சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 45ஆவது புத்தக கண்காட்சி இன்றுடன் (06-03-2022) நிறைவடைகிறது.
பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி, 19 நாட்கள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி, ஓமிக்ரான் பரவலின் காரணமாக பிப்ரவரி மாதம் தள்ளிவைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் 14 நாட்கள் மட்டுமே நடக்கின்ற இந்த புத்தக கண்காட்சி, இந்த முறை மேலும் ஐந்து நாட்கள் நடைபெறுவதால் வாசகர்களின் எண்ணிக்கையும், புத்தகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சியில் 800 விற்பனையாகங்கள், 500 பதிப்பாளர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட வருகை தந்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவலின் காரணமாக டிக்கெட்டுகள் இணையதளத்தின் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 50,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் 10 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று சில விற்பனையகத்தில் 30 முதல் 40 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், புத்தகம் வாங்குவதற்கு வாசகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த 45ஆவது புத்தக கண்காட்சியில், 800 விற்பனையாகங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் கண்காட்சியும், கவிதை மற்றும் கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா, நடமாடும் அறிவியல் கண்காட்சி ஊர்தி என்று பல்வேறு தரப்பில் பார்வையாளர்களை ஆர்வத்துடன் வைத்திருந்தது.
கடந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்தமுறை 5 லட்சம் வாசகர்கள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil