Advertisment

'ஆண்களுக்கு நிகரான பொதுவெளியை பெண்களுக்கு உருவாக்கிய பிரபாகரன்': வைகோ- திருமா பங்கேற்ற விழாவில் புகழாரம்

Book released by May 17 Iyakkam about women empowerment in Tamil Eelam: "தமிழ்பெண் பொதுவெளி - தமிழீழத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்"; புத்தகம் வெளியீட்டு விழா; வைகோ, திருமாவளவன், திருமுருகன் காந்தி சிறப்புரை

author-image
WebDesk
New Update
'ஆண்களுக்கு நிகரான பொதுவெளியை பெண்களுக்கு உருவாக்கிய பிரபாகரன்': வைகோ- திருமா பங்கேற்ற விழாவில் புகழாரம்

ஜனனி நாகராஜன்

Advertisment

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் சார்பில் நிமிர் பதிப்பகம் வெளியீட்டில் ந.மாலதி எழுதிய "தமிழ்பெண் பொதுவெளி - தமிழீழத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் எழும்பூரிலுள்ள ம.தி.மு.க தலைமையகம் தாயகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்றது.

publive-image

இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, விசிக தலைவரும் திருமாவளவன் எம்.பி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ, மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பேராசிரியர் சரஸ்வதி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக எம்.பி கணேச மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

publive-image

"தலைவர் பிரபாகரனுடன் பயணித்த நாட்களை என் நாட்கள் முடிவதற்குள் ஒரு புத்தகமாக போடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறேன். சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ஹோ சி மின், லெனின் போன்று புரட்சிகளை நடத்தியவர்கள் உலகில் பலர் உண்டு. ஆனால், இவர்கள் அனைவரையும் விட ஆற்றல் மிக்கவராக, எந்த நாட்டினுடைய ஆதரவும் இல்லாமல், பக்கபலம் இல்லாமல், வல்லரசுகளை எதிர்த்து, வான்படை, கடற்படை, தரைப்படை என்று மூன்று வகை படைகளையும் அமைத்தார் பிரபாகரன்."

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

publive-image

“தமிழீழ விடுதலைப் போராட்டக்களத்தில் ஆயுதம் ஏந்தி பெண்களும் நின்றார்கள் என்பதை உலகம் அறியும். ஆனால், பெண்கள் எப்படி காடுகளில், புதர்களில், பனியில், கடும் வெயிலில், கொடுங்குளிரில் பகையை எதிர்த்து போராட முடியும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்பு. இது எந்த அளவிற்கு இலகுவாக அதே நேரத்தில் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியப் பெருமைக்குரியவர் தலைவர் பிரபாகரன். நான் ஈழத்திற்கு சென்றிருந்தபோது இரவு நேரங்களில் காவலுக்கு நிற்பவர்களும் பெண் புலிகளாகத்தான் இருந்தார்கள். ஆயுதங்களை மிக இலகுவாக தாவணி போட்டுக்கொள்வதை போல சுமந்துக்கொண்டு, ஆணுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று உறுதிப்படுத்த தவறியதில்லை.”

இந்த புத்தகத்தின் முன்னட்டையில் இருக்கும் புகைப்படத்தை படம்பிடித்தவரின் பெயர் ஸ்டீவ் மகேர்ரி. 1995இல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஒரு ஆண் உழவு செய்துக்கொண்டிருப்பர் ஆனால் பெண் போராளிகள் துப்பாக்கி ஏந்தி விடுதலைக்காக போராடச்செல்வார்கள். இதுவே இந்த புகைப்படத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான அரசியலாகும். இதற்காகவே இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தினை நிமிர் பதிப்பகமும் மற்றும் மே பதினேழு இயக்கமும் இணைந்து மேக்னம் போட்டோஸ் என்ற நிறுவனத்திடமிருந்து காப்புரிமை பெற்று இந்த புத்தகத்திற்காக வாங்கியிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தொடர்ச்சியாக பல்வேறு பெண்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பவரும், பெண்களுடைய மறுவாழ்வு கட்டமைப்புக்கு பணியாற்றி வரும் பேராசிரியர் சரஸ்வதி பேசியதாவது:

