44th Chennai Book Fair begins, Kamal Haasan to recommend one book a day : சென்னை நந்தனம் அருகே அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி கோலகலமாக ஆரம்பமானது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். எப்போதும் பொங்கல் விடுமுறை காலத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புத்தக கண்காட்சி நிகழ்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
“புத்தக கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைக்க எனக்கு வாய்ப்பளித்த பபாசிக்கு நன்றி. அனைத்து வாசகர்களும் புத்தக கண்காட்சிக்கு வேடிக்கை மட்டும் பார்க்க வராமல், புத்தகங்களையும் வாங்கி படித்து அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளை உள்வாங்கி தினமும் பின்பற்ற வேண்டும்” என்று ஓ.பி.எஸ். கூறினார்.
கொரோனா தொற்றுக்கு நடுவே புத்தக கண்காட்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பபாசி. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு புத்தககண்காட்சி நடைபெற உள்ளது. மார்ச் 9ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் 650 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி துவங்கி இரவு 8 மணி வரை, மார்ச் 9ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. மக்கள் நீதிமய்யம் கமல் ஹாசன், இளைஞர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தினமும் ஒரு புத்தகம் குறித்து அறிவிக்க இருப்பதாக கூறினார்.
தொலைக்காட்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. ஒரு சிலர் தற்போது கிண்டல் மற்றும் இதர இணைய தளங்கள் மூலமாக படித்து வருகின்றனர். இந்நிலையில் புத்தகக்கண்காட்சி அவசியமா என்று பலரும் கேட்பதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை கண்டிப்பாக புத்தக கண்காட்சி தேவை. இது நம்முடைய உயர்ந்த வரலாற்றையும் அறிவினையும் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்வாகும். இந்த நிகழ்விற்கு பின்னால் பணம் மட்டுமே குறிக்கோள் அல்ல. தமிழ் கலாச்சாரம் குறித்து ஒருவர் அறிந்து கொள்ள விரும்பினால் அவர் நிச்சயமாக இந்த புத்தக கண்காட்சிக்கு வரவேண்டும், தமிழில் எத்தனை பிரிவுகளில் எத்தனை லட்சம் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்றும் இம்மொழியில் எத்தனை அறிஞர்கள் இருக்கிறார்கள் என்றும் அப்போது தான் அறிந்து கொள்ள முடியும். இந்த கலாச்சார நிகழ்வு வாசகர்கள், எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்று கூட்டும் நிகழ்வாகும்.
கோவா திரைப்பட விழா போன்றும் ஜெய்ப்பூர் கலாச்சார விழா போன்றும் சென்னை புத்தக கண்காட்சி மிகப்பெரிய நிகழ்வாகும். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பபாசி தொடர்ந்து புத்தக கண்காட்சியை நடத்தி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார் கமல்ஹாசன்.
சென்னை மக்கள் தொகையில் பாதி நபர்களுக்கு நிச்சயமாக எழுத படிக்க தெரியும். 75 லட்சம் நபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றால், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். உலகம் அதனை வரவேற்கும். இன்று முதல், (புதன்கிழமை) புத்தக கண்காட்சி முடியும் வரை தினமும் ஒரு புத்தக்கத்தை என்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் வழியாக பரிந்துரை செய்வேன் என்ன்று கமல்ஹாசன் கூறினார். நேற்று அவர் புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புத்தகத்தை பரிந்துரை செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil