உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை, கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் நாளை கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
உலகில் உள்ள பண்டைய கால பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அந்தவகையில், நாளை (வியாழக்கிழமை) உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை நாளை காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தொல்லியல் துறை, இந்திய பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார நிறுவனம், மணிமேகலா சர்வதேச கலை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் நட்சத்திர கலை சங்கமம் நடைபெற உள்ளது. உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாரம்பரிய கலைகள் நிகழ்த்தி காட்டப்பட உள்ளன என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“