scorecardresearch

கனவில் கண்டவரையே கரம் பிடிப்பீர்களா?

தனக்கான வாழ்க்கைத்துணை எப்படியெல்லாம் அமையவேண்டும் என்பதை பற்றி கனவு காணாத மனிதர் எவரேனும் இருக்க முடியுமா? கனவு கண்டவரை கைப்பிடிக்க ஜோதிடம் சொல்வது என்ன?

கனவில் கண்டவரையே கரம் பிடிப்பீர்களா?

சரவணக்குமார்

தனக்கான வாழ்க்கைத்துணை எப்படியெல்லாம் அமையவேண்டும் என்பதை பற்றி கனவு காணாத மனிதர் எவரேனும் இருக்க முடியுமா? வாய்ப்பேயில்லை. தான் அழகோ, அழகில்லையோ, தன் துணை அழகாக இருக்க வேண்டும். இப்படி சிரிக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்பது போன்ற பல வேண்டும்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கவே செய்கிறன. ஆனாலும் காலம் செய்யும் கோலத்தில் பலரின் கனவுகளும் கனவாகவே போய்விடுகிறது.

மனம் போல மாங்கல்யம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிற வார்த்தை ஜாலங்களுக்கு வழிபோட்டுக் கொடுப்பதே கிரகங்கள் தான்.

இங்கே பனிரெண்டு ராசிக்காரர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையின் குணநலன்களை கூறியுள்ளேன். இது பொதுவான பலனே என்றாலும், இது முற்றிலும் பொய்த்துப்போக வாய்ப்பில்லை. சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, அவ்வீட்டில் இருக்கும் மற்றும் பார்க்கும் கிரகங்களை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

இதையே ராசியாக கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல், லக்கினமாக கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

மேஷம் :
உங்க வாழ்க்கைத்துணை அழகானவுங்க தான். இதுல சந்தேகமே வேண்டாம். ரொம்ப நேர்த்தியா உடை உடுத்துவாங்க. அலங்காரத்தில் அதிகமாகவே நாட்டம் இருக்கும். மத்தவுங்களை கவர்ந்து இழுக்கிற காந்தக்கண்ணுக்கு சொந்தக்காரராக இருப்பாங்க. நடை, உடை, பாவனையால் பார்க்கிறவுங்களை கட்டிப்போடுவாங்க. இசை, பாட்டு, சினிமான்னு ஆர்வம் கொண்டவுங்க. ஏதாவது ஒரு கலைத்திறமையை கையில் வச்சிருப்பாங்க. இயற்கையை ரொம்பவும் ரசிக்கும் தன்மை இருக்கும். அவுங்களை பொருத்தவரைக்கும் வீடு ரொம்ப சுத்தமாகவும், அவுங்களை மாதிரியே அழகாகவும் இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. உங்ககிட்டே ஒரு சின்ன ஆறுதல் வார்த்தை கிடைக்காதான்னு எதிர்பார்ப்பாங்க. ஆனால் ஏமாற்றமே அவுங்களுக்கு பரிசாக கிடைக்கும்.

ரிஷபம் :
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்னு பெரியவுங்க சொல்லுவாங்க. உங்க வாழ்க்கைத்துணைக்கு இது ரொம்பவே பொருந்தும். ஆனாலும் குணத்தைவிட கோபம் அதிகமாகவே இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க. டென்ஷன்ல எதையாவது செஞ்சிட்டு பின்னாடி வருத்தப்படுவாங்க. அவுங்க எடுக்கிற எந்த முடிவும் மாறுதலுக்கு உட்பட்டதே. காரணம், நிலையான மனசு இருக்காது. யாராவது கெடுதல் பண்ணினால், பொறுத்திருந்து அவுங்க பொழைப்பை கெடுத்திடுவாங்க. இந்த பழிவாங்குற குணம், உங்க துணையின் ரத்தத்தில் கலந்த விஷயம். முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும், அப்புறம் பழகிடும் என்பதுபோல், தொட்டதெற்கெல்லாம் பொரிந்து தள்ளும் அவருடைய குணம் ஒரு கட்டத்தில் உங்களுக்கு பழக்கமாயிடும்.

