பெண்கள் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளிக்கப்படாமல், சி-பிரிவு எனப்படும் சிசேரியன் மூலம் பிரசவிக்க உந்தப்படுவதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பல நாடுகளில் இவ்வாறு பெண்கள் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள தள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், மருத்துவமனைகள் இவ்வாறு சிசேரியன் முறைக்கு பெண்களை தள்ளுவதாக தெரிவித்துள்ளது.
சிசேரியன் பிரசவங்களும், ஆக்ஸிடோசின் எனப்படும் மருந்தைக் கொடுத்து பிரசவத்தை வேகப்படுத்தும் சம்பவங்களும் பல நாடுகளில் அதிகரித்துவிட்டதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
சிசேரியன் பிரசவங்கள் தேவையானதுதான், ஆனால், அது ஒரு நாட்டில் 15 சதவீதத்தை விட அதிகரிக்கக்கூடாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்கள் உடல் பருமன், ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பலருக்கு சிசேரியனுக்கு பின்னால் ஏற்படக்கூடிய கர்ப்பத்தில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.