உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் நிச்சயமாக கொண்டாட்டத்தில் துவங்கவில்லை ; போராட்டத்தில்தான் அது தொடங்கியது.
பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.
முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், "அமைதியும் ரொட்டியும்"தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்கு நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டு இறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி கொண்டாடப்படுகிறது?
சர்வதேச பெண்கள் தினம் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை ஒட்டி 3-4 நாள்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காகிறது. சீனாவில் அரசு கவுன்சில் அளித்த அறிவுரைப்படி பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், எல்லா இடங்களிலும், நிறுவனங்கள் இந்த விடுமுறையை நடைமுறையில் தருவதில்லை.
இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கௌரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.