மிதுனம் :
கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் உங்க வாழ்க்கைத்துணை. சதா கோவில், குளம்ன்னு போகும் நபராக இருப்பார். சாந்தமானவராக இருந்தாலும், கொஞ்சம் கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அந்த கோபத்திலும் நாகரீக வார்த்தைகள் மட்டுமே வந்து விழுகும். நேர்மை எந்த கடையில் கிடைக்கும்? அப்படின்னு கேட்கிற இந்த காலத்திலும், அதை கடைபிடிக்கிற நபராக உங்களவர் இருப்பார். எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என கவுண்டமணி ஸ்டைலில் சொல்லாமல், தன் உள்மனதிலிருந்து சொல்லுவார். குடும்பத்தின் மீது ரொம்பவும் ஈடுபாடு இருக்கும். பொதுவாக சமுதாயத்துக்கு கட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவார்.

கடகம் :
சும்மாவே ஆடுறவுங்க காலில் ஒரு சலங்கையைவேற கட்டிவிட்டால் என்ன ஆகும்? இந்த கதை தாங்க உங்களோடது. எந்த விஷயத்தில் குற்றம் குறை கண்டுபிடிக்கிறதுன்னு பூதக்கண்ணாடி வச்சிக்கிட்டு அலையிறவுங்க உங்க வாழ்க்கைத்துணை. தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா அவ்வளவுதான். அவுங்க ஆடுற ஆட்டத்தில், அக்கம்பக்கத்தில் உள்ளவுங்க எல்லாம் உங்க வீட்டில் குவிஞ்சுடுவாங்க. நீங்க கிழக்கே போனால், அவுங்க போகிற ரூட் மேற்கு. வெளியில பந்தாவா வலம் வரும் நீங்க, வீட்டுக்குள்ளே வந்தால், அடிச்சுப்போட்ட அட்டைப்பூச்சி மாதிரி மூலையிலே கிடக்க வேண்டியது தான். உங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் எப்பவும் இருக்கும்.

சிம்மம் :

ரொம்ப சந்தேகப்படுகிற டைப் உங்க வாழ்க்கைத்துணை. கொஞ்சம் லேட் ஆனாலும் போலீஸ் மாதிரி தோண்டி துருவீருவாங்க. உங்க கம்பீரமெல்லாம் கதவுக்கு அந்தப்பக்கம் மட்டுமே செல்லும், இந்தப்பக்கம் எடுபடவே எடுபடாது. அவுங்களும் உங்களுக்கு சளைச்சவுங்க இல்லை. உங்க அடி உதைக்கெல்லாம் அடங்காமல், ஊரை கூட்டிடுவாங்க. பேசாமல் பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கலாமோன்னு நீங்க அடிக்கடி நினைக்கிறது உண்டு. உங்க நண்பர்கள் வீட்டில், அவுங்க துணைவருக்கு கிடைக்கிற மரியாதையை பார்த்து நீங்க ரொம்பவும் ஏங்கிப் போவீங்க. எப்பொழுதும், வீட்டுக்கு போகிற நேரத்தை முடிஞ்சவரை தள்ளிப்போடவே பார்ப்பீங்க.

கன்னி :

கொடுத்துவச்சவுங்க நீங்க. உங்க வாழ்க்கைத்துணை உள்ளங்கையில் வச்சி தாங்குற மாதிரி அமைவாங்க. ரொம்ப அமைதியான குணம், சாந்தமான முகம். ரோட்டில் சண்டை நடந்தால்கூட, நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிப்போகிற டைப். கைகட்டி நிற்கிற உத்தியோகமோ இல்லை கால்மேல கால் போட்டு கட்டளை போடுகிற முதலாளியோ, எதுவாக இருந்தாலும் பார்க்கிற வேலையில் நேர்மை இருக்கும். அடுத்தவுங்களோட அஞ்சு பைசாவுக்குகூட ஆசைப்படாத நல்ல குணம் கொண்டவர் உங்களவர். கடவுள் பக்தியும் அதிகமாகவே இருக்கும். ஏதோ ஒரு மகான் இடத்தில் ரொம்ப பற்றுள்ளவுங்களாக இருப்பாங்க.

துலாம் :
உங்க வாழ்க்கைத்துணை கொஞ்சம் ரஃப் அண்ட் டஃப் ரகம். ஓயாத உழைப்பு கொண்டவராக இருப்பார். சுறுசுறுப்பும் வேகமும் இவருக்கு இரண்டு கண்கள் மாதிரி. முன்கோபம் அதிகமாக வரும். அந்த கோபத்தினால், எடுத்தோம் கவுத்தோம்னு ஏதாவது செஞ்சிட்டு வந்து நிற்ப்பார். குடும்பத்தில் ரொம்பவும் அக்கறை கொண்டவராக இருப்பார். ஆனால் எதையும் வெளியில் காட்டாத சுபாவம். என்னதான் இருந்தாலும் உங்க டேஸ்டும் அவர் டேஸ்டும் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கவே செய்யும். நீங்க எதிர்பார்க்கிற நளினம், காதல் இதெல்லாம் அவர்கிட்டே நோ.. நோ.

விருச்சிகம் :
அன்பானவர், அழகானவர், அசராதவர் என்கிற டைப் உங்களவர். கற்பனை வளமும், கலைத்திறமையும் உள்ளவர்களாக இருப்பாங்க. எதிலும் ஒரு நிதானம் இருக்கும். வீட்டை ரொம்பவும் சுத்தமாக வச்சிப்பாங்க. தேடித்தேடி கலைப்பொருட்கள் வாங்கிட்டுவந்து வீட்டில் வச்சி அழகு படுத்துவாங்க. அலங்காரப்பொருட்களுக்கும், துணிமணிகளுக்கும் குறைச்சலே இருக்காது. கல்யாணம், காட்சின்னு போகணும்னா, ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே அவுங்க தன்னோட மேக்கப்பை ஆரம்பிச்சாத்தான் சரியாக இருக்கும். இல்லைனா ஃபங்க்ஷன் முடிஞ்சுதான் போகவேண்டியது வரும்.

தனுசு :
உங்களோட வாழ்க்கைத்துணை ரொம்ப புத்தகப்பிரியாராக இருப்பாங்க. சதா ஏதாவது படிச்சுக்கிட்டே இருக்கிறது அவுங்க குணம். சிலர் சாப்பிடும்போதும் புக்கும் கையுமாக இருப்பாங்க. ரொம்ப அமைதி ததும்பும் குணம் கொண்டவுங்க. ரொம்ப பொறுமைசாலியும் கூட. நீங்க சத்தம்போட்டாலும் அவர் அமைதியாக போய்விடுவார். உங்கள் மேல் ரொம்ப அன்பு ஜாஸ்தியாக இருக்கும். தன்மானத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பாரு. கையில் காசு இல்லை என்றாலும், மத்தவுங்ககிட்டே கை நீட்டுகிற ரகம் இல்லை. உங்களை நல்ல நண்பராக நடத்துவார். உங்களிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.

மகரம் :
கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியார் என எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் உங்களவர் இருப்பார். கற்பனை அவரோடு உடன் பிறந்த ஒன்றாக காணப்படும். ரொம்பவும் பொறுமைசாலி. அவர் சிரிப்பிற்காக உங்க சொத்து முழுவதும் எழுதி வச்சிடலாம், அவ்வளவு அழகான கன்னக்குழி சிரிப்புக்கு சொந்தக்காரராக இருப்பார். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து அவருக்கு இருக்கும். பேச்சில் கிண்டலும் கேலியும் கலந்து ஓடும். குடும்ப நலனில் அக்கறை தூக்கலாகவே அவரிடம் காணப்படும். வெயிலை திட்டுவாரு, மழையை ரசிப்பாரு. சில்லுன்னு இருக்க பொருட்களை ரொம்பவே விரும்புவார்.

கும்பம் :
கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருக்கணும்னு நினைக்கிற ரகம் உங்கள் வாழ்க்கைத்துணை. எங்கே இருந்தாலும் அவர்தான் முன்னாடி நிற்கணும், அவருக்குத்தான் முதல் மரியாதை தரப்படணும்னு எதிர்பார்ப்பாரு. ஆணவம், அகங்காரமெல்லாம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கரெக்ட்டாக இருப்பார். ஆனால் பெரிய அளவில் ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் பழக்கம் இருக்காது. கடவுள் பக்தி அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் கவுரவம், அந்தஸ்து பார்க்க தவறாதவர்.

மீனம் :
உங்களவர் நிதானமும், பொறுமையும் கொண்டவராக இருப்பார். உலக விஷயங்களில் நிறைய அறிவு பெற்றிருப்பார். பெரிய படிப்பாளியாகவும் இருப்பார். தனக்கு சரிசமமாகவே உங்களை நடத்துவார். தன்னுடைய இயலாமையை எப்பொழுதும் ஒப்புக்கொள்ளும் குணம் இருக்காது. கொஞ்சம் சோம்பல் தன்மை காணப்படும். அதிர்ஷ்டத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கும். அனைத்திற்கும், விதி விட்ட வழி என்கிற ரீதியில் பேசுவார். மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் குணம் அறவே இருக்காது. கொஞ்சம் பயந்த சுபாவம் கலந்தே காணப்படுவார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Will you catch a glimpse of the dream