அழகு
தமிழில் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்காதவர்கள் குறைவாகத்தான் இருக்க முடியும். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, இவன் புனின், குப்ரின், ஆண்டன் செகாவ் என ரஷ்ய இலக்கிய பிதாமகர்களின் படைப்புகளும் படைப்பாளர்களும் பலருக்கு ஆதர்சம். உலகம் முழுவதும் இன்றும் அதிகம் வாசிக்கப்படுகிற இலக்கியமாக ரஷ்ய இலக்கியம்தான் இருக்கும். மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’, தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் ’வீரம் விளைந்தது’ உள்ளிட்ட பல நூல்கள் இன்னும் ரஷ்ய இலக்கியத்தின் உச்சத்தைப் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர் ஆண்டன் செகாவ்.
அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிற செகாவ்வின், வான்கா, குதிரைவண்டிக்காரன், தும்மல், பச்சோந்தி உள்ளிட்ட பல கதைகள் பிரபலமானவை. அதிகம் பேசப்பட்டவை. அவரது வாழ்க்கை, படைப்புலகம், நண்பர்கள், நோயோடு போராடிய வாழ்வு ஆகியவற்றை எளிமையாக விவரிக்கிறது, எஸ்.ராமகிருஷ்ணன்எழுதியிருக்கிற ‘செகாவ் வாழ்கிறார்’.
காசநோயோடு போராடி, எழுதிக்கொண்டிருந்த செகாவ், மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்த ஒரு மருத்துவர்.. 'மருத்துவம் என் மனைவி, இலக்கியம் என் காதலி’ என்று அவரே கூறியிருக்கிறார்.
இவான் புனின், குப்ரின், கார்க்கி ஆகிய எழுத்தாளர்களின் நண்பர்களாக இருந்த செகாவின் வாழ்க்கையையும் படைப்புகளையும் அதற்கு பின் இருந்த அந்தக்காலகட்ட நிகழ்வுகளையும் விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
செகாவ் வாழ்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை, விலை 150
----------------------------------
வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது. நாம் இருக்கிற ஊர், நடக்கிற தெரு, பார்க்கிற பாழடைந்த கட்டிடங்கள், சிதைந்த கோபுரங்கள் என எங்கெங்கும் புதைந்திருக்கிறது வரலாறு. அந்த வரலாறுகளைத் தோண்டினால், கிடைக்கிற விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தலாம்.
அப்படித்தான் ஆச்சரியப்படுத்துகிறது, இரா.முருகவேளின் ‘முகிலினி’. ஏற்கனவே, ‘ரெட் டீ’யின் தமிழாக்கம் ‘எரியும் பனிக்காடு’, ‘மிளிர்கல்’, ‘பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ நூல்களின் மூலம் கவனம் பெற்ற முருகவேளின் நாவல் இது. கோவையை பின்புலமாகக் கொண்டு, பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் இருந்த அரசியல் போராட்டம், மோதல், ரத்தம் என ஒரு நீண்ட வரலாற்றைப் பேசும் நாவல் இது.
1949 ஆம் ஆண்டு, பவானி சாகரம் அணைகட்டுத் திட்டம் தொடங்கும் காலக்கட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. பருத்திக்கு பஞ்சம் நிலவிய அந்தக் காலத்தில் கோவையில் செயற்கை இழை நிறுவனம் அமைக்க நினைக்கும் இத்தாலி நிறுவனம், அப்போதைய முதலமைச்சர் காமராஜருடன் அதற்கு அனுமதியளிப்பது, இரண்டாம் உலகப் போர் காலகட்ட பாதிப்பு, பஞ்சம் பிழைக்க இடம்பெயறும் மக்கள் என நாவல் பேசும் விஷயம் வரலாறாகவே இருக்கிறது. திராவிட இயக்கம் மற்றும் தொழிலாளர் போட்டத்தின் வரலாறு நாவலின் ஊடாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலுக்காக, முருகவேள் காட்டியிருக்கிற உழைப்பு அபாரம்.
முகிலினி, பொன்னுலகம் பதிப்பகம் ரூ.375
-------
உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை - 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.