/indian-express-tamil/media/media_files/2025/03/20/MnhwAAgR8YmBD3VMnYrt.jpg)
பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் எல்லா பறவைகளையும் மிக நுணுக்கமாக ரசித்தவர்கள் சிட்டுகுருவியையும் அவ்வளவு அழகாக கொண்டாடினார்கள்.
சிலப்பதிகாரத்தில் ‘குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து’ என மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோ பாடியுள்ளார்.
புறாநானூற்றில் உள்ள "குரீஇ" என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பாரும் உண்டு.
‘குன்றத்து இருந்த குரீஇ இனம் போல்’ என்ற புறநானூற்றுப் பாடலிலும் ‘மனையுறை குரீஇக் களை கனல் சேவல்’ என்ற பாடலிலும் கழுத்தில் கறுப்பினை உடைய ஆண்குருவி, வீட்டிலேயே செல்லப் பறவையாக வாழ்ந்ததை காணலாம்
‘எண்ணரும் குன்றில் குரீஇ இனம் போன்றனவே’ என்ற களவழி நாற்பதில் யானைமேல் தைத்த அம்புகளுக்கு, மலை மீது தங்கிய குருவிகள் உவமையாக சொல்லபட்டன
‘உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்’ என்ற நற்றிணைப் பாடல் வீட்டில் வளர்ந்த குருவிகளை சொல்கின்றது
‘ஆம்பல் பூவின் சம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உரைகுரீஇ’ என்ற குறுந்தொகைப் பாடல் ஆம்பல் மலரின் சாம்பல் நிறத்தை ஒத்த, அந்த மொட்டு போலவே குவிந்த சிறகுகளை உடைய வீட்டுக் குருவிகள் முற்றத்தில் விளையாடியதை சொல்கின்றது.
‘குருவி சேர் குன்றம் ஒத்து’ என மேருமந்திரமும் இந்தக் குருவி உவமையைக் காட்டுகிறது.
சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர்.
லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று பாரதி சோர்வுறும்பொழுது அவருக்கு பாட வழிகாட்டியது சிட்டுகுருவி,
“விட்டு விலகி நிற்பாய் அந்த சிட்டு குருவியை போலே…” என்ற ஒருவரி அவரின் சலித்த வேளையில் குருவியினால் கிடைத்த ஞானத்தை சொல்லும்
தொடக்ககால தமிழ்சினிமா பாடல்களில் சிட்டுகுருவி தனி இடம் பிடித்தது, அந்த பாடல்கள் எக்காலமும் சுகமானவை
அளவில் சிறியதால் அதனை சிட்டில் அல்லது சிட்டுகுருவி என அழைத்தாலும் தென் பகுதி மக்கள் அதற்கு வைத்த பெயர் “அடைக்கலாங் குருவி”
பறவையினங்களில் மனிதரிடம் ஒட்டுவது அல்லது மனிதர் வாழும் பகுதியில் வாழும் பகுதியில் கூடுகட்டிவாழும் பறவைகள் மிக குறைவு, அவ்வகையில் மனிதனின் வீட்டிற்குள் அடைக்கலமாய் வந்து கூடுகட்டிவாழுவதால் அது அடைக்கலபறவை.
மனிதாபிமானத்திலும் இரக்கத்திலும் சிறந்த மனமுடைய தென்பாண்டி மக்கள், அக்குருவி ஆயிரம் தொல்லை கொடுத்தாலும், குஞ்சுகளோடு அது பறக்கும்வரை அந்த கூட்டை கலைக்கமாட்டார்கள், அது 3 தலைமுறைக்கு பாவம் சேர்க்கும் என்பார்கள்.
முறத்தில் அரிசி படைக்கும் பெண்கள் முன்னால்,சோறு சிதறும் இடன்ங்கள் கோழிக்கு தானியமிடும் இடங்கள் என தானியங்கள் சிதறுமிடங்களில் எல்லாம் அக்குருவி கூட்டத்தினை காணலாம்.
வீடு முதல் வயல் வரை, நெல் காயும் இடமுதல் கோழிக்கூடு வரை தானும் ஒரு பங்காளி என தானாக வந்து அமரும், உரிமையோடு ஒட்டிகொள்ளும்.
அது தனித்து வாழும் பறவை அல்ல, கூடிவாழும் பறவை அதுவும் மானுடர் இல்லாத இடங்களில் அது வாழாது, பாழடைந்த வீடுகளிலோ கைவிடபட்ட இடங்களிலோ அதனை காண முடியாது.
அது மக்கள் வாழும் இடத்தில் வாழும், சிட்டுகுருவிகள் எங்கு மகிழ்வாக வாழுமோ அங்கே மக்களும் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள் இது வழமை.
கிராமத்து வாழ்வில் அது தவிர்க்கமுடியா பங்காளி, கிராமத்துவாசிகள் வீட்டில் ஒருவர்போல சிட்டுகுருவியோடு பழகியிருப்பார்கள்.
அது மனிதன் உலகில் தானும் ஒரு ஜீவன் என்ற எண்ணத்தோடு, உலக உயிர்களோடு உறவாடி வாழ்ந்த பொற்காலம்.
பலநூறுஆண்டுகளாக ஒரே வாழ்க்கைமுறையிலிருந்த மானிட வாழ்வு கடந்த 30 ஆண்டிற்குள் சடுதியாக மாறிவிட்டது, அறிவிக்கபடாத புது வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆடு,மாடு,கோழி,குருவி என சகல ஜீவராசிகளோடு வாழ்ந்த நாம் இன்று சுற்றிலும் மிண்ணணு கருவிகள்,எந்திரங்கள் என ஒரு எந்திரமாகவே காங்கரீட் காட்டில் தனியாக வாழும் காலமாகிவிட்டது
ஆறறிவு படைத்த மனிதனே இன்றைய வாழ்வில் அகதிகளாய் தடுமாறும்பொழுது, பாவம் சிட்டுகுருவிகள் என்ன செய்யும், விஷ மருந்து தெளிக்கபட்ட தானியங்களை தின்ன கூடாது என்றோ, செல்போன் கோபுரத்திற்கும் ஆலய மாடத்திற்குமான வித்தியாசங்களோ அவற்றிற்கு தெரிவதில்லை.
நவீன அடுக்குமாடி குடியிருப்பில் புல்கூட செயற்கைதான் எனும்பொழுது இயற்கை குருவியை அனுமதிப்பது யார்?, இதுதான் சுத்தமான வீடு என மேற்குலகம் அறிவித்து விட்டால் நாமும் அதனை தலைமேல் கொண்டாடும் காலம்.
வீடு சுத்தமாக இருக்கவேண்டும், மரங்களையும் வெட்டவேண்டும்,காலி இடமெல்லாம் கட்டடம் கட்டவேண்டும், புறம்போக்கு நிலமென்றாலும் லஞ்சம் கொடுத்து வளைக்கவேண்டும்…மரங்கள் கூடவே கூடாது, பறவைகள் கூடு கட்ட லாயக்கில்லாத முள்மரங்களை அப்புறபடுத்தும் திட்டமும் இல்லை அவை இந்தியாவில் லஞ்சத்தைவிட வேகமாக ஆக்கிரமித்தாகிவிட்டது.
வேறு எங்கிருந்து சிட்டுக்குருவிகள் வாழும்?
பலபோராட்டங்களை கடந்துதான் அவை வாழ்கின்றன, சிட்டுகுருவி லேகிய பரபரப்பில் அவை பெரும் ஆபத்தில் சிக்கின, தவறான வதந்திகளில் “தேவாங்க்கு ராக்கெட் லேகியம்” போல, சிட்டுகுருவிகளை பெருமளவு உலகமிழந்தது.
இன்று அதே லேகியங்களை பல மருத்துவர்கள் வேறுபெயரில் தொலைகாட்சியில் விற்றுகொண்டிருப்பதால், சிட்டுகுருவிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்.
இந்த பரபரப்பான உலகில் அவற்றை பற்றி கவலைபட யாருமில்லை, அவற்றை என்றல்ல தன்னலம் தவிர வேறு எதையும் மனிதன் யோசிப்பதில்லை,
சில குடும்பங்களில் பூர்வீக சொத்தெல்லாம் தனக்குமட்டும் வேண்டும் என பகிரங்கமாக சண்டையிடும் மகனை போல, இந்த பூமி தனக்கு மட்டும் உரியது என்று மனிதன் நினைத்து கொள்கிறான்,
பிற உயிரினங்களுக்கும் இந்த பூமியில் உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறான்.
சிட்டுகுருவி என்றல்ல, மிளகு காய்த்து பழுக்கும் காலங்களில் பறந்து வரும் கிளிகூட்டம், நாற்றுநட்ட வயல்களில் வரும் கொக்குகூட்டம், கொழுந்து விட்ட செடிகளை கடிக்க வரும் முயல்கள், நிலகடலையை பதம்பார்க்க வரும் வெள்ளெலி கூட்டம், பனை மரங்களை கொத்தும் மரங்கொத்தி, மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள்,மாடுகள் மேல் அமர்ந்து சில பூச்சிகளை தின்னும் சில பறவைகள் என காணாமல் போனவைகள் நிறைய உண்டு.
மாடு செத்தால் எங்கிருந்தாலும் வரும் கழுகுகளை கூட காணவில்லை, ஏன் தேன் கூடுகளே அருகிவிட்டன.
தமிழகத்தில் நிறைய நரிகளும், மரநாய்களும் இருந்ததாம், நம்பித்தான் ஆகவேண்டும் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக தகவல் உண்டு. இன்று தேடினாலும் கிடைக்காது.
அதனை போல, இங்கெல்லாம் நிறைய சிட்டுகுருவிகள் இருந்தது என வருங்காலத்தில் நமது பகுதிகுழந்தைகளிடம் சொல்லகூடிய நிலையை நினைத்தால் மிக நடுக்கமாகத்தான் இருக்கிறது அப்படி ஒரு நிலை வரவேகூடாது.
உறுதியாக சொல்லலாம், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, எல்லா உயிர்களும் வாழவே இறைவனால் படைக்கபட்டிருக்கிறது, அவைகளை வாழ விடுவது மனிதனின் கடமையே.
இந்துதர்மம் ஒவ்வொரு உயிரும் சிவவடிவம் என்கின்றது, ஒவ்வொரு உயிரும் நம்முடன் நம் கர்மாவுடன் தொடர்புடையது என்கின்றது, அவ்வகையில் சிட்டுகுருவிகளை காணும் ஒவ்வொரு மானுடர்க்கும் ஒரு கர்மதொடர்பு இருந்தாகவே வேண்டும்
எத்தனையோ பறவைகள் உலகில் இருக்க அவை மட்டும் குறிப்பிட்ட மனிதனை குடும்பத்தை அண்டி நிற்க காரணங்களும் கட்டாயம் உண்டு.
அக்கால பெண்களுக்கு இந்த மன அழுத்த்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லை, இன்றுள்ள பெண்களுக்கு மனதாலும் உடலாலும் உள்ள நோய்கள் சிக்கல்கள் என்று இல்லவே இல்லை
டிப்ரசன் முதல் ஸ்ட்ரெஸ் என சொல்லபடும் எந்த இம்சையும் அன்றுள்ள பெண்களுக்கு இல்லை, காரணம் அவர்கள் வாழ்வியலில் சிட்டுகுருவியும் ஒரு அங்கமாய் இருந்தது.
வீடுகளில் வளர்ந்த இந்த குருவிகள் அன்று மனநலம் காக்கும் மருத்துவர்களாய் இருந்தன, அவை நிரம்ப இருந்தவரை ஒவ்வொரு பெண்ணின் மனமும் சரியாக அமைதியாக உற்சாகமாக இருந்தது.
அந்த வாழ்வினை தொலைத்துவிட்டுத்தான் தானே குழம்பி தவிக்கும் கும்பலான மனநல மருத்துவ கோஷ்டியிடம், தனக்கே வழிதெரியா கோஷ்டியிடம் பெரும் பணம் இழந்தும் நிம்மதியின்றி தவிக்கின்றது இந்த தலைமுறை.
காரணமில்லாமல் சிருஷ்டி கர்த்தா ஒரு துரும்பை கூட இவ்வுலகில் படைக்கவில்லை, மன அழுத்தம் போக்குவதில் சிட்டுகுருவிகளுக்கு எக்காலமும் ஒரு இட்ம உண்டு, அக்கால வாழ்வு அதை அழகாக சொல்லி கொண்டே இருக்கின்றது.
அருண் பசுமை இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவசமாக சிட்டுக்குருவி கூண்டு வழங்கப்பட்டது.
உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க கடந்த 17 ஆண்டுகளாக புதுச்சேரி இயக்கத் தலைவர் அருண் தலைமையில் பல்வேறு இடங்களில் இலவசமாக சிட்டுக்குருவி இனப்பெருக்கம் செய்வதற்கு கூண்டு வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆயிரம் சிட்டுக்குருவி மட்டும் இருந்தன. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்து அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று புதுச்சேரி குயவய்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதுப்பாளையம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சிட்டுக்குருவி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழச்சியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் பாதுகாப்பு முறை போனற சந்தேகங்களை கேட்டறிந்து அன்பளிப்பாக வழங்கிய சிட்டுக்குருவி கூண்டுகளை மகிழச்சியோடு பெற்று சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.