2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின், குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.
2017-ம் ஆண்டு, மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாடமி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
தோழமை இருள், இரவுகளின் நிழற்படம், அமுத பருவம், வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுப்பு, நாவல்களும் எழுதி தமிழ் இலக்கிய உலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர் யூமா வாசுகி.
இதேபோல 2024-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“