Advertisment

கி.ரா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விசயங்கள்

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95 பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ki.Rajanarayanan - ki.ra95

கி.ரா.வுக்கு இன்று 95வது பிறந்த நாள். இதையொட்டி அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விசயங்கள் உங்களுக்காக.

Advertisment

கி. ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்கிறார் ராஜநாராயணன். இவற்றில் கு. அழகிரிசாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு ‘அன்னம்’ வெளியீடாக வெளிவந்தது. அவற்றில் பல கிட்டத்தட்ட ஒரு காதலிக்கு எழுதப்பட்டதுபோல் இருக்கின்றன. கு. அழகிரிசாமிக்கும், கி. ராஜநாராயணனுக்கும் இசை மீதிருந்த கிறுக்கு ஊரறிந்த விஷயம். இளம்பிராயத்தில், ஒரு குருவிடம் முறையாக இசை கற்பது, சாகித்யங்கள், நாட்டிய பதங்கள் பண்ணுவது பின்னாளில் இசை அறிந்த பெண்ணையே மணம் முடிப்பது என்று மனக்கோட்டை கட்டியிருந்தார்கள் அவர்கள்.

இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மொழியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுத்தாளர்கள் ஆனதும் இரு வருமே குறிப்பிடத்தக்க வகையில் இலக்கியத்தை வளப்படுத்தி சாகித்ய அகாதமி பெற்றதும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ் இத்தகைய பெருமைக்குரியது.

கரிசல் எழுத்தின் பீஷ்மராக கி.ராவைச் சொல்ல வேண்டும். சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங்களையும் பதிவு செய்த கிராவின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்தவர் கிரா.

கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன். தனி ஒரு ஆளாக அவர் செய்த பங்களிப்பில் இருந்தே கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு மரபு உருவானது. பூமணி, பா.ஜெயபிரகாசம் கோணங்கி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ. தர்மன். முத்தானந்தம், உதயசங்கர், காசிராஜன், கௌரி சங்கர், சாரதி, ஜோதி விநாயகம், மேலாண்மை பொன்னுசாமி, அப்பண்ணசாமி பாரததேவி, என நீளும் கரிசல் எழுத்தாளர்கள் பட்டியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எழுத்தாளர் என்ற முறையில் தன் மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்கியதோடு கிராவின் பணி முடிந்துவிடவில்லை. நேரடியான அரசியல் ஈடுபாடும் கொண்டவர் கிரா. இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறை சிறை சென்றிருக்கிறார்.

நாட்டுபுறக் கதைகளிலும் பாலியல் சார்ந்த கதைகளைச் சேகரிப்பதில் பலரும் முகச்சுழிப்பு கொண்டபோது பாலியல் மனிதனின் ஆதார இச்சை, அதை எதற்காக விலக்க வேண்டும் என்று பாலியல் கதைகளைச் சேகரித்து, அதைத் தனித்த நூலாகவும் மாற்றியவர் கிரா.

இசையிலும் பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு அலாதியானது. விளாத்திகுளம் சாமிகளிடம் நேரடியாக இசை பயின்றிருக்கிறார். டிகேசியிடம் கம்பராமாயணம் கேட்டு அறிந்திருக்கிறார்.

ரசனை என்பதை கி.ராஜநாராயணனின் அழகியல் அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகவே காணலாம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழலையே வெளியே இருந்து வந்த ஒருவனின் பார்வையுடன் பார்த்து ரசித்து சொல்லும் பாணியை அவரது கதைகளில் வாசிக்கிறோம். இயற்கைச் சூழலை , மனிதர்களின் குணாதிசயங்களை , அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எல்லாமே ஒரு வேடிக்கை பார்க்கும் கண்ணோடு விலகி நின்றே அவர் பார்க்கிறார் . இந்தப் பார்வையே அவருடைய படைப்புகளில் வெகுஜன ரசனையையும் திருப்தி செய்யும் கூறாக உள்ளது. ரசிப்பது, அந்த ரசனையை நுட்பத்துடனும், ஆர்வத்துடனும் பகிர முயல்வது கி.ராஜநாராயணனின் இயல்பு.

பிரஞ்சுக் கலாசாரம் உன்னதமானது என்கிறார், கி.ரா. பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அதுதான் நோக்கம். சந்தோஷமா எப்படி வாழறது? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா வாழணும். அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கலை. அட, விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு. விருப்பம்போல வாழலாம். புடிச்சவங்களோட சேர்ந்து வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம். இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் தெரியும். அம்மாதான் நம்மளோட அம்மா, நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது. ஊருக்கும் தெரியும். யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை. சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது. நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம் என்கிறார், கி.ரா.

கி.ரா எழாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லை. ஆனால் புதுவை மத்திய பல்கலை கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர். சிறு வயது முதலே எலும்புறுக்கி நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டவர். சர்க்கரை நோயாளியாக இருந்த போதிலும், 95 வயதை எட்டியுள்ளார்.

Ki Rajanarayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment