வேலூரிலிருந்து 100 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 220 கி.மீ தூரத்திலும், பெங்களூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது.
ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ ஆகும். இயற்கைப்பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் ஆலயம், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.
வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள சோலையார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.
1) ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
வேலூரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் அருகில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது.
2) இயற்கைப்பூங்கா
சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இயற்கைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சிகளும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவும், மீன் கண்காட்சியும், மலர்த்தோட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீருற்று இதன் சிறப்பம்சமாகும்.
3) பூங்கானூர் ஏரி
இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 56.7 சதுர மீட்டர். இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம். ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன.
4)வேலவன் கோவில்:
இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக விளங்குபவர் முருகன். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இங்கு மிகப்பெரிய கடோத்கஜன் சிலையும் உள்ளது. மேலும் இங்கிருந்து ஏலகிரியின் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம். இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.