நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் அனுவின் அம்மாவாக நடித்து வருபவர் சோனியா. பிரபல திரைப்பட நடிகை. 1979ஆம் ஆண்டு தனது 3 வயதில் 'இவள் ஒரு நாடோடி' என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேபி சோனியா என அழைக்கப்பட்டார். சிறுவயதில் பேபி ஷாலினிக்கு டப்பிங் பேசியுள்ளார். அதன்பிறகு மூர்க்கன், தீக்கடல், எஸ்தப்பா, யூதம், அரோடம், மை டியர் குட்டிச்சாத்தான், நம்பிராதி பூவு, மனுவின் மாமா, குரு, சர்க்கார் காலனி, எல்லம் சேட்டண்டே இஷ்டம் போலே, க்ரேயன்ஸ், நசிரிண்டே ரோஸி என மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
தமிழில் இவரது முதல் அறிமுகம் 1984ல் அன்புள்ள ரஜினிகாந்த் தான். தொடர்ந்து மௌனராகம் படத்தில் ரேவதியின் தங்கையாக நடித்தார். ராஜ மரியாதை, மாப்பிள்ளை, புலன் விசாரணை, அழகன், வீட்டோட மாப்பிள்ளை, பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். உத்தமபுத்திரன் படத்தில் விவேக்கிற்கு மனைவியாகவும் கொடி மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் கூட செங்கமலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் அனைவருக்கும் தெரியக்கூடிய நாயகியாக பரிச்சயமானவர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் போஸ் மனைவியாக சோனியா நடித்திருப்பார்.
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சோனியா. தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் முதல் அறிமுகம் ஆசைகள் தொடர். அதன்பிறகு 2002ல் சன்டிவியின் அம்மா, ஜெயா டிவியில் சஹானா சிந்து பைரவி-2, மலர்கள், முகூர்த்தம், செல்லமே, மாதவி, உறவுகள், அழகி சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். மலையாளத்தில் ஸ்ரீ அய்யப்பனும் வாவரும், வீர மார்த்தாண்ட வர்மா, பெண் மனசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு கலர்ஸ் தமிழில் வந்தாள் ஸ்ரீதேவி, சன்டிவி அருந்ததி சீரியலில் நடித்தார். 2002ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சின்னத்திரை சீரியல் வாழ்க்கை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் முல்லைக்கொடி கதாபாத்திரத்திலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் புஷ்பா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 2003ஆம் ஆண்டு திரைப்பட நடிகர் போஸ் வெங்கட்டை திருமணம் செய்துகொண்டார். 1984ஆம் ஆண்டு மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். 1987ல் நம்பராதி பூவு படத்திற்காக சிறந்த பெண் குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருது வாங்கியுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil