத்து, ஒருமைப்பாட்டைப் பேசினார். அதன் பிறகே, பாரதம் முழுவதிலும் பக்தி இயக்கம் பரவியது. தென்னாட்டில் ராமானுஜர் விதைத்த விதையை, மீரா, கபீர்தாசர் போன்றவர்கள் வடநாட்டில் முன்னெடுத்தார்கள். இறைவனின் முன்னால் யாருக்கும் பேதமில்லை என்று முழங்கினார்கள்.

ராமானுஜருக்கு முன்னதாகவே ஆதிசங்கரரும், சிவயோகிகளும் பேதமற்ற வழிபாட்டு முறையைப் பேசியவர்கள்தான். ஆனால், பிற்காலத்தில் அவற்றிலும் கறை படிந்தது. மீண்டும், மீண்டும் வழிபாடுகள் குறுகிய வலைக்குள் அடைப்பட்டுக் கொண்டன. அந்த நேரத்தில்தான் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை அறிமுகப்படுத்தினார். முந்தைய சீர்திருத்தவாதிகளின் குறைகளைப் போக்கி, சமத்துவமான வழிபாட்டை வாழையடி வாழையாக தழைத்திட செய்தார்.

எந்த சீர்திருத்தவாதிகளுக்கும் முதல் எதிர்ப்பு அவர்களது வீடுகளில்தான் இருக்கும். ராமானுஜருக்கும் அப்படியே. அவரது சீர்திருத்த கருத்துக்களை மனைவி தஞ்சம்மாள் ஏற்கவில்லை. கணவரின் குருநாதரான திருமலை நம்பியை மனைவியால் ஏற்க முடியவில்லை. அதனால் வேதனையடைந்த ராமானுஜரோ, தனது மனைவியை அவரது தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு துறவறம் பூண்டார். அதன் பிறகு, வாழ்க்கை முழுவதும் தனது சீர்திருத்த கருத்துக்களை செயல்படுத்தி, வெற்றியும் கண்டர்.

பலமுறை கேட்டுக் கொண்ட பிறகே, “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை திருகோஷ்டியூர் நம்பி ராமானுஜருக்கு உபதேசித்தார். மற்றவர்களுக்கு சொன்னால், தலை சுக்குநூறாகிவிடும் என்று எச்சரிக்கத் தவறவில்லை.

அத்தகைய மந்திரத்தை கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, ராமானுஜர் அனைத்து மக்களுக்கும் பரப்பினார். தான் அழிந்தாலும் பரவாயில்லை; தான் கொண்ட லட்சியம் பரவ வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அவருக்குள் இருந்தது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்பதை உறுதி செய்தவர் ராமானுஜர். அவர்களை ‘திருக்குலத்தோர்’ என்று அழைத்தார். (காந்திஜி இந்தப் பெயரால் ஈர்க்கப்பட்டே ஹரிஜன் என்று கூறியதாக சொல்வோர் உண்டு) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருமலை நம்பியை குருவாக ஏற்றது மட்டுமல்ல, தனது சீடர்களாகவும் ஏராளமான தாழ்த்தப்பட்டோரை இணைத்துக் கொண்டார். அவர்களுக்கு ஆலயத்தில் நுழைய மட்டுமல்ல, வழிபாடு செய்யும் உரிமையையும் பெற்றுத் தந்தார். அது மட்டுமல்ல, சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதுதான் ராமானுஜர் வழி என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.

தனது குரு ஆளவந்தாரின் விருப்பத்தை ஏற்று, ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை எழுதினார்; பராசர முனிவர் எழுதிய விஷ்ணு புராணத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்; சாதி வேற்றுமையற்ற விசிஷ்டாத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இவையெல்லாம் ரானமானுஜரின் சமயம் சார்ந்த சாதனைகள்.

நிர்வாகத்திலும் சமூகம் சார்ந்த சீர்திருத்தங்களைப் புகுத்தியவர் ராமானுஜர். பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பை உறுதி செய்தார். அங்கு ஏற்றத்தாழ்வுகளை அனுமதிக்காதது, இன்றளவும் தொடருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்ற இடத்தில் ராமானுஜர் வெட்டிய ஏரி, இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இப்படி வாழ்க்கை முழுவதும் சீர்திருத்தங்களையும் புரட்சிகளையும் செய்ததன் காரணமாகவே, ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு எல்லோருக்குமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆயிரமாவது ஆண்டிலும் எதிரெதிர் துருவங்களை ஒரே புள்ளியில் இணைத்ததுதான் ராமானுஜர் ஆற்றிய பணிகளின் நீட்சி எனலாம்.

×Close
×Close