தமிழ் மொழியின் தொன்மையை கண்டறிவதற்கு இலக்கிய நூல்களை ஆராய்ந்தாலே போதும், மக்களுக்கு தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பது தெரிந்துவிடும்.
அப்படிப்பட்ட நூல்களான தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 46 படைப்புகளை பிரெய்லியில் வெளியிட உள்ளனர்.
பார்வையற்றோர் நலனுக்காக, திருக்குறள் உள்ளிட்ட 46 சிறந்த தமிழ் இலக்கியப் படைப்புகளை பிரெய்லி எழுத்தில் வெளியிட செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் (CICT) திட்டமிட்டுள்ளது.
CICT இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் வெளியிட்ட அறிவிப்பில், "பார்வையற்றவர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் பிரெய்லி பதிப்பை நிறுவனம் இலவசமாக வழங்கும். மார்ச் மாதம் தொடங்கிய இப்பணி டிசம்பரில் நிறைவடையும்", என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பழங்கால படைப்புகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பண்டைய தமிழ் இலக்கியப் படைப்புகள் இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
“பழமையான தமிழ் இலக்கியப் படைப்பான தொல்காப்பியத்தை ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது. விரைவில், மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. மணிமேகலை (ஐந்து பெரும் காவியங்களில் ஒன்று) ஜப்பான், மலாய், சிங்களம் உள்ளிட்ட 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil