Advertisment

உமையவளே எங்கள் மலைமகளே...

பெண் தெய்வ வழிபாடு எங்கிருந்து தொடங்கியது. அது வெளிநாடுகளுக்கு எப்படி பரவியது. அதற்கான ஆதாரங்களுடன் அலசுகிறது இந்த கட்டுரை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maha-Lakshmi-Maha-Saraswati-Maha-Parvathi-Devi

சரவணக்குமார்

Advertisment

பெண் தெய்வ வழிபாடு இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கியதில்லை. கற்காலத்திலிருந்தே நம் கரம் பிடித்து வந்தது. இது நம் நாட்டிற்கு மட்டும் சொந்தமானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை. உலகில் பரந்துபட்டு காணப்படுவதாகவே கருதுகின்றனர்.

ஆதிகாலத்து மனிதன் ஆரம்பித்து வைத்தது கொற்றவை வழிபாடு. இந்த ஆரம்ப புள்ளியை மையப்படுத்தியே, பின்னாட்களில் பல பெண் தெய்வ வழிபாடு தோன்றியதாக அறியமுடிகிறது.

தொல்பொருள் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷல், ‘பெண் தெய்வ வழிபாட்டினை சிந்து சமவெளி மக்களிடம் பார்க்க முடிந்ததாகவும், காலத்தால் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், இது இந்தியாவில் தொடங்கியதாகவும்’ கூறுகிறார்.

சிந்து சமவெளியில் இருந்ததைப் போலவே சிற்றாசியா, எகிப்து, கிரீஸ், சைப்ரஸ், எலம், மெசபடோமியா, பொனிசீயா, துருக்கி போன்றவற்றிலும் பெண் தெய்வம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் வாகனம் சிங்கம். இவளது கணவனின் வாகனம் காளை என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இப்பொழுது, படம் பிடித்து காட்டியதைப்போல பளிச்சென விளங்கியிருக்குமே!

ஆம்...

உமையவள் தான் அவள்.

இவளுக்கு பல பெயர்கள் இருந்தாலும் இதில் ‘உமா’ என்கிற பெயரே மிகப்பழமையானது என்கிறார்கள்.

‘உ’ என்றால் சிவன் என்பதும், ‘மா’ என்றால் அறிவது என்பதும் பொருள். அதாவது உமா என்பதற்கு சிவனை அறிந்துகொள்வது என்பது அர்த்தமாகிறது.

ஒவ்வொரு வீட்டிலும், கணவனிடம் காரியம் ஆகவேண்டுமென்றால் மனைவியின் துணை வேண்டும். இது தான் இறைவனிடத்திலும் நடக்கிறது. சிவனை அறிய வேண்டுமென்றால் முதலில் சக்தியின் துணையை நாடவேண்டும். அவனை புரிந்துகொள்ள அவளால் மட்டுமே முடியும். இதையே, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிறோம்.

‘ஹைமாவதி’ என்கிற வடமொழிப் பெயரிலிருந்து வந்ததே உமா என்றும் சொல்லப்படுகிறது. மற்றொருபுறத்தில், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்திலிருந்தே பிறந்தது உமா என்றும் சொல்கிறார்கள்.

இப்பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சற்றே மாறுபட்டு பரவியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாபிலோனில் ‘உம்மா’ எனவும், சிரியாவில் ‘உம்மோ’ ஆகவும், ஆர்க்கேடியாவில் ‘உம்மி’ என்றும் அழைக்கப்படுகிறது.

தெற்காசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் உமையவளின் சிற்பங்கள் பல கிடைக்கபெற்றுள்ளன.

பெண் தெய்வ வழிபாடு பெரும்பாலும் வடமாநிலத்தில் தான் முதலில் துவங்கியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று. வேத காலத்தில் சக்தி வழிபாட்டிற்கான சான்றுகள் சரிவர கிடைக்கவில்லை. ரிக் வேதத்தில் ஆண் தெய்வமே முன் நிறுத்தப்படுகிறது. ஆனாலும் உஷஸ், அதிதி போன்ற பெண் தெய்வத்தினையும் வழிபட்டிருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.

இது தமிழ்நாட்டிற்குள் தலை காட்டியது கி.பி. 5ம் நூற்றாண்டுக்கு முன்பாக இருக்கலாம் என்கிறார்கள்.

மலையரசனாகிய இமவான், மோனை ஆகியோருக்கு மகளாக பிறந்து மகாதேவனை மணம் முடித்தாள் உமையவள் என்கிறது புராணங்கள். இதனாலேயே இவள் மலைமகள் என அழைக்கப்படுகிறாள். ‘பர்வதம்’ என்னும் மலையை குறிக்கும் சொல்லிருந்தே பார்வதி என்கிற பெயரும் உண்டாயிற்று.

உமையவள் குறித்து வேறு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. தட்சனின் மகளாகிய தாட்சாயணியை மணம் முடித்த சிவபெருமான், ஒரு கட்டத்தில் அவளை இழந்து விடுகிறார். பின்னர் பார்வதியை பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கரம் பற்றுகிறார். பார்வதியே தாட்சாயணியின் மறு பிறப்பு என்கிறது புராணம்.

பொதுவாக சக்தி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் ‘சாக்தர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு பெரும் உண்மையே பத்து திருவடிவங்களாக விளங்குகிறது என்பது இவர்களின் நம்பிக்கை. காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலை என்பதே அந்த பத்து வடிவங்கள். இப்பெயர்களே உமையவளின் மறுபெயர்களாக அழைக்கப்படுகின்றன.

இந்து மதத்தினர் மட்டுமல்லாமல், மற்ற மதங்களிலும் பெண் தெய்வ வழிபாடுகள் சிறப்பாகவே நடக்கின்றன. பௌத்தர்களும் ஜைனர்களும் பெண் தெய்வங்களாகிய யட்சி, ஹாரிதி, அம்பிகாவை வழிபடுகின்றனர். இவை அனைத்திற்கும் மூல ஆதாரம் உமையவளே... எங்கள் மலைமகளே ஆவாள்.

Saravanakumar Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment