Advertisment

World Teachers Day 2018: நல்லாசிரியரின் 4 பண்புகள்!

International Teachers Day 2018: அக்டோபர் – 5 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World Teachers Day: உலக நல்லாசிரியர் தினம், அக்டோபர் 5

World Teachers Day: உலக நல்லாசிரியர் தினம், அக்டோபர் 5

கமல.செல்வராஜ்

Advertisment

நான் பத்தாம் வகுப்பை முடித்து விட்டு பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த போது, அந்த ஆண்டில், அப்பள்ளியில்( கன்னியாகுமரி மாவட்டம் அண்டுகோடு பி.பி.எம். மேல்நிலைப் பள்ளி) கணிதப் பாடத்திற்குப் புதிதாக ஓர் ஆசிரியர் பணியில் வந்து சேர்ந்தார். அவர் பெயர் திரு. இராமச்சந்திரன் நாயர்.

அவர் முதல் நாள் வகுப்பில் வந்தபோது தன்னைப் பற்றி ஒரு சுய அறிமுகம் தந்தார். அதில், அவர் சுமார் 25 ஆண்டுகள் தமிழகத்திலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகவும், பின்னர் ஆசிரியர் பணியின் மீதுக் கொண்டப் பற்றின் காரணமாக அப்பணியை ராஜினாமா செய்து விட்டு ஆசிரியர் பணிக்கு வந்ததாகவும் கூறினார்.

இதனைக் கேட்ட மாணவர்களாகிய எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். இருபத்தைந்து ஆண்டுகாலம் அரசாங்கத்தில் பணியாற்றிய ஒருவர், அப்பணியை விட்டு விட்டு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வருவாரா? இது எங்களுக்குள் எழுந்த மிகப் பெரியக் கேள்விக்குறி. எதுவானாலும், இதுபற்றி இவரிடம் கேட்க வேண்டும் என்ற அவா அத்தனை மாணவர்களின் மனதிலும் எழுந்தது. ஆனால் ஒருவருக்குக்கூட அவரிடத்தில் நேரடியாகக் கேட்கக் கூடிய மனத்தைரியம் கிடையாது.

ஏனென்றால், 25 ஆண்டுகள் சிறையில் பணியாற்றி, குற்றவாளிகளோடுப் பழகியச் சில கடுமையானக் குணாதிசையங்கள் அவரின் பேச்சில் எத்தனித்தது. நடை, உடையிலும் பிரதிபலித்தது. அதனால் எல்லோரும், அவரிடம் கேள்விக் கேட்பதற்கு தயங்கவில்லை மாறாக நடுங்கினார்கள்.

என்றாலும் என்மனம் என்னை உந்திக்கொண்டே இருந்தது. எப்படியேனும் அவரிடம் இது பற்றி கேட்டே தீர வேண்டும் என்ற மனத் தைரியத்தை எப்படியெல்லாமோ வரவழைத்துக் கொண்டு, பாதி பயமும் பாதி நடுக்கமுமாக அவரிடம் கேட்டேன் “சார் 25 ஆண்டுகள் சர்வீசை விட்டுவிட்டு எதற்குச் சார் இங்க வந்தீங்க”.

உடனே அவர் ஒரு நிமிடம் அப்படியே கண்ணிமைக்காமல் என்னைப் பார்த்துக் கொண்டே நின்றார். பின்னர் மெல்லியக் குரலில் பேசத் தொடங்கினார். “நான் ஜெயில் கண்காணிப்பாளராக இருக்கும் போது உள்ளே இருக்கும் குற்றவாளிகளிடம் எதைச் செய்யச் சொன்னாலும் அதை அப்படியே இரண்டு கரங்களையும் கூப்பி வணங்கி மிகுந்த மரியாதையோடு செய்து விடுவார்கள். ஆனால், அவர்கள் ஜெயிலிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு எங்கேயாவது வைத்து என்னைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால், உள்ளே இருந்தபோது வணங்கிய அதே கைகளால் கல்லெறிந்து அவமானப்படுத்தி விடுவார்கள்.

ஆனால் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், அப்படியல்ல. ஒரு வேளை அவர்கள் படிக்கும் போது, வகுப்பறையில் வைத்து ஆசிரியர்கள் எதாவது கூறினால், அதற்கு அவர்கள் கட்டுபடாமல் போகலாம், அதற்காக ஏதேனும் தண்டனைக் கொடுத்தால் அதையும் ஏற்றுக் கொள்ளாமல் ஏதிர்த்துக்கூட நிற்கலாம். சில நேரம் கல்லெடுத்துக் கூட எறியலாம். ஆனால் அவன் படித்து முடித்து வெளியேச் சென்ற பிறகு, அதே ஆசிரியரை எங்கேனும் வைத்துப் பார்த்துவிட்டால், உடனே அவரின் அருகில் ஓடிச் சென்று மிகுந்த மரியாதையோடு இருகரம் கூப்பி வணங்கி மரியாதைச் செலுத்தி நிற்பார்கள். இதுதான் ஆசிரியர் வேலைக்கும், ஜெயில் கண்காணிப்பாளர் வேலைக்கும் உள்ள வேறுபாடு. இப்பொழுது நான் ஏன் அப்பணியை விட்டுவிட்டு இப்பணிக்கு வந்திருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன் ” என மிக உருக்கமாகக் கூறி முடித்தார் அந்த ஆசிரியர் திரு. இராமச்சந்திரன் நாயர் அவர்கள்.

இதை அவர் பேசி முடிக்கும் வரை எங்கள் வகுப்பறை, நிசத்தமாக இருந்தது. அன்றுதான் உணர்ந்து கொண்டோம் ஆசிரியர் பணியின் மகத்துவம் என்ன என்பதை. அன்றே என் மனதிற்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தேன், வாழ்க்கையை ஆசிரியர் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று. அது ஈடேறியும் விட்டது. அதன் மகத்துவத்தை பாரினில் பறைசாற்றவும் முடிகிறது.

சுமார் 35 ஆண்டு காலத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு இன்றும் என் இதயத்தில் அப்படியே இதமாகப் பதிந்திருக்கிறதென்றால், இன்றும் என் கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கும் அவ்வாசிரியரின், ஆசிரியர் பணிபற்றியப் புனிதத்துமான வார்த்தைகள் எவ்வளவு உணர்ச்சி பூர்வமான, உயிரோட்டமான வார்த்தைகளாக இருந்திருக்கும் என்பதை இன்று நினைத்தாலும் விழிகளின் ஓரத்தில் லேசான ஈரத்தை வரவழைக்கும்.

World Teachers Day 2018: யார் நல்லாசிரியர்?

ஆசிரியர் என்றச் சொல்லுக்குப் பல்வேறு மொழிகளில் பல்வேறு விளக்கங்களை எண்ணற்ற தத்துவ வித்தகர்கள் விளம்பியுள்ளனர். ஆனால் ஆசிரியருக்கான இலக்கணத்தை வகுத்து வைத்திருக்கும் ஒரே மொழி தமிழ் மொழியாக மட்டுமே இருக்கும். அதற்குச் சான்றுப் பகிர்ந்து நிற்பது தமிழ் இலக்கண நூற்களில், தொல்காப்பியத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும், பவணந்தி முனிவரால் ஆக்கப்பட்ட இலக்கண நூலாகிய நன்னூலாகும். இந்நூல், நல்லாசிரியர், ஆசிரியராகாதவர், மாணாக்கர், மாணக்கராகாதவர், ஆசிரியர் - மாணாக்கர் உறவுநிலை ஆகியவற்றிற்குத் தனித்தனியே இலக்கணம் வகுத்தளித்துள்ளது. இது தமிழ் மொழிக்கு மட்டுமே கிடைத்துள்ள மிகப்பெரியப் பொக்கிஷமாகும்.

அவ்வகையில் நன்னூலார், ஆசிரியருக்குரியதாக எடுத்தியம்பும் நற்குணங்களுக்கான நூற்பாவை அறிதல் அனைவருக்கும் நலனே.

“குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்

அமைபவன் நூலுரை யாசிரி யன்னே”

உயர்ந்தக் குடியில் பிறந்தவராகவும், கடவுள் பக்தி உடையவராகவும் பல நூல்களைக் கற்றறிந்த அறிவும், அவ்வறிவை மாணக்கர் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்தியம்பும் ஆற்றல் உடையவராகவும், நிலத்தையும், மலையையும், துலாக்கோலையும், மலரையும் ஒத்தக் குணங்களை உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள் பலவற்றை உள்ளடக்கியவராகவும் ஆசிரியர் இருத்தல் வேண்டும் என்பது நன்னூலாரின் நற்கருத்து.

