Advertisment

இன்று ’உலக பிசியோதெரபி தினம்’- பிசியோதெரபிஸ்டுகள் வைக்கும் கோரிக்கை: அரசு செவி சாய்க்குமா?

உலகம் முழுவதும் ’பிசியோதெரபி தினம்’ இன்று கொண்டாடப்படும் வேளையில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு உள்ள நெருக்கடிகளை விவரிக்கிறார் மருத்துவர் கிருஷ்ணகுமார்.

author-image
WebDesk
Sep 08, 2023 11:58 IST
World physiotherapy day

World physiotherapy day

பிசியோதெரபி- இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

Advertisment

`பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லைபோன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்முளைத்துவிட்டன.

எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால் அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை தான் பிசியோதெரபி. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை.

உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும். தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசைகள் இழந்த இயக்கம் மற்றும் வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோதெரபி உதவுகிறது.

உடலின் இயக்கத்தை மீட்டெடுக்க மருந்தில்லா மருத்துவத்தை கையாளும் பிசியோதெரபிஸ்ட் தினம் உலக அளவில் இன்று கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் மருந்தில்லா மருத்துவத்தை கையாளும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு உள்ள நெருக்கடிகளை விவரிக்கிறார் இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் தமிழ்நாடு தலைவர் மருத்துவர் வெ. கிருஷ்ணகுமார்.

உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் 8 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மருந்தில்லா மருத்துவமே மருத்துவ துறையின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும். தற்சார்பு வாழ்க்கை முறைக்கு பிசியோதெரபி மருத்துவம் பெரும் பங்காற்றி வருகிறது.

உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்யக்கூடிய ஒரே மருத்துவ துறையான பிசியோதெரபி மருத்துவத்துறைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

மேலும் இந்த நாளில் மக்கள் நலன் காக்கும் கோரிக்கைகளை முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

போலி பிசியோதெரபிஸ்ட்களிடமிருந்து, போலி பிசியோதெரபி நிறுவனங்களிடமிருந்து நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தனிப்பட்ட பிசியோதெரபிஸ்ட்டின் பதிவு, பிசியோதெரபி கிளினிக் பதிவு சம்பந்தப்பட்ட சட்ட ரீதியான கொள்கை முடிவுகளை துரிதமாக எடுக்க வேண்டும்.

இதற்காக மாநில அளவில் பிசியோதெரபி கவுன்சில்அமைக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த பிசியோதெரபிஸ்ட்களது எதிர்பார்ப்பு.

பிசியோதெரபி மருத்துவ துறையை சார்ந்த பிரதிநிதிகளை அழைத்து, பிசியோதெரபி சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளை விவாதித்து எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிசியோதெரபி கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தனியார் பிசியோதெரபி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது இன்டர்ன்ஷிப் பயிற்சியை அரசு மருத்துவமனைகளில் மாத உதவி தொகை ஸ்டைஃபன் அளித்து மேற்கொள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின்  "நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்று வருகிறது.

முதல் இரண்டு நாட்கள் உயிரை காப்பாற்றுவதற்கு அரசு உதவுவதை போல பின்வரும் நாட்களில் அவர்களது மறுவாழ்வுக்கான காலகட்டத்தில் அரசாங்கத்தின் உதவிக் கரங்கள் நீளவேண்டும்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், வட்டார மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கி பார்க்கும் வசதிகளை கொண்ட பிசியோதெரபி சிகிச்சை நிலையங்கள் உருவாக்கிட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கூற்றின்படி சாலை விபத்தினால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பாதசாரிகள், சைக்கிள் பயன்படுத்துபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் 73% விபத்துகளில் 25 வயதுக்கு கீழ் உள்ள வாலிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களே அதிகளவில் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக அளவில் வருடத்திற்கு சராசரியாக 57 ஆயிரம் விபத்துகள் நடக்கிறது. தினசரி 160 விபத்துகள் நடக்கின்றன.

உலகளாவிய திறமைகளை கண்டறியும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 67 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும் 6,7,8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு "உடல்திறன் அறியும் சோதனைகள்" நடத்தப்படுகின்றன.

இத்திட்டத்தில் பிசியோதெரபிஸ்ட்களை இணைத்து அதன் மூலம் தனிப்பட்ட உடற்தகுதியை ஆய்வு செய்து அதற்கேற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பரிந்துரை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். உடல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் கிடைப்பது மிக அரிதாகி வருவதாக விளையாட்டு துறை வல்லுநர்கள் கூறி வரும் சூழலில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமனம் காலத்தின் கட்டாயம்.

அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை வல்லுநராக பிசியோதெரபிஸ்ட், பாதுகாப்பான உடல் இயக்க நடவடிக்கைகளை எவ்விதம் மேற்கொள்வது, விளையாட்டு காயங்களை எவ்வாறு தவிர்ப்பது, வயது என்ற காரணியை தாண்டி விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறனை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை செய்வார்கள்.

உடற்பயிற்சி கூடங்கள் அதிகரிப்பது நன்மைதான். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு உடற்பயிற்சி நிலையம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு  கீழ் செயல்பட வேண்டும். உடற்பயிற்சி நிலையங்களை பொருத்தவரையில் அவை தொடங்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் நடைமுறை சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். பிசியோதெரபி மருத்துவர் ஒருவரின் சான்றிதழ் இணைத்து உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆரம்ப நிலையில் இருந்து தொடங்கப்படும் மருத்துவ முயற்சிகள் வெற்றிகளை தேடித்தரும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரம்ப சுகாதார நிலையம் மட்டத்தில் இருந்து பிசியோதெரபி துறை உருவாக்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மட்டத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் நியமனம் செய்யும்போது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு மூட்டு வலி, நரம்பியல் கோளாறுகள், முதுகு வலி போன்ற மஸ்குலோ ஸ்கிலிட்டல் குறைபாடுகள் உடைய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் ஆரம்ப சுகாதார நிலைய மட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும்.

SUPER SPECIALITY மருத்துவ துறையினரான ORTHOPAEDICIANS, NEURO SURGEONS ஆகியோரின் வேலைப்பளு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கனிசமாக குறையும் என்கிறார் மருத்துவர் கிருஷ்ணகுமார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment