கோடையின் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு குட்டியுடன் வெளியேறிய தாய் யானை ஒன்று திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து தாய் யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை துரியன் சுயம்பு என்ற 2 யானை கொண்டு வரப்பட்டு இரண்டு யானைகள் உதவியுடன் வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கும்கி யானைகள் அங்கு இருப்பதை தொடர்ந்து பிரிந்து சென்ற குட்டி யானை அப்பகுதிக்கு மீண்டும் வரவில்லை என்றும், அதனை வனத்துறை குழுவினர் தேடி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வனத் துறையினர் தகவல் தெரிவித்து இருந்தனர்.
கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை வனசரகர் திருமூர்த்தி தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை கண்காணித்து வந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நிலை குறைவால் மயங்கி விழுந்தது.
மயங்கி விழுந்த தாய் யானை உடலில் சிறிது நேரத்திற்கு பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது ? எழுப்பி விட வேண்டும் என்று தவிப்புடன் தனது சிறிய தும்பிக்கையால் தாயின் உடலை தட்டி எழுப்ப முயற்சித்தது.
யானையின் நிலைமை மோசம் அடையவே, வனத் துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் படி கால்நடை மருத்துவ குழுவினரும் கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை முதல் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் படுத்து கிடந்த பெண் யானையை நிற்க வைக்க சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை துரியன் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டுள்ளப்பட்டு வந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு, சிரமம் ஏற்படும் என்பதற்காக சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை வர வழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் ஈடுபடுத்தி இருந்தனர். மேலும் அந்தப் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது யானை உயிரிழந்து உள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் வன கால்நடை அலுவலர் மருத்துவர் சுகுமார், மருத்துவர் சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று காலை முதல் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் ஊட்டச்சத்து மருந்துகள், கும்கி யானைகளுக்கு கொடுக்கின்ற உணவுகளை அந்த பாதிக்கப்பட்ட யானையும் உண்பதாக வனத் துறையினர் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும், இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு யானையின் நிலை குறித்து கூற முடியும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். வனத்துறை குழுவினர் தாய் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து, அதன் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், துரதிஷ்டவசமாக, கால்நடை மருத்துவக் குழுவினர் சிறந்த சிகிச்சை அளித்த போதிலும், தாய் யானை தனது நோயின் தீவிரத்தால் உயிரிழந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்ததும், யானையின் உடல்நலம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.