ஆர்.சந்திரன்
“+2வில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு கல்லூரியின் கல்விக் கட்டணத்துக்கு வழியில்லை”
“ அடுத்த தவணை கல்விக்கடனுக்கு, நிபந்தனை. மாணவன் தற்கொலை”
- அண்மைக்காலமாக, இதுபோன்ற செய்திகள் வெளியாவது அதிகரித்து வருகிறது.
திருப்பூரைச் சேர்ந்த “குமரன் பிரஸ்” வெளியிட்டுள்ள, “HOW TO GET EDUCATIONAL LOANS TO STUDY IN INDIA AND ABROAD – A Comprehensive Guide” என்ற புத்தகம் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளதாக கூறுகிறது.
இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ‘என்.குமரன்’, ஒரு பத்திரிகையாளர். அதனால், சாமானியன் மனதில் தோன்றக் கூடிய பல்வேறு கேள்விகளுக்கும், எளிய ஆங்கிலத்தில் விரிவான விளக்கம் தந்திருக்கிறார். உதாரணமாக, "தகுதியிருந்தும், வங்கிக்கடன் மறுக்கப்படும் நிலையில், அடுத்த கட்ட நகர்வு என்ன?" என்று சொல்லும் ஆலோசனையைக் குறிப்பிடலாம்.
அதோடு, பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி, தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்.., ஏன் - கிராமின் வங்கிகள் என, சிற்றூர்களில் செயல்படும் வங்கிகளால் கூட, கல்விக்கடன் வழங்க முடியும் என்கிறார் குமரன். இந்தியாவில் தற்போது மொத்தம் 130 கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம், 1000க்கும் அதிகமான கிளைகள் கல்விக் கடன் தருகின்றனவாம். அதோடு, கல்விக்கடன் கேட்டு வரும் ஒருவரது விண்ணப்பத்தை, வங்கிக் கிளை மேலாளர் மறுக்க முடியாது. ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான காரணங்களைச் சொல்லி, மண்டல மேலாளர் (Regional Manager) மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆனால், அதற்கும் கூட மேல்முறையீடு செய்யலாம் என, நடைமுறைகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் குமரன் குறிப்பிடுகிறார்.
"கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டாம்; ‘வித்யா லட்சுமி’ என்ற பெயரில், இதற்காகவே தனியாக உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் https://www.vidyalakshmi.co.in மூலம் விண்ணப்பித்தால் போதும். வங்கியிலிருந்து, உங்களைத் தேடி வருவார்கள். குறிப்பிட்ட நாளில் அதைச் செய்ய வேண்டியது இப்போது வங்கிகளுக்கு கட்டாயம்" என்பது போன்ற பல யுக்திகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், கல்விக்கடனுக்கு காப்பீடு தர, இப்போது தனி அமைப்பு இருக்கிறது. அதனால், "வங்கியில் இருப்பது, பொது மக்களின் பணம். ‘கடன்தொகை திரும்பி வரும்’ என்ற நம்பிக்கைத் தராத யாருக்கும் வங்கிக்கடன் தர முடியாது" என்ற சொத்தை வாதத்தை முன் வைத்து, அடித்தட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை மறுக்கும் வங்கி அதிகாரிகளை எதிர்கொள்ள ஆலோசனைகளும் இந்த புத்தகத்தில் உள்ளன. அதோடு 20, 30 லட்ச கடன்களுக்கே பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கடன் தர, பொதுத்துறை வங்கிகளில் சிறப்புத் திட்டங்கள் உள்ளன என்று சொல்லும் இப்புத்தகம், இப்படியான 200 வகை திட்டங்கள் உள்ளன என்று சொல்லி, அவற்றின் பின்னணி தகவல்களையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இதேபோல, “கல்விக்கடன் பெற்ற ஒருவர், உயர்கல்வியைத் தொடரும் பட்சத்தில், அவர் படித்து முடியும் வரை கடனுக்கான வட்டியை, அரசே செலுத்தும் திட்டம் ‘வட்டி மான்ய திட்டம்’ குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவானத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல; பள்ளிக் கல்வி கற்கவும் கடன் பெறலாம்... அதோடு, பணியில் உள்ள ஒருவரும் கூட, உயர்கல்வி கற்க வங்கியில் கடன்பெற முடியும் என்பது போன்ற தகவல்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 900 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் இடம்பெறும் தகவல்களை அலசிக் கொண்டிருக்காமல், தேவையானபோது, எளிதில் சென்றடையும் விதத்தில், பல்வேறு தலைப்புகளில் அவை எளிமையாக பிரிக்கப்பட்டுள்ளது, கூடுதல்வசதி!
தமிழ் பத்திரிகையாளரான குமரன், இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் ஏன் எழுதினார் எனத் தெரியவில்லை. தமிழில் எழுதியிருந்தால், இன்னும் அதிகமானவர்களுக்கு பலன் தந்திருக்கும். ஆனாலும், இந்த புத்தகத்தின் எளிமையான ஆங்கிலம், கல்விக்கடன் பெற்று, படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமுள்ள யாராலும் புரிந்து கொள்ளும் வகையில்தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைத் தாண்டி, கல்விக் கடன் குறித்து கூடுதல் சந்தேகங்கள் இருந்தால், அவற்றுக்கும் பதில் தயாராக இருப்பதாகச் சொல்லும் குமரனைத் தொடர்பு கொள்ள, "www.kumaranpress.in" என்ற வலைதளம் மூலமோ uyarkalvi2010@gmail.com மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.