உலகப் புலிகள் தினம் எதிர்வரும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை நினைவுகூரும் வகையில் கோவையில் இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் பிரமாண்டச் சிலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் சார்பில், மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை சிந்தாமணி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 12 அடி நீளமும் 900 கிலோ எடையும் கொண்ட இந்த புலிச் சிலை, அதன் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்வதற்குத் தயாராகும் நிலையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தனர்.
உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை பொருத்தமான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டினர். இச்சிலையை நிறுவுதல் மற்றும் அதன் தொடர்ச்சியான பராமரிப்புக்கான முழுப் பொறுப்பையும், அதற்கான செலவுகளையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விலங்கு மீதான விழிப்புணர்வையும், இயற்கைப் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்தச் சிலை கோவை மக்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்