publive-image

“மிகச்சிறந்த ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கின்ற 'தமிழ்பெண் பொதுவெளி' என்ற புத்தகத்தில் தமிழ்பெண்ணுக்கு ஒரு பொதுவெளி இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு தெளிவான விளக்கமும் கூறியிருக்கிறார். இந்த புத்தகத்தின் ஆசிரியரான மாலதி, ஈழத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த போராட்டம் தொடங்கியபோது தன் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார்; மேற்படிப்பு முடிந்த உடனேயே ஈழத்தில் போர் நடந்த 2005-ல் இருந்து 2009 வரையில், ஈழத்து மக்கள் மத்தியில் பணி புரிந்திருக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த அனுபவங்களை வைத்தும் தன்னுடன் பணியாற்றிய சக பெண் போராளிகளின் அனுபவங்களை வைத்தும் இந்த புத்தகத்தை தொகுத்திருக்கிறார்.

ஈழத்திலே ஆயுதப்போராட்டம் துவங்கிய காலத்திலிருந்து முள்ளி வாய்க்காலில் புலிகள் தனது தாக்குதலை மௌனித்த அந்த காலம் வரை நிகழ்ந்த நிகழ்வுகளை தனக்கு தெரிந்தவரை தான் சேகரித்தவரை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் ஆரம்பத்தில் விடுதலை போராட்டத்தின் வரலாற்றை கூறிவிட்டு, பின்பு மிக அதிகமாக பெண் போராளிகளின் பங்களிப்பை பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

வீடு பெண்ணுக்கென்றும் வெளியுலகு ஆணுக்கென்றும் கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாய அமைப்பில் பெண்களுக்கு பொதுவெளி என்று பெரிதாக இருந்தது கிடையாது; பொதுவெளி என்றால் சமுதாயத்தில், அரசியலில், பொருளாதாரத்தில், பண்பாட்டில், சமூகஅமைப்பில் எத்தனை தூரம் ஒரு நபருக்கு பங்கேற்பு கிடைக்கிறது என்பதை பற்றி கூறுவது தான். இந்திய கலாச்சாரத்தில் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு பொதுவெளி என்ற ஒன்று என்றும் இருந்தது இல்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்ட நீதி என்னவென்றால் வீட்டிற்குள்ளே ஒரு நல்ல தாயாக, நல்ல மகளாக, நல்ல மருமகளாக, குடும்பத்தின் குத்துவிளக்காக வாழ்வது மட்டும் தான்.

அதைத்தாண்டி வெளியே வருவதற்கு தேவையும் அவசியமும் கிடையாது என்ற ஒரு நிலையில் தான் இருந்தார்கள். இதை மாற்றவேண்டும் என்பதால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போராட்டம் துவங்கியதிலிருந்து தனது ராணுவத்தில் பெண்களுக்கு வாய்ப்பளித்து, போருக்கான பயிற்சி கொடுத்து அவர்களையும் துப்பாக்கி தூக்க வைத்து, எதிரிகளுடன் போர்புரியும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

ஈழத்துடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விடுதலைப் புலிகள் கெடுப்பதாக பலர் கூறியிருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் முன்னோக்கிய சிந்தனையுடன் பெண்களை ஆண்களுக்கு சமமாக வைத்தார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். 'நீங்கள் சமையல் சொல்லிக்கொடுத்தால் சமைப்பார்கள், ஆயுதம் ஏந்த சொல்லிக்கொடுத்தால் ஆயுதம் ஏந்தி போர் தொடுப்பார்கள்' என்று பிரபாகரன் அவர்கள் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலளித்தார். பெண்கள் அதிக எண்ணிக்கையில் அவர்களின் பாதுகாப்பை கருதித்தான் எல்.டி.டி.இ அமைப்பில் சேந்தார்கள் என்று கூறுபவர்களுக்கு இந்த புத்தகத்தில் மிகத்தெளிவாக பதில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பல பெண் போராளிகள் எல்.டி.டி.இ அமைப்பில் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்பதை அழகாக ஆசிரியர் குறிபிட்டுள்ளார். அந்த போராட்டக்களத்தில்கூட பெண்களுக்கு செவிலியர், மருத்துவர் என்ற பணிகளை கொடுக்காமல் ஆண்களுக்கு நிகரான பணிகளையும் பயிற்சிகளையும் பிரபாகரன் கொடுத்துள்ளார் என்பதை இந்த புத்தகம் குறிப்பிட்டுள்ளது. ஆக, பெண்கள் விடுதலை பெறாமல், பெண்கள் விழிப்புணர்வு அடையாமல், பெண்கள் முன்னேறாமல் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது என்ற தெளிவான சிந்தனையுடன் பிரபாகரன் செயல்பட்டார் என்பதை இந்த புத்தகம் கூறுகிறது.”  என்று கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் கூறுகையில்:

publive-image

"சிங்கள அரசாங்கத்தின் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வாள்வீச்சுகள், குண்டுவீச்சுகள், அநியாயங்கள், உலகத்தால் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுவீச்சுகள், ஏவுகணைகள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள் ஆகிய அத்தனையும் குண்டுமழை பொழிகின்ற காட்டிலிருந்து முற்போக்கு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். ஒருபக்கம் அந்த மண்ணின் விடுதலைக்கான ஆயுதம் தரித்த போராட்டம், மறுபக்கம் நீதித்துறை, காவல்துறை, நிர்வாகம் என்று எல்லாத்துறைகளிலும் கட்டமைப்புகளை உருவாக்கி சர்வதேசம் வியக்கக்கூடிய ஒரு தனித்தமிழீழ அரசை உருவாக்கிய அந்த தலைவனைப் பற்றிய குறிப்புகளை இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

வீரம் செறிந்த விடுதலை புலிகளின் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு  என்பது மகத்தான ஒன்றாக இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு சண்டைகளில் பெண் போராளிகளின் தியாகத்தை, அவர்களுடைய உறுதியை, அவர்களுடைய அர்ப்பணிப்பை, அவர்களுடைய தலைமைத்துவத்தை இந்த நூல் விவரிக்கிறது.

1967களிலே பெண்புலிகள் அங்கு நடந்த பல்வேறு சமூக மாற்றத்திற்காக பங்கெடுத்துக்கொண்டு அப்போதே அவர்கள் ஆயுதங்களை கையிலேந்தியிருக்கிறார்கள் என்ற செய்திகளையும் நூலாசிரியர் இந்த நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அங்கு இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் எப்படி படிப்படியாக தமிழீழ விடுதலைப்புலிகளோடு இணைந்தன, எப்படி பிரபாகரன் தலைமையை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற செய்திகளெல்லாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது. அதுபோன்று இஸ்லாமிய பெண்கள் விடுதலை புலிகளுக்கு உணவு எடுத்துச்செல்வது, போராட்டத்தில் தங்களின் பங்களிப்பை அளிப்பது, இஸ்லாமிய இளைஞர்கள் தமிழீழ விடுதலைக்காக போராட்டத்தில் பங்காற்றியது, விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு அங்கிருந்த இந்திய காங்கிரஸ் முஸ்லிம் அமைப்பினுடைய தலைவர்கள் எப்படி இணக்கமாக இருந்தார்கள் என்பதையெல்லாம் இந்த நூல் விவரிக்கிறது; விடுதலை புலிகளுடைய கட்டுப்பாடுகள் எவ்வளவு தூய்மையானது என்றும், பாரபட்சமில்லாமல் தண்டனை வழங்கக்கூடியது என்றும் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு எப்படி போர்க்களத்தில் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதற்கு நம்முடைய தமிழீழ விடுதலை புலிகள் நடத்திவந்த நீதிமன்றத்தில் ஐந்தில் இரண்டு பெண் நீதிபதிகள் அமர்ந்திருப்பார்கள் என்று பெண்களின் முன்னேற்றத்தை பற்றி இந்த நூல் விவரிக்கிறது.”

இந்த புத்தகத்தில் அரசியல் குறித்தும், இதனை ஏன் மே பதினேழு இயக்கம் மற்றும் நிமிர் பதிப்பகம் வெளியிடுகிறது என்பது குறித்தும், இன்றைய காலகட்டத்தில் இந்த புத்தகத்தின் அவசியம் குறித்தும் மே பதினெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

publive-image

“ஈழ விடுதலை போராட்டம் என்பது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட சண்டை. தமிழ்த்தேசிய கோட்பாடு என்பது முற்போக்கு கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கிய அடிப்படையில் தான் சிங்கள பேரினவாத அரசியலை வீழ்த்துவதற்கு வந்தது. 2009க்கு பிறகு விடுதலை புலிகளின் அரசியல் எப்படி இருந்தது என்பதை ஆவணப் பூர்வமாக வெளிகொண்டுவருவதற்கான பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது, குறிப்பாக இளைய தலைமுறையினர்கள் விடுதலை புலிகளை எப்படி பார்க்க வேண்டும், எப்படி அணுக வேண்டும், எதையெல்லாம் அவர்களிடத்திலே உள்வாங்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

தன் போராட்டத்தின் வழியிலேயே சமுதாயத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவேண்டும் என்று இரண்டையும் இணைத்து சமகாலத்தில் நடத்தினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். சிங்கள அரசாங்கத்திடமிருந்து விடுதலை பெறுகிறோமோ இல்லையோ பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தவர்கள் விடுதலை புலிகள். இப்படி போராடுகிறபோதே பெண்களின் சமஉரிமையும், சாதி ஒழிப்பும் இந்த இயக்கத்தில் கொண்டுவரப்பட்டதனாலேயே அங்கு வசிக்கின்ற மக்களிடையே அது இயல்பாக பரவியது. முற்போக்கு சிந்தனைகளை இயல்பாக எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதனை இந்த புத்தகம் சிறப்பாக பதிவுசெய்துள்ளது.”

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசியதாவது:

publive-image

"தலைவர் பிரபாகரனுடைய 67வது பிறந்தநாளான இன்று தமிழருடைய தலை நிமிரும் நாள் என்று கூறவேண்டும்; விடுதலைப் புலிகள் எந்த நோக்கத்திற்காக போராடினார்களோ அதை தாய்த் தமிழகத்தில் இருக்கின்ற நாம் உறுதியேற்கின்ற நாளாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த பிறந்தநாளின் கொண்டாட்டத்தை காணொளி வாயிலாக நிச்சயம் பார்த்து மகிழ்வர்.

இந்த புத்தகம் பல செய்திகளை சொல்லியிருக்கிறது; தோழர் மாலதி அவர்கள் ஒரு எழுத்தாளர் என்பதனை கடந்து தமிழீழ போராட்டத்தின் பங்களிப்பாளராக இருப்பதால் மட்டும் தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடிந்தது. ஆகையால், அவர் நேரடியாகவே பார்த்த செய்திகளை சாட்சியாக இந்த புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இந்த புத்தகத்தை படிக்கின்றபோது ஒரு அரைநூற்றாண்டு காலம் எல்லோரும் பயணம் செய்கின்ற விதத்தில் தான் இதனுடைய செய்திகள் அடங்கிக்கிடக்கின்றது; படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நாமும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுகள் தோன்றும்.

தமிழீழ விடுதலை புலிகளாக அந்த காலத்தில் உறுதியோடு நின்று போராடியவர்கள், அவர்களுடைய இலக்கான "புலிகளின் தாகம், தமிழின தாயகம்" என்கின்ற அந்த தாயகத்தை சென்று அடையாமல் அவர்கள் ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டார்கள் என்பது வரலாற்றில் விரைவில் ஒரு புதிய செய்தியை பதிய வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. தமிழ்நாட்டில் அரசி வேலுநாச்சியார் தொடுத்த யுத்தக்கள போராட்டங்கள், குயிலி தன்னைத்தானே  ஆயுதமாக மாற்றி ஆயுதக்கிடங்கில் அர்ப்பணித்த காட்சிகளெல்லாம் இந்த புத்தகத்தை படிக்கிறபோது கண்முன்னே வருகிறது. அநேகமாக வரலாற்றை நிறைய படித்த தலைவர்களில், ஒரு விடுதலை போராட்டத்தில் பெண்களுடைய நூறு சதவீத பங்களிப்பை அளித்தவர் என்றால் அது விடுதலை புலிகளின் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் மட்டும் தான்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Thirumavalavan Vaiko Ltte Thirumurugan Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment