கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பழனி. கிருஷ்ணசாமி எழுதிய 'மனிதன் உடம்பல்ல பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு' எனும் நூல் வெளியீட்டு விழா கொடிசியா வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை 18 முதல் 27 வரை நடைபெறும் கொடிசியா புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக இந்த நிகழ்வு அமைந்தது.
இப்புத்தகத்தை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் புத்தகத் திருவிழா மேடையில் வெளியிட்டுச் சிறப்பித்தார். புதுமலர் பண்பாட்டிதழின் ஆசிரியர் கண. குறிஞ்சி மற்றும் காலச்சுவடு அரசியல் பண்பாட்டு இதழின் பொறுப்பாசிரியர் சுகுமாரன் ஆகியோர் இந்த நூல் குறித்து சிறப்புரையாற்றி, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பெரியசாமித்தூரன் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய ஆளுமை என்றும், தமிழ் சமூகம் அவரை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஐரோப்பிய அறிவுசார் நாகரிகத்திற்கு இணையாகக் கருதப்படும் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாவதற்குப் பெரும் பங்காற்றியவர் பெரியசாமித்தூரன் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெரியசாமித்தூரனின் பன்முகத் திறமைகளை சிற்பி பாலசுப்பிரமணியம் அடுக்கினார்: அவர் ஒரு சிறந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர், நாட்டுப்புற இலக்கிய நூல்கள் எழுதியவர், தமிழ் இசை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர், ஒரு சிறந்த கல்வியாளர், இதழ் ஆசிரியர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். மொத்தத்தில், அவர் ஒரு பன்முகத் திறன் கொண்ட ஆளுமை என்று பாராட்டிய சிற்பி பாலசுப்பிரமணியம், பழனி. கிருஷ்ணசாமி எழுதிய இந்த நூல் பெரியசாமித்தூரனின் முழுமையான படைப்பைப் பற்றிய ஒரு சிறந்த ஆய்வு எனவும் பாராட்டினார்.
நூலின் ஆசிரியர் பழனி. கிருஷ்ணசாமி தனது ஏற்புரையில், "தமிழர் நாகரிகம் என்பது உலக நாகரிகத்திற்கு இணையானது என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதை உலகத்தார் நம்ப வேண்டும் என்றால், நாம் நிறைய எழுத வேண்டும், பேச வேண்டும், நிறைய எடுத்துக்காட்டுகளைத் தர வேண்டும்" என்று கூறினார். மேலும், "அந்தப் பொறுப்பை தனிமனிதனாக இல்லாமல் சமூகமாக இருந்து செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வே இந்த புத்தகத்தை எழுதக் காரணம்" என்று கூறி, தனது படைப்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்