Advertisment

”எந்தவொரு கலை சார்ந்த படைப்பும் தடை செய்யப்படக் கூடாது”: பெருமாள் முருகன்

இந்த காலகட்டத்தில், பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் பெருமாள் முருகன் எதிர்ப்பின் வலிமையான சின்னமாக விளங்குகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”எந்தவொரு கலை சார்ந்த படைப்பும் தடை செய்யப்படக் கூடாது”: பெருமாள் முருகன்

இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் இணை ஆசிரியர் அம்ரித் லாலுடன், கலந்துரையாடும் எழுத்தாளர் பெருமாள் முருகன்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாதொருபாகன் நூலுக்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, “பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான்”, என பெருமாள் முருகன் அறிவித்தார். இப்போது, அவர் தமிழில் எழுதிய 10 சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘தி கோட் தீஃப் (மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமன்), கோழையின் பாடல்கள் (Songs of a coward) கவிதைத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பாளர் அனிருத்தன் வாசுதேவன்) உள்ளிட்ட புத்தகங்களுடன் இலக்கிய உலகுக்கு திரும்பியுள்ளார். கடந்த கால சர்ச்சைகள் குறித்து பெருமாள் முருகன் பேச விரும்பவில்லை. ஆனால், கலைஞர்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகும் இந்த காலகட்டத்தில், பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் பெருமாள் முருகன் எதிர்ப்பின் வலிமையான சின்னமாக விளங்குகிறார்.

Advertisment

அம்ரித் லால்: 2014-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீங்கள் ஓய்வில்லாத ஆனால் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தீர்கள். மாணவர்கள், இலக்கிய கூட்டங்கள், உங்களின் வாசகர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால், மாதொருபாகன் புத்தகத்தின் சர்ச்சைக்கு பின் அவையெல்லாம் மாறிவிட்டன. அவற்றை நீங்கள் திரும்பி பார்க்கும்போது ஒரு தனிமனிதராக, எழுத்தாளராக அவை உங்களை எப்படி மாற்றியுள்ளன?

2014-க்கு முந்தைய பெருமாள் முருகனாக நான் இப்போது இருந்திருந்தால், உங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருப்பேனா என தெரியவில்லை. நான் மிகவும் அமைதியான, ஒதுங்கியிருக்கக்கூடிய இயல்பைக் கொண்டவன். அப்படியிருக்கும்போது, வெளியுலக வெளிச்சத்துடன் என்னால் பொருந்திபோக முடியாது. ஒரு எழுத்தாளனாக நான் இறந்துவிட்டேன் என அறிவித்தபோது, சில காலம் கழித்து எழுத ஆரம்பித்தேன், ஆனால் அவற்றை பிரசுரிக்க வேண்டும் என்ற திட்டம் ஏதுமில்லை. அந்த சர்ச்சைக்கு முந்தைய காலகட்டத்தில் மிக அதிகமாக ஏறத்தாழ 200 கவிதைகள் எழுதியிருந்தேன். ஆனால், அதைவிட அதிகமான கவிதைகளை 2015-16 காலகட்டத்தில் எழுதினேன். அந்த கவிதைகள் நான் இயல்பு நிலைக்கு திரும்ப உதவின. என்னை நானே புதிய பாதையில் பார்க்கும் அனுபவமாக அது இருந்தது.

அம்ரித் லால்: ஒரு கதை சொல்லியாக பல படைப்புகளை படைத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் மாதொருபாகன். ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினரை அவற்றுள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அந்த சமூகத்தினர் எதிர்வினை ஆற்றுகின்றனர். அந்த கதைகளை ஒரு எழுத்தாளர் சொல்வதற்கான உரிமைகள் குறித்து அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர். ”எங்களின் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன” என கூறப்படும் இந்த காலகட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

என் குடும்பத்தில் 12-ம் வகுப்பை தாண்டி மேல்படிப்பு படிக்கும் முதல் தலைமுறை நான்தான். என் கிராமத்திலேயே முதல் பட்டதாரி நான் தான். அதனால், வாய்மொழி கலாச்சாரம் என் மனதில் பதிந்துபோன ஒன்று. நான் எழுத்துகளை கற்றறிந்தாலும், வாய்மொழி கலாச்சாரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. நான் ஒரு கல்வியாளனாக உருவானதே, வாய்மொழி வரலாற்றை பதிவு செய்ய எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான். அதனால்தான், நான் பேச்சுவழக்கு குறித்த அகராதியையும், நாட்டுப்புறவியல் குறித்த தொகுப்பையும் தொகுத்தேன். என்னுடைய படைப்புகளிலும் இதனை நான் பயன்படுத்தியுள்ளேன். வாய்மொழி கலாச்சாரம் ஒரு விஷயத்துக்கு பல சிறப்பம்சங்களை தரும். யார் அதை சொல்கிறார், எந்த சூழலில் சொல்கின்றார் என்பதை பொறுத்து, அவை பல அர்த்தங்களை தெரிவிக்கும். பல கதைகளை கேட்டறிந்ததன் மூலம், ஒரு விஷயத்திற்கு பல கண்ணோட்டங்களை உருவாக்கும் மனநிலையை பெற எனக்கு உதவிகரமாக அமைந்தது.

வாய்மொழி கதைகளை எழுத்துகளாக பதிவு செய்யும்போது, எழுதப்பட்ட வார்த்தையுடன் தொடர்புடைய ஒரு பயம் நிலவுகிறது. என்னுடைய வீட்டிலும், கடிதம் வரும்போது ஒருவித இனம்புரியாத பய உணர்வு மேலோங்கும். வாய்வழி கதைகளை எழுதும்போது, இந்த பழைய -பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என நம்புகிறேன்.

அம்ரித் லால்: ஒரு சமூகம் வளரும்போது, அரசியல் பரிணமிப்பதாக நம்பப்படுகிறது. ஜாதி, சமூகம் அல்லது மதம் போன்ற பழங்குடி அடையாளங்களிடமிருந்து, வர்க்க அடையாளங்களைப் போலவே நாம் இன்னும் பொதுவான ஒன்றை நோக்கி செல்கிறோம். சாதி எதிர்ப்பு அல்லது சமூக நீதி இயக்கங்களின் நீண்ட வரலாற்றைக் கண்ட தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், பழைய அடையாளங்கள் புத்துயிர் பெறுவதை நாம் காணலாம். தனிமனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு பதிலாக, இனவாத உரிமைகள் திரும்புவது போன்று தெரிகிறது. இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் 20-ஆம் நூற்றாண்டில் பெரியாரிய மற்றும் மார்க்சிய இயக்கங்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டன. முக்கியமாக சாதி ஒழிப்புக்காக அந்த இயக்கங்கள் முக்கிய பங்காற்றின. இன்றும் கூட “தமிழ்நாடு பெரியார் பிறந்த மண். இங்கே ஒன்றும் நடக்காது” என்ற தைரிய உணர்வு இருக்கிறது. நூற்றாண்டுகளாக தொடர்ந்து பதிந்துபோன சாதியை ஒரேயொரு பெரியாரால் மட்டும் ஒழித்திட முடியாது. இன்றைய சூழல் அதைத்தான் காட்டுகிறது. பெரியார் அதுகுறித்த உரையாடலை உருவாக்கினார் என்றுதான் சொல்லமுடியும். எல்லா தரப்பினரும் தங்களின் குரலை முன்வைப்பதற்கான இடைவெளியை பெரியார் உருவாக்கினார். அவர் உருவாக்கிய இந்த உரையாடலை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆனால், யாரும் அதனை செய்வதாக தெரியவில்லை.

சோபனா சுப்பிரமணியன்: தமிழ்நாடு போன்று உயர்கல்வி அறிவு கொண்ட ஒரு மாநிலம், கல்வியில் பெரும் சாதனையை புரியவில்லையா?

கல்வி எழுத்தறிவை தருகிறது. ஆனால், அது சிந்தனையை தூண்டும்படி இல்லை என நான் நினைக்கிறேன். பள்ளி பாடத்திட்டத்தில் சாதியம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து எந்தவொரு பாடங்களும் இடம்பெறுவதில்லை. அவற்றை வகுப்பறைக்கு வெளியேதான் கற்றுக்கொள்ள வேண்டும். ’ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு.

முசாமில் ஜலீல்: இந்த நாட்டில் எல்லா அரசியலும் சாதியை மையமாக வைத்துதான் நடைபெறுகின்றன. பத்மாவதி சர்ச்சையிலும், ராஜ்புட் சமூகத்தினர், மத்திய அரசுடன் தொடர்புடைய குழுக்கள், இந்தியா முழுவதும் ஒரு பெரிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறதே...

நாவல், கலை, ஓவியம் என எதுவாக இருந்தாலும், அதற்கென ஓர் இடம் இருக்க வேண்டும். அதுகுறித்த விவாதங்களை நீங்கள் முன்னெடுக்கலாம். ஆனால், எந்தவொரு கலை சார்ந்த படைப்புகளும் தடை செய்யப்படக்கூடாது, நிறுத்தப்படக்கூடாது.

publive-image

ஷாலினி நாயர்: மாதொருபாகனுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்த புத்தகம் குழந்தை இல்லாத தம்பதியர் சமூக அழுத்தத்திற்கு இரையாவது குறித்ததுதான் எனவும், அதனால் அப்புத்தகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் கூறியது. ஆனால், இது சற்று சிக்கலானது அல்லவா? ஒரு எழுத்தாளர் அவர் விரும்பிய எதையும் எழுதலாம், அதனை அவர் நியாயப்படுத்த வேண்டியதில்லையே?

ஒரு எழுத்தாளர் தன் படைப்புகளுக்கு நியாயம் கூற வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். ஒரு படைப்புக்குள்ளேயே அதற்கான நியாயம் இருக்கும். நீதிமன்றம் பல கோணங்களில் யோசித்து அந்த தீர்ப்பை வழங்கியது. எனக்கும் அந்த தீர்ப்பு குறித்து பல கோணங்கள் இருக்கின்றன. ஆனாலும், அது நல்ல தீர்ப்பென நான் நம்புகிறேன்.

லிஸ் மேத்யூ: தமிழ்நாடு பல தலித் இயக்கங்களை பார்த்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990-களிலேயே தொடங்கப்பட்டது. ஆனாலும், தமிழ்நாடு அரசியல் இரு கட்சிகளை சார்ந்துதான் இயங்குகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் தலித் இயக்கங்கள் பங்கு வகிக்க அவர்களுக்கு என்னன்ன வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

90-களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தலித் இயக்கங்கள் பெருமளவில் நுழைந்தன, அவை முக்கிய பங்காற்றியிருக்கின்றன. நேர்மறையான விளைவுகளும் அவற்றால் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றுள் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கியமான ஒன்று. இந்த இயக்கங்கள் ஒரு பொது அடையாளத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றன. அது ஒரு நல்ல விஷயம்.

ரவிஷ் திவாரி: தமிழ்நாடு கடந்த நூறு ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட சமூக நீதி இயக்கங்களை கண்டுள்ளது. அப்படியிருக்கும்போது, இந்த காலகட்டத்தில் நாம் இன்னும் கூடுதலான குடியரசு அல்லது சமத்துவ சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் நிலவும் சாதியம், தலித்துகளுக்கு எதிரான வன்முறையைதான் நாம் பார்க்கிறோம். ஏன் இன்னும் இந்த பாரபட்சம் அதிகரித்திருக்கின்றன?

நூறு ஆண்டுகள் என்பது மிக குறுகிய காலம். இந்த இடைவெளிகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக திரட்டப்பட்ட பாரபட்சங்களை முற்றிலும் அழிக்க முடியாது. பெரியார் செய்தது என்னவென்றால், ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார். இந்த பாரபட்சத்தை முற்றிலுமாக ஒழிக்க, இன்னும் 300 அல்லது 400 ஆண்டுகள் ஆகலாம்.

சௌமியா அஷோக்: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவியது. காலநிலை மாற்றம் கடும் பிரச்சனையாக உருவெடுத்தது. அவற்றை உங்கள் நாவல்களில் பிரதிபலித்தீர்களா?

சமூகத்தில் உடனடியாக நிலவும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு எழுத்தாளர் உடனேயே எதிர்வினையாற்ற முடியாது. அதனை படைப்புகளில் பிரதிபலிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. வறட்சி புதிய பிரச்சனை அல்ல. கடந்த இரண்டு நூற்றாண்டுகளை நோக்கினால், இதுபோன்ற பிரச்சனைகள் பலமுறை ஏற்பட்டிருக்கின்றன. நானே அதனை அனுபவித்திருக்கிறேன். தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்தவன்தான் நான். ’பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்ற எனது நாவலில் வறட்சியின்போது மக்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள், அவற்றின் துயரங்கள், அவர்களுடைய வாழ்க்கை அதனால் எவ்வாறு மாறுகின்றது என்பது குறித்து எழுதியுள்ளேன்.

வந்திதா மிஸ்ரா: சகிப்பின்மை நிலவும் இந்த காலகட்டத்தில் எழுத்தாளரின் பங்கு என்ன?

“இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா? இருக்கும். அது இருண்ட காலங்களை பற்றியதாக இருக்கும்.” என்ற பெர்டால்ட் ப்ரக்ட் மேற்கோள் உள்ளது. எக்காலத்திலும் கலைஞர்கள் அக்காலத்தின் பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றுவார்கள். அதிலும், குறிப்பாக கவிதைகள் விரைந்து செயல்படும். அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும், நேரடியாக இருக்குமா அல்லது மறைமுகமாக இருக்குமா என்பதை கூறுவது கடினம். ஆனால், அவை கலைத்துவத்துடன் இருக்கும்.

முசாமில் ஜலீல்: எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு கோபம் இருக்கும். ஒரு எழுத்தாளனாக உங்களின் கோபம் என்ன? உங்களின் நடைமுறை என்ன? நீங்கள் கையால் எழுதுவீர்களா? அல்லது கணினியை உபயோகிக்கிறீர்களா? நீங்கள் இப்போது எழுதும்போது பயப்படுகிறீர்களா? அந்த சர்ச்சைக்கு பிறகு, நீங்கள் எழுதும்போது அவை உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்குமா?

ஷைலஜா பாஜ்பாய்: முசாமில் கேள்வியையொட்டி இதனை கேட்கிறேன். மாதொருபாகன் சர்ச்சைக்கு பிறகு நீங்கள் இன்னும் தைரியமானவராக மாறியிருக்கிறீர்களா? இன்னும் திறந்த மனதுடன் எழுத வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது உங்களுக்குள்ளேயே எழுத்துகளை தணிக்கை செய்துகொள்வீர்களா?

2005 முதல் நான் கணினியை உபயோகப்படுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. மனதில் வேகமாக ஓடக்கூடிய விஷயங்களை கணினியில் தட்டச்சு செய்யும்போது வேகமாக அதனை செய்ய முடிகிறது. ஆனால், எழுதும்போது வேகமாக செய்ய முடிவதில்லை.

எனக்கு பல கற்பனைகள் பெரும்பாலும் பயணங்களின்போதுதான் தோன்றும். கவிதை என்பது அந்த சமயத்தில்தான் தோன்றும். ஆனால், சிறுகதையோ, நாவலோ மனதுக்குள் தொடர்ந்து அதுகுறித்து யோசித்தால்தான் ஒரு வடிவத்திற்கு வரும். அதன்பிறகுதான் அவற்றை உட்கார்ந்து எழுத முடியும். அதன்பிறகு, புத்தகத்தின் பக்கங்களை பொறுத்து ஒரு மாதமோ, இரண்டு மாதங்களுக்குள்ளாகவோ அவற்றை முடிப்பேன். நள்ளிரவில் எழுதுவதுதான் எனக்கு பிடித்தமான நேரம். அதிகாலை ஒருமணி முதல் 4 மணிவரை எந்தவொரு இடையூறும் இல்லாமல் எழுத முடியும்.

2014-க்கு முன்புவரை நாம் நினைத்ததெல்லாம் எழுதலாம், அதற்கான இடைவெளி இங்கு உண்டு என்றுதான் நான் எண்ணினேன். குறிப்பாக 90-களுக்கு பிறகு, பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவை தமிழகத்தில் வளர துவங்கியபிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற இடைவெளி இங்கு உள்ளது என நினைத்தேன். ஒரு நல்ல சூழல் இருக்கும் நேரத்தில் நான் எழுத்தாளனாக இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் முன்னோர்கள் பேசாத பல விஷயங்களை நான் பேசியிருக்கிறேன். ’பீ கதைகள்’ என்ற தொகுப்பையும் எழுதியிருக்கிறேன். அப்பொழுது இருந்த மனநிலை இப்போது எனக்கில்லை. இப்போது ஒவ்வொரு வார்த்தையையும், வரியையும் எழுதுவதற்கு முன்பும், பின்பும் என இரண்டு முறை நான் யோசித்தே எழுதுகிறேன்.

