ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. எந்த நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை கூறுகிறது.
2013 ஆம் ஆண்டு, மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து ‘சர்வதேச மகிழ்ச்சி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் மார்ச் 20 ஆம் தேதியில் உலக மகிழ்ச்சி தினத்தை சிறப்பிக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். அந்த நாளுக்கென ஒரு சிறப்பு உண்டு. இது வசந்த காலத்தின் துவக்க நாள். அந்த நாளில் பகலும் இரவும் சரிசமாக இருக்கும். இதனால்தான் இந்த நாளை, உலகின் மகிழ்ச்சி தினமாகச் சிறப்பிக்க ஐ.நா. நிறுவனம் தேர்ந்தெடுத்தது.
2024 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி நாள் கருப்பொருள் ‘ஒன்றிணைந்து மகிழ்ச்சி காணல்’ ஆகும்.
போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டு வருவதே மகிழ்ச்சி என ஐ.நா. நிறுவனம் கருதுகிறது.
மகிழ்ச்சி தினத்தின் தொடக்கம்
2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிஷனை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது, அதை பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே ஏற்றுக்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையும் இந்த கமிஷனுக்கு இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என்றும் இந்த கமிஷன், ஐநா பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.
பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே மற்றும் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி.சாக்ஸ் ஆகியோர் தலைமையில் உலக மகிழ்ச்சி தினத்தின் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“