தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீதான மீ டூ குற்றச்சாட்டுகளை புறக்கணித்து, புகழ்பெற்ற கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் நினைவாக உருவாக்கப்பட்ட விருதை வழங்க தேர்ந்தெடுத்ததற்காக நடிகர் பார்வதி ஓ.என்.வி இலக்கிய விருது நடுவர்களை வியாழக்கிழமை விமர்சித்தார்.
இந்த விருதை வைரமுத்துக்கு வழங்குவதன் மூலம் ஓ.என்.வி-யின் நினைவு அவமதிக்கப்படுகிறது என்று பார்வதி கூறியுள்ளார். இது குறித்து பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓ.என்.வி சார் நம்முடைய பெருமை. கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அது நமது கலாச்சாரத்தை வளர்த்துள்ளது. அவரது உழைப்பின் மூலம் நம் இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கி மரியாதை அளிப்பது மிகவும் அவமரியாதைக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மீ டூ இயக்கம் எழுந்ததை அடுத்து, பல பெண்கள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வைரமுத்து எதிர்கொண்டார். “17 பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை வெளியே கொண்டுவந்தனர். இன்னும் எத்தனை பேருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. அநீதி இழைக்கப்படுபவர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்க போதுமான அளவு ஆதரவு இருக்கிறது என்று தெரிகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் நற்பெயரை நிலைநிறுத்துவதற்கு மட்டுமே ஆதரவு இருக்கிறது. மனிதநேயத்தை விட வேறு எதுவும் முக்கியமில்லை. கலை vs கலைஞன் என்ற விவாதத்துடன் நீங்கள் என்னிடம் வந்தால், கலையை உருவாக்கும் நபரின் மனிதநேயம் மட்டுமே நான் பார்க்கத் தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். முழுமையான தண்டனை இல்லாமல் வாழ்பவர்களின் கலை இல்லாமல் நான் வாழ முடியும்” என்று பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
பாடகி சின்மயி குறைந்தது இரண்டு முறை தனக்கு தொந்தரவை ஏற்படுத்தியதாக வைரமுத்து மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தனக்கு இணங்க மறுத்தால் அவருடைய வாழ்க்கை முடிந்துவிடும் என்று அவர் கூறியதாக சின்மயி தெரிவித்தார். சின்மயி கூறிய மீ டூ புகார் வைரமுத்து மீது தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.
“இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நடுவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துக்கு இந்த மரியாதையை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்துவது?” என்று பார்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கர்நாடக இசைக் கலைஞரும் சிந்தனையாளருமான டி.எம்.கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் துன்புறுத்தல் செய்பவர் என்று பல பெண்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு நமது சமூகம் எப்படி மரியாதை செய்கிறது? இதுதான் அவர்களுக்கு அதிக பலத்தை அளிக்கிறது. இது முற்றிலும் வெட்கக்கேடானது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ.என்.வி பண்பாட்டு அகாடமி, ஓ.என்.வி குருப் மறைவுக்குப் பிறகு, 2016ம் ஆண்டில் ஓ.என்.வி இலக்கிய விருதைத் தொடங்கியது. இந்த விருது மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசுடன், பாராட்டுப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“