எது என்னை எழுதுவதை நோக்கி நகர்த்துகிறது என்பதை விளக்குவது கடினம். என் குடும்பத்தில் யாரும் படித்தவர் இல்லை என்ற உண்மையிலிருந்து எனக்கு எழுத வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். எனக்கு 8 அல்லது 9 வயதாக இருக்கும்போதே நான் எழுத துவங்கிவிட்டேன். நான் யாரிடமும் அவ்வளவு எழுதில் பேச மாட்டேன். கூட்டமாக இருந்தால் நான் ஒதுங்கிக்கொள்வேன். எழுதுவதுதான் என்னை நான் வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைந்தது. அன்றைய நாளில் என்ன முக்கியமாக நடந்ததோ அவற்றையெல்லாம் நான் எழுதுவேன். இப்படி பல டைரிகள் நான் எழுதியுள்ளேன். எழுதுவதுதான் என்னுடைய இயல்பின் ஒருபகுதி என உணர்கிறேன்.

ஷாலினி லங்கர்: கோழைத்தனம் என்ற வார்த்தை உங்களுக்கு பொருந்தாத ஒன்று. அப்படியிருக்கும்போது, கோழையின் பாடல்கள் என உங்கள் கவிதை தொகுப்பிற்கு பெயர் வைக்க காரணம் என்ன?

ஒரு கவிதையின் பின்னால் உள்ள சிந்தனை குறித்து விளக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவன் அதனை வாசித்து, அதற்கு வழிநடத்திய அனுபவத்தை பெற வேண்டும். நான் அதன் ஒரு கோணத்தை பேசியிருப்பேன். 'கோழைத்தனம்’ என்ற வார்த்தையை மற்றவர்கள் என்னை நோக்கி கூறினார்கள். அவர்களுக்கான பதிலாகத்தான் ’கோழை’ என்ற பெயரை வைத்திருக்கிறேன்.

கிரிஷ்ன் கௌஷிக்: மாதொருபாகன் சர்ச்சைக்கு பிறகு ’பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான்’ என அறிவித்தீர்கள். ஆனால், அதற்கு பிறகு 200 கவிதைகளை எழுதியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளனாக உங்களை உயிர்த்தெழ வைத்தது எது?

எழுதுவது என்பது என்னுடைய இயல்பின் ஒரு அங்கம். ஆனால், அந்த கவிதைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எழுதவில்லை. என்னுடைய அறிவிப்புக்கு பிறகு சிறிது காலத்திற்கு எழுதும் ஆர்வம் இல்லை. ஆனால், 30, 40 ஆண்டுகளாக எழுதுவதால், அந்த கவிதைகள் தானாகவே பொங்கி வழிந்தது. இதை நான் இப்படித்தான் விளக்க முடியும். எதையுமே நீக்காமல், என் மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அவற்றையெல்லாம் எழுதினேன். எனக்கு அவை மனதளவில் புத்துயிர்ப்பை தந்தது.

உஷிக்: நீங்கள் எழுதும்போது தேசிய அளவில் என்னவெல்லாம் நடக்கிறதோ அவையெல்லாம் உங்கள் மனதில் ஓடுமா? அதாவது, இந்து, இந்தியன் என்றால் என்ன என்பது குறித்து வலதுசாரிய அமைப்புகள் திணிப்பது குறித்து?

இம்மாதிரியான சவாலை எதிர்கொள்ளும்போது, ஒவ்வொரு எழுத்தாளும் அதனை கவிழ்க்க புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பார்கள்.

முசாமில் ஜலீல்: பழைய நேர்காணல் ஒன்றில், உங்களுக்கும், உங்களின் அம்மாவுக்குமான உறவு குறித்து கூறியிருப்பீர்கள். நீங்கள் சிறு பிள்ளையாக இருக்கும்போது, உங்களின் தந்தை சோடா கடை வைத்திருந்தார், அங்கு எல்லா சாதியை சேர்ந்தவர்களும் வருவார்கள். நீங்கள் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, உங்களின் தாய் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டபோது, தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை உதவிக்கு அமர்த்தியபோது, நீங்கள் எதிர்பார்த்ததுபோல் உங்கள் தாய் நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பிரச்சனைகள் உங்களின் கதைகள் மற்றும் கவிதைகளின் கருப்பொருளாக மாறியதா?

