குடலுக்குள் உருவாகும் பாலிப் (Polyp) எனும் கேன்சருக்கு முந்தைய கட்டிகள் அண்மை காலமாக அதிகமானோருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த 29 வயதான இளம்பெண்ணின் பெருங்குடலில் உருவாகி இருந்த பெரிய அளவிலான பாலிப் கட்டியை, கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள VGM (தனியார்) மருத்துவமனை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையில் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
அதன்படி, சுமார் 7 மணி நேர சிகிச்சைக்கு பின்னர், அப்பெண்ணின் பெருங்குடல் பகுதியில் இருந்து 8 செ.மீ அளவிலான பாலிப் கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட பாலிப் கட்டிகளிலேயே இது தான் மூன்றாவது பெரிய கட்டி என கூறப்படுகிறது. இது தொடர்பாக VGM மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாலிப் கட்டியின் பாதிப்புகள் குறித்து மருத்துவக் குழிவினர் எடுத்துரைத்தனர்.
அந்த வகையில், "பெருங்குடல் தொற்று நோய் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதமாக இது அதிகரித்துள்ளது. பெண்களை விட ஆண்களிடம் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மலத்தில் ஏற்படும் மாற்றம், மலத்துவாரத்தில் இரத்தில் வெளியேறுதல், அனீமியா, வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை இதன் அறிகுறிகள். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் பெருங்குடல் தொற்று நோயை தடுக்கலாம்
அதிக அளவிலான கொழுப்புகள் நிறைந்த இறைச்சி உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் இந்த பாதிப்பு உருவாகலாம். பழைய சோறு ஊற வைத்த தண்ணீர், வெந்தயம், நீர்மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும்" என்று தெரிவித்தனர்.
செய்தி - பி. ரஹ்மான்