மாதவிடாய் எல்லா பெண்களுக்கும் எளிதான காலமாக இருக்காது. மாதவிடாய் காலங்களில் வலிகளும், அசெளகரியங்களும் பெண்களுக்கு பெண்கள் வேறுபடும். இந்த காலங்களில் பெண்கள், தங்களை எவ்வளவு சுகாதாரணமாக பார்த்துக் கொள்ள வேண்டுமோ, அந்த அளவுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் முறையற்ற உணவுப் பழக்கம், வயிற்று வலி, குமட்டல், தலைவலி, வயிற்றிப் போக்கு ஆகியவற்றுக்கு காரணமாக அமையலாம். கீழே உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டும், குறிப்பிடப்பட்ட உணவுப் பொருள்களை தவிர்த்தும் வாருங்கள். நீங்கள் இக்கட்டாகவும், சங்கடமாகவும் கருதும் மாதவிடாய் நாள்களும் உங்களுக்கு இனிமையாக அமையும்.
மாதவிடாய் காலங்களில் நீங்கள் சாப்பிட வேண்டியவை!
காய்கள், பழங்கள் மற்றும் கீரைகள் :
மாதவிடாய் காலங்களில் பெண்களிடம் இரத்தப் போக்கு அதிகமாக தென்பட்டால், அவர்களிடம் இரும்புச் சத்தின் அளவு குறைவது வழக்கமான நிகழ்வு தான். இந்த சமயங்களில் உடல்வலி, சோர்வு மற்றும் தலைச்சுற்று ஆகியவை ஏற்படக்கூடும். இதனை தடுக்க, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தர்பூசணி மற்றும் வெள்ளரிப் போன்ற நீர்ச் சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அழற்சியை போக்க, ஒரு கப் இஞ்சி தேநீரை நீங்கள் அருந்தினாலே போதுமானது. இஞ்சி அழற்சிக்கு எதிராக செயல்படக் கூடிய தன்மை கொண்டதால், குமட்டல் போன்ற அழற்சி பிரச்னைகளுக்கு குட்ஃபை சொல்லலாம்.
கோழி இறைச்சியும், மீனும் :
கோழி இறைச்சியும், மீனும் புரதம் மற்றும் இரும்புச் சத்தின் முக்கிய ஆதாரங்களாகும். மாதவிடாயின் போது இவற்றை தவறாது உங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் புரதம் மற்றும் ஒமேகா 3 சத்துகளும் உள்ளன. மாதவிடாய் காலங்களில் ஒட்டு மொத்த உடல் நலத்தையும் பேணுவது கட்டாயம் என்பதால், இறைச்சி மற்றும் மீனை தவறாது எடுத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான இரத்தப்போக்கு உள்ளவர்களிடம் ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை இவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
கீன்வா மற்றும் பயிறு :
கீன்வாவில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் புரதச் சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இவற்றை சிறிதளவில் எடுத்துக் கொண்டாலும், அவை உங்களை நிறைவாக உணரச் செய்யும். அதே வேலையில், பயிறு என்பது புரதத்தின் சிறந்த மூலமாகும். அசைவம் உண்ண விருப்பப்படாதவர்களுக்கு பயிறு சிறந்த மாற்றாகும்.
கடலை மற்றும் டார்க் சாக்லேட்டுகள் :
டார்க் சாக்லேட்டுகளில் மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் அவற்றை தவறாது சேர்த்துக் கொள்ளலாம். கடலை வகைகளில் சிலவற்றை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.
தண்ணீர் :
குடிநீர் எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தண்ணீரை தொடர்ச்சியாக அருந்துவதால், மாதவிடாயின் போது நீரிழப்பினால் ஏற்படும் தலைவலியை போக்கலாம்.
மாதவிடாயின் போது நீங்கள் தவிர்க்க வேண்டியவை :
உப்பு மற்றும் காரமான உணவு வகைகள் :
உப்பு மற்றும் சோடியம் நிறைந்திருக்கும் உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக, பொரித்து பாக்கெட் செய்யப்பட்ட உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மாதவிடாய் காலங்களில், அதிகப்படியான உப்பு உட்கொள்வதால், நீர் தக்கவைப்பை ஏற்படுத்தக்க் கூடும். மேலும், காரமான உணவுகள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் தவிர்த்து விடுங்கள்.
காபி :
காபி மற்றும் எனர்ஜி பானங்கள் என கடைகளில் விற்கப்படுபவைகளை தவிர்த்து விடுங்கள். இல்லையேல், தலைவலி மற்றும் செரிமான சிக்கல்களை வழிவகுக்கும். மேலும்,, மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
ஆல்கஹால் :
மது அருந்துவதால் மோசமான தலைவலி உள்பட பல விளைவுகளை சந்திக்க கூடும் என்பதால், அவற்றையும் தவிர்த்து விடுங்கள்.