அம்ரித் லால்: உங்களின் நிழல் முற்றம் நாவலில், நீங்கள் வளரும்போது, நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உருவானது குறித்து எழுதியிருந்தீர்கள். நீங்கள் சினிமா குறித்து எழுத வேண்டும் என தேர்ந்தெடுத்தபோது, திரையரங்கின் வெளியே வேர்க்கடலை, சோடா விற்பவர்கள் குறித்து எழுதினீர்கள். உங்களின் எழுத்துகளில் சுயசரிதையின் கூறுகள் எந்தளவில் உள்ளன

என் அம்மாவுடனான அனுபவங்கள் என்ன பெருமளவில் பாதித்தன. நான் என்னை ஒரு ‘அம்மா பிள்ளை’ என்றுதான் விவரிக்க வேண்டும். ஆனால், என்னுடைய அம்மா எந்தவித பாரபட்சத்தையும் கொண்டிருக்க மாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால், என்னுடைய திருமணத்தின்போது கிராமத்தினர், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என அம்மா நினைத்தது எனக்கு அதிர்ச்சியை தந்தது. அதேபோல், பார்கின்சன் நோய் ஏற்பட்டபோதும், தலித் ஒருவரால் தான் கவனிக்கப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

என்னுடைய அம்மா ஒரு அறிவார்ந்த பெண் என நினைக்கிறேன், அவரால் எழுதவோ, படிக்கவோ தெரியாவிட்டாலும், வீட்டின் அனைத்து கணக்குவழக்குகளையும் சரிவர கையாள்வார். சில விஷயங்களை அறிந்துகொள்ள தயங்கினாலும், மிக எளிதில் அவற்றை கற்றுக்கொள்வார். செல்ஃபோனை எப்படி உபயோகிக்க வேண்டும் என நான் கற்றுத்தந்தேன். ஆரம்பத்தில் அதை அவர் விரும்பாவிட்டாலும், பிறகு எனக்கு அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொள்வார். எளிதாக அதனை கையாள கற்றுக்கொண்டார். எங்கள் கிராமத்தை தாண்டி அவரால் வளர முடியவில்லையே என எனக்கு வருத்தம். இன்னும், அவருடைய செல்ஃபோன் எண்ணைத்தன், நினைவாக பயன்படுத்துகிறேன். இரண்டாவது கேள்விக்கு பதில், என்னுடைய முதல் மூன்று நாவல்கள் என் சொந்த அனுபவத்தின் தாக்கத்தில்தான் எழுதினேன். யார் எதுகுறித்து எழுதினாலும், தங்களின் சொந்த அனுபவங்களுக்கென அவற்றுள் சிறிய இடம் இருக்கும்.

அம்ரித் லால்: புதிய சவால்களை சமாளிக்க எழுத்தாளர்கள் புதிய வழிகளை கண்டறிவார்கள் என கூறினீர்கள். இப்போது, நீங்கள் தமிழ் இலக்கியம் மற்றும் கர்நாடக இசையின் பின்னணியில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை துவங்கியுள்ளீர்கள். நீங்கள் கீர்த்தனைகள் எழுதவும் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களுடைய கீர்த்தனைகளை இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இசை கச்சேரிகளில் பாடுகிறார். இதை எப்படி தொடங்க வேண்டும் என தோன்றியது?

கர்நாடக இசையின் தொழில்நுட்ப அம்சங்களை நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் நான் அதை உற்சாகமாக கேட்கிறேன். அதேபோல், 1940, 1960-களின் தமிழ் பாடல்களை விரும்பி கேட்பேன். டி.எம்.கிருஷ்ணாவுடன் ஒன்றிணைந்த இந்த முயற்சி தற்செயலானது. கோழையின் பாடல்கள் எழுதியபின்பு, டி.எம்.கிருஷ்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எழுதிய சில கீர்த்தனைகளை பாடுமாறு அவரிடம் கேட்டேன். அப்போது, தனக்கு அந்த கீர்த்தனைகள் மிகவும் பிடித்திருப்பதாகவும், இசை கச்சேரிகளிலும் அவற்றை பாடுவதாகவும் டி.எம்.கிருஷ்ணா கூறினார். இதுவரை 4 இசை கச்சேரிகளில் என்னுடைய கீர்த்தனைகளை அவர் பாடியுள்ளார்.

கர்நாடக இசை பக்தியுடன் மட்டுமே பொருந்தும் என்று கூறும் நிலையில், மற்ற கருப்பொருள்களிலும் பாடப்பட வேண்டும் என டி.எம்.கிருஷ்ணா விரும்பினார். அவரின் கச்சேரிகளுக்கென 10 கீர்த்தனைகள் எழுதியுள்ளேன். அந்த கீர்த்தனைகளை பாடுவதற்காகவே அவர் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.

indianexpress.com இணையதளத்திலிருந்து

தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி

Madras Perumal Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment