உங்களுக்கு மலைவாச ஸ்தலம் என்றால் பிடிக்குமா?
டிரெக்கிங், கேம்ப், புதிய காற்றை சுவாசிக்க நீலகிரி அல்லது கொடைக்கானலுக்கு அடிக்கடி பயணம் செய்வீர்களா? ஆனால் இங்கு செல்ல பல மணி நேரம் ஆகும். இதற்காகவே சென்னையில் இருந்து, பலர் கர்நாடகா அல்லது ஆந்திராவிற்கு பயணம் செய்கிறார்கள்.
உங்களுக்காகவே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏலகிரி, ஜவ்வாது மற்றும் கொல்லிமலை ஆகிய மலைப் பகுதிகளை முக்கிய சுற்றுலா மையங்களாக மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது. இந்த மூன்று இடங்களும் நகரத்திலிருந்து 6 முதல் 8 மணி நேர பயண தூரத்தில் உள்ளன.
இயற்கை அழகு மற்றும் அமைதியுடன் கூடிய புதுமையான அனுபவங்களை இந்த இடங்கள் வழங்கும், என்று மாநில சுற்றுலா செயலாளர் பி சந்திர மோகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கை உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலகிரியில் 50 சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு, கன்வென்ஷனல் மற்றும் கிளாம்பிங் டெண்ட்களுடன், கேம்பிங் சைட் அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அடையாளம் கண்டுள்ளது. கூடுதலாக, இங்கு ஜிப்லைன், ரோப் வாக்கிங் வசதிகள் மற்றும் படகு சவாரி ஆகியவை இடம்பெறும்.
கொல்லிமலையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில், எகோர்சார்ட் மற்றும் பார்ன்ஃபயர் ஏரியாவுடன் கூடிய ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் ராப்பல் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆராய்ந்து வருகிறது.
70 ஹேர்பின் வளைவுகளுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் ரோடுகளுக்கு பிரபலமாக இருந்தபோதிலும், கொல்லிமலையில் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை.
அருவிகளில் உடை மாற்றும் அறைகளோ, கழிவறைகளோ இல்லாதது, ஆண்கள் வெளிப்படையாக மது அருந்துவது ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. இந்த கவலைகளை தீர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜவ்வாது மலையில் பழங்குடியின சமூகங்களை ஈடுபடுத்தி சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அவர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள அனுமதிக்கிறது. இந்த நகரம் பல கோயில்களுக்கும் உள்ளூர் திருவிழாக்களுக்கும் பெயர் பெற்றது.
இந்த இடத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கவனம் கூடுதல் வருவாயை உருவாக்கும், உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு சிலர் ஏற்கனவே இங்கு நிலம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த மலை வாசஸ்தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நன்கு பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வருகையைத் திட்டமிடுவதை எளிதாக்குகிறது. நாங்கள் அதிக பயணிகளையும், நீண்ட பயணங்களையும் பார்க்கிறோம், இது எங்களுக்கு நன்றாக சம்பாதிக்க உதவுகிறது, என்று உள்ளூர் டாக்ஸி டிரைவர் மணிகண்டன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.