ஜீ தமிழின் சத்யா சீரியலில் அமுல் பேபியாக கலக்கி வரும் பிரபு கேரக்டருக்கு தனி ஃபேன்ஸ்தான். இவரது நிஜப்பெயர் விஷ்ணு. பக்கா சென்னை பையன். வேளச்சேரியில் உள்ள ஆசான் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். பிறகு மெட்ராஸ் யுனிவர்ஸிட்டியில் M.Sc.Electronic Media முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே மீடியா மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் இந்த படிப்பை தேர்வு செய்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராக வர வேண்டும் என்பது இவரது ஆசை. தான் எடுக்கும் ஷோ மிகப் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என நினைத்துள்ளார். படிப்பு முடித்து வேலை தேடி அலைந்தபோது டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோஸ் குறித்த Thesis பண்ணியுள்ளார். அதன்மூலம் விஜய்டிவியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. புரோகிராம் டீம்மில் பணியாற்றி வந்துள்ளார்.
Advertisment
அப்போதுதான் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடிப்பதற்கு விஷ்ணுவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் நடிப்பை தேர்ந்தெடுத்த விஷ்ணு 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் நடிகனாக அறிமுகமானார். அதில் அசோக் என்ற ரோலில் காலேஜ் பாயாக நகைச்சுவையாக பேசி நடித்திருந்தார். இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தது. இதை தொடர்ந்து 2013ல் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் சீரியலில் ஐடி ஊழியராக நடித்திருந்தார் . இதில் லட்சுமியுடன் இவர் செய்யும் அலப்பறைகள் காமெடியான பேச்சு ரொம்பவே பாப்புலராக்கியது. 2 வருடங்கள் ஓடியது இந்த தொடர். இதன்மூலம் விஷ்ணுவிற்கு பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
முதல் படம் 2016ல் வெளியான மாப்பிள்ளை சிங்கம். சப்போர்டிங் ரோல் என்றாலும் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்த படமே ஹீரோ சான்ஸ் . 2017ல் வெளியான இவன் யாரென்று தெரிகிறதா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ஓரளவிற்கு ஓடியது. தொடர்ந்து கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து வந்தார். 2018ல் 6 அத்தியாயம், களரி, என்னமோ ஏதோ, கொரில்லா என அடுத்தடுத்து படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இருந்தாலும் வெள்ளித்திரையில் எதிர்பார்த்த அளவு ரீச் கிடைக்கவில்லை .இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019ல் ஜீ தமிழ் சத்யா சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.தற்போது சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சத்யா சீரியலில் பிரபு என்ற ரோலில் ஆயிஷாவுடன் நடித்து வருகிறார். அமுல்பேபி - ரவுடிபேபி இடையேயான ரொமன்ஸ் காட்சிகள் இவரை ரொம்பவே பாப்புலராக்கியது. வழக்கமான சீரியல் சோக கதைகளுக்கு மத்தியில் ரொம்பவே வித்யாசமான கதையம்சம் கொண்ட தொடராக உள்ளது சத்யா சீரியல். காதல், காமெடி என கதை சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது. தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இதில் நடிக்க ஆரம்பித்த பிறகு விஷ்ணுவிற்கு வேற லெவல் ரீச் கிடைத்துள்ளது.
2014ல் ஆபிஸ் தொடரில் நடித்ததற்காக Favourite Find மற்றும் Favourite Comedian Fiction விருது வாங்கியுள்ளார். அதன்பின்னர், 2019ல் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2019ல் சிறந்த நடிகர், Favourite onscreen pair விருது வென்றார். விஜய்டிவி, ஜீ தமிழில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இவர் தீவிரமான அஜீத் ரசிகர். விஷ்ணுவிற்கு வெளிநாடுகளுக்கு டிரிப் போவது ரொம்பவும் பிடித்தமான ஒன்று. பெரியத்திரை சென்று பெரிதாக வெற்றி பெறாத அனுபவம் இப்போதைக்கு வெள்ளித்திரையில் சான்ஸ் கிடைத்தாலும் போக மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார். சீரியலில் நல்ல ரீச் கிடைப்பதால் மூவி ஃபிளான் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் விஷ்ணு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"