எஸ். செந்தில்குமார்
தமிழில் சிறுகதைத் தோன்றி ஒரு நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டது. சிறுகதையின் வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் குறிப்பிட்ட வகை எழுத்தும் போக்கும் அதை உருவாக்கும் சிறுகதை ஆசிரியர்களும் தமிழ் சூழலில் உருவாகி வருகிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்தையும் தமிழ் சிறுகதை வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தும் நோக்கத்தோடும், அதேவேளையில் கலைநுட்பம் கூடிய உலக அளவில் பேசும்படியான கதைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.
இச்சூழலில் புதிய முயற்சியாக நாவலாசிரியர் ஜோ டி குருஸ் தொகுத்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கும் ‘புது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற தொகுப்புநூல் சமகாலத்தின் கலை ஆவணங்கள் என்று பாராட்டும்படியாகயுள்ளது. தமிழகத்தின் பிராந்தியங்கள், சாதிய உள்ளடுக்குகள், மொழிரீதியான பண்பாட்டுரீதியானவற்றை உரைநடை இலக்கியம் பிரதிபளிக்கிறது என்று உறுதியாக சொல்லவேண்டும். கி.ரா ஒரு நேர்காணலில் “ஒரு மொழியில் இலக்கியம் தோன்றியது கதையில் தான். கதை சொல்வதுதான் நமது பாரம்பரியம்” என்று குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
அவ்வகையில் உரைநடை இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் தமிழ் சிறுகதைகள் சிறப்பான இடத்தை அடைந்துள்ளன என்பதற்கு இந்த நூல் அடையாளமாகும். கடந்த பத்தாண்டு கால சிறுகதைப் போக்கில் ஆகச்சிறந்த கதைகளை எழுதிய கதாசிரியர்களின் கதைகளை தேர்வு செய்திருக்கிறார் தொகுப்பாசிரியர்.
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு எழுத வந்த யூமா வாசுகி, சு.வேணுகோபால், அசதா, கண்மணி குணசேகரன், அழகியபெரியவன், என். ஸ்ரீராம், எம்.கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார், சந்திரா, க.சீ.சிவகுமார், உமாமகேஸ்வரி, செல்வராஜ், மலர்வதி, கார்த்திக்புகழேந்தி, குறும்பனை சி. பெர்லின், போகன்சங்கர், ஆமருவிதேவநாதன், ஆன்றனிஅரசு, கவிதாசொர்ணவல்லி, தூரன்குணா, தாமிரா, பாஸ்கர்சக்தி, ப்ரியாதம்பி, நெப்போலியன் ஆகிய 24 சிறுகதையாளர்களை காலவரிசையில் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுகதையாளர்களின் மனவுலகத்தை எளிதில் கண்டடைந்துவிட முடியாது. ஆனால் இவர்களது ஒரு கதையின் மூலமாக ஒட்டுமொத்தமாக இவர்களது வாழ்நிலத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியுமென்கிற அளவிற்கு குருஸ் கதையை தேர்வு செய்திருக்கிறார். குறிப்பாக, சு.வேணுகோபலின் புற்று என்கிற சிறுகதை பெண் நாய் குட்டியை வளர்ப்பதில் தொடங்கும் குழந்தைகளின் ஆர்வம், அக்குழந்தைகள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குப் போகும் துயரத்தை எடுத்துச் சொல்கிறது. கண்மணிகுணசேகரனின் சுருக்கு என்கிற சிறுகதை திருமணம் முடிந்த பெண் தனது கணவனால் சந்தேகத்திற்குள்ளாக்ப்படுவதை நெய்வேலி கடலூர் மாவட்ட மொழியில் அழகாக எழுதியிருக்கிறார். செல்வராஜ் எழுதிய நண்டு என்கிற சிறுகதை சேசடிமை என்கிற மீன் பிடிக்கும் தொழிலாளியின் கதையையும் அந்நிலப்பரப்பின் வாழ்வியலோடு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. கன்னியாகுமாி மாவட்டத்தின் வட்டார மொழியை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இதுபோல மலர்வதியின் கருப்பட்டி கதையையும் சொல்ல வேண்டும். பனையேறும் தொழிலாளர்களைப் பற்றிய கதை. இத்தொகுப்பில் ஆகச்சிறந்த கதையாக அசதா எழுதிய வார்த்தைப்பாடு என்கிற சிறுகதையைச் சொல்லவேண்டும். வறுமையின் காரணமாக பெண் பிள்ளைகள் கன்னிகாஸ்தரீயாக மாறும் அவலத்தை ஒரு கிறிஸ்த்துவக் குடும்பத்தின் பின்னனில் எழுதியிருக்கிறார்.
புதிய எழுத்தாளர்களான நெப்போலியனின் இப்படிக்கு தங்கபாண்டி, ஆன்றனி அரசுவின் சொல்லிச் சென்ற கதை, கார்த்திக் புகதேழந்தியின் வெட்டும்பெருமாள், ஆமருவி தேநாதன் எழுதிய ஸார் வீட்டுக்குப் போகணும் குறும்பனை சி.பெர்லன் எழுதிய உசுரு கெடந்தா புல்லப் பறிச்சு தின்னலாம் ஆகிய கதைகள் தங்களது மண்ணையும் அம்மக்களின் துயரங்களையும எடுத்துச் சொல்கிறது.
சந்திராவின் கள்வன் பாஸ்கர்சக்தியின் அழகர்சாமியின் குதிரை ஆகிய இரு கதைகளும் தேனிமாவட்டத்து உட்கிராமத்தின் சித்திரங்களையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வியலையும் கேலியும் வேதனையுமாக பதிவு செய்கிறது. இத்தொகுப்பில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதை பெருமளவில் இடம் பெறவில்லை. விலக்காக போகன்சங்கர் மற்றும் தூரன் குணா ஆகியோரின் கதையைத் தவிர. அதேநேரத்தில் குரூஸ் தன்னுடைய தேர்வில் எதார்த்தமான கதைகளையே பெரும்பாலும் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன சிறுகதையின் போக்குகளையும் கதையுலகத்தையும் கதாசிரியர்களையும் முழுமையாக தெரிந்துக் கொள்ள இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுதியாகச் சொல்லவேண்டும்.
புதுஎழுத்து தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு: ஆர்.என்.ஜோ டி குருஸ்.
வெளியீடு:இயக்குநர் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா நேருபவன் 5,இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, ஃபேஸ் -II வஸந்த் குஞ்ச், புதுதில்லி—110070.விலை ரூ 295/-
(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.