இவ்விலக்கணத்தின் மூலம் ஆசிரியர்களுக்கே உரித்தானப் பல்வேறு குணாதிசையங்களை நன்னூலார் நவின்றாலும், நான்கு மிக முக்கியமானப் பொருள்களின் குணங்களோடு அவர்களை ஒப்பிட்டுரைக்கின்றார். அவை: நிலம், மலை, துலாக்கோல், மலர் ஆகியனவாகும்.

நன்னூலார், இந்த நான்கு பொருள்களோடும் ஒப்புமைப் படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே விளக்கமளித்து, அவற்றின் தனித்துவத்தை விளங்குகிறார்.

நால்வகைப் பொருள்களின் இயல்பு:

நிலமானது நீண்டு நெடிய பரப்பைக் கொண்டது. எவ்வளவுதான் பிறர் தன்னைத் தோண்டினாலும் அதை பொறுத்துக் கொள்ளும் இயல்புடையது. அதைப்போன்று ஆசிரியர்களும் பிறரால் அளவிடற்கரிய அறிவுடையவராகவும் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தான் பயிற்றுவிக்கும் மாணவர்கள் மத்தியிலிருந்து வரும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் குணாதிசையங்களைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மலையானது பிறரால் அளந்து அளவிட முடியாத வானுயர்ந்த உருவத்தைக் கொண்டது. எவராலும் எண்ணிக் கணக்கிட முடியாத அளவிற்குப் பல்வேறு பொருள்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அது போல் ஆசிரியர்களும் அதிகமான நூல்களைப் படித்து பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு தொலைவில் நின்று பார்த்தாலும் மலையின் உயரம் தெரிவது போல் ஆசிரியர்களின், கல்வி அறிவின் புகழும் ஓங்கி உயர்ந்து நிற்க வேண்டும்.

தராசானது எந்தச் சூழலிலும் எப்பக்கமும் சாராமல் நடுநிலையில் துல்லியமாக நின்று பொருளின் எடையை ஐயமறக் காட்டுவது போல் ஆசிரியர்களும் மாணவர்களிடத்தில் எவ்வித வேறுபாட்டிற்கும் இடம் கொடாமல், அவர்களின் ஐயப்பாட்டிற்கும் இருவேறுபட்டக் கருத்துகள் எழுமாயின் அவற்றிற்கு நடுநிலையில் நின்றும் செயல்பட வேண்டும்.

பூவானது எல்லா நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மங்கலமான நிகழ்வுகளில் பூவானது தவிர்க்க முடியாத ஒரு பொருளாக விழங்குவது போல் ஆசிரியர்களும் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்புடையவராகத் திகழ வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்களை இவ்வுலகிலுள்ள மிக உயர்ந்த பொருள்களோடு ஒப்பிட்டு உரைக்கின்றார் பவணந்தி முனிவர். இத்தகு மேன்மக்களின் தினமாகக் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக ஆசிரியர் தினம் (WORLD TEACHERS DAY) தான் இன்று (அக்டோபர் – 5).

யுனெஸ்கோ நிறுவனம் இத்தினத்தை “ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அவர்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு அங்கீகாரம் அளித்தல்” என்னும் கருத்தியலின் அடிப்படையில் இத்தினத்தை உலக ஆசிரியர் தினமாக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடும் அவரவர்க்கெனத் தனித்தனியே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினாலும், உலகம் முழுவதும் இருக்கும் ஆசிரியர்களை நினைப்பதற்கும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இந்நாள் முக்கியத்தும் வாய்ந்ததாக உள்ளது. இந்நன்னாளில் மாணவர்கள், அவர்களின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் ஆசிரியர்களுக்கு முறைப்படியான மரியாதைச் செலுத்தி அவர்களிடமிருந்து ஆசி யாசிப்பது, மிகுந்த நன்மை பயப்பதாகும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்! அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com.

அக்டோபர் – 5 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

 

Teachers Day Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment