ஒரு பெண்ணின் வாழ்வில் மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபாஸ். இது உடலில் நிகழும் மிகவும் இயற்கையான ஒரு நிகழ்வு. வயதாகும் போது, பெண்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டை தீர்ந்துவிடும். இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது. இதுதான் மெனோபாஸ். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். 45 வயதிலிருந்து 54 வயது வரை எப்போது வேண்டுமானால் மெனோபாஸ் வரலாம்.
எவ்வாறாயினும், முன்கூட்டிய மாதவிடாய் (premature menopause- 40 வயதிற்கு முன்) இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றின் உயர்ந்த அபாயங்களுடன் தொடர்புடையது என்று ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

1.4 மில்லியன் பெண்களிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், இளைய வயதில் மெனோபாஸ் அனுபவிக்கும் பெண்களிடம், இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றின் ஆபத்து அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
“முன்கூட்டியே மாதவிடாய் நின்ற பெண்கள், தங்கள் சகாக்களை விட இதய செயலிழப்பு அல்லது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அறிந்திருக்க வேண்டும்” என்று கொரியா குடியரசின் சியோலில் உள்ள கொரியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் ஆய்வு ஆசிரியர் மருத்துவர் கா யூன் நாம் கூறினார். புகைபிடிப்பதை நிறுத்துதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற இதய நோயுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை பழக்கங்களை மேம்படுத்த இது நல்ல உந்துதலாக இருக்கலாம்.
வயது, புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் செயல்பாடு, வருமானம், உடல் நிறை குறியீட்டெண், உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு, டிஸ்லிபிடீமியா, நாள்பட்ட சிறுநீரக நோய், கரோனரி இதய நோய், ஹார்மோர் ரிபிளேஸ்மேண்ட் தெரபி மற்றும் முதல் மாதவிடாய் வந்த வயது ஆகியவற்றை சரிசெய்த பிறகு, முன்கூட்டிய மெனோபாஸ் மற்றும் இதய செயலிழப்பு, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் முன்கூட்டிய மெனோபாஸ் அனுபவித்த பெண்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகமாகவும், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்து 9 சதவீதம் அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், முன்கூட்டிய மெனோபாஸ் ஒரு சதவீத பெண்களை மட்டுமே பாதிக்கிறது.

ஆராய்ச்சி பின்வரும் முக்கிய அவதானிப்புகளைக் கொண்டிருந்தது:
மாதவிடாய் நிற்கும் வயது குறைவதால், இதய செயலிழப்பு அபாயம் அதிகரித்தது.
மாதவிடாய் நின்ற 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது, 45 முதல் 49 வயது, 40 முதல் 44 வயது மற்றும் மாதவிடாய் நின்ற 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு முறையே, 11 சதவீதம், 23 சதவீதம் மற்றும் 39 சதவீதம் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
மாதவிடாய் நிற்கும் வயது குறைவதால் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்து அதிகரித்தது, மாதவிடாய் நின்ற 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது, 45 முதல் 49 வயது, 40 முதல் 44 வயது மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 11 சதவீதம் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்து உள்ளது.
“இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றின் எதிர்கால சாத்தியக்கூறுகளை மதிப்பிடும்போது’ புகைபிடித்தல் போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகளுடன் கூடுதலாக, இனப்பெருக்க வரலாற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று எங்கள் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்று மருத்துவர் நாம் கூறினார்.
மூத்த மகப்பேறு மருத்துவர் ரச்சனா வர்மா ஆய்வைப் பற்றிப் பேசுகையில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல் மற்றும் உடலில் கொழுப்பு விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை, ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்திற்கும், இதய நோய்களுக்கும் இடையிலான உறவை விளக்கக்கூடிய காரணங்கள்.
பெண்கள் இயற்கையாகவே ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மிதமான உடல் எடையை பராமரிக்கவும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும். மன அழுத்த ஹார்மோன்களின் உயர்ந்த அளவு போன்றவை முன்கூட்டிய மெனோபாஸ் ஏற்படுத்தும்.
மேலும், நிவாரணத்திற்காக நிபுணர் பின்வரும் சிகிச்சைகளை பரிந்துரைத்தார்:
வாய்வழி கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சையின் ஒரு வடிவமாகும், அவை சில நேரங்களில் மாதவிடாய் நின்ற அறிகுறிகளைப் போக்க உதவுகின்றன.
*ஆண்டிடிபிரஸன் மருந்துகள், செலக்டிவ் செரடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்கள் (எஸ்எஸ்ஆர்ஐ) மற்றும் தொடர்புடைய மருந்துகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருப்பதாகக் காட்டப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“