பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், தனது முகநூலில் எழுதியதை, ‘யானை பார்த்த சிறுவன்’ புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார். அலுவலக நண்பர்களுடன் மூணார் சென்ற அனுபவம், ஊட்டி, சென்னையில் சுற்றி திரிந்த அனுபவம் என தான் பார்த்து ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூணார் பற்றிய சில குறிப்புகளைப் படிக்கும் போது, கைடாக தெரிகிறார். ‘கனமழையில் நனைந்து கொண்டே மலையழகைப் பார்ப்பது பேரின்பம்’, ‘சொர்க்கத்தின் நிறம் பசுமையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கடவுளின் தேசம் பசுமையாக இருக்கிறது’ என இவரின் சிலவரிகளைப் படிக்கும் போது கவிஞராகத் தெரிகிறார்.
கோவை செல்லும் ரயிலை பிடிக்க டிராப்பிக்கில் சிக்கியதைக் கூட அவரால் மிகுந்த ரசனையோடு சொல்ல முடிகிறது. பைக்கில், காரில், பஸ்சில் என தன்னுடைய பயணத்தின் ஞாபகங்களை சேகரித்து வைத்து, அதை புத்தகமாக்கி தந்துள்ளார்.
ஊட்டியை முதல்முறையாக பார்ப்பதாகவும், யானையைப் பார்க்கும் சிறுவன் போல ஊட்டியை பார்ப்பதாகவும் எழுதியிருப்பது ரசிக்கக் கூடியவை. திருமழிசையாகட்டும், கோனே அருவிக்குப் போன அனுபவம் ஆகட்டும் எந்த பயணத்தைப் பற்றி சொன்னாலும் அங்கு நாமும் போக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது அவருடைய எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
தன்னுடைய பயண அனுபவம் மட்டுமன்றி, தன்னுடைய நண்பர்கள் பற்றியும், தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றியும் விரிவாகவும், சில இடங்களில் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார். பத்திரிகையில் படித்த விஷயங்களையும் துணுக்குப் போல இணைத்திருக்கிறார்.
சுந்தரபுத்தன் வார்த்தைகளில் சொல்வதானால், ‘பயணம் நினைவுகளின் சேகரம். இயற்கை நேசம். அமைதி தேடல். வாழ்க்கை அறிதல், இளைப்பாறுதல். சில செல்பிகளில் முடிவதல்ல பயணங்கள். உண்டியலில் காசுகளைச் சேர்பது போல ஞாபகங்களைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும்’ என்கிறார்.
புத்தகம் முழுவதும் தனது ஞாபகங்களை சேகரித்து கொடுத்துள்ளார். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
யானை பார்த்த சிறுவன் - ஃபேஸ்புக் குறிப்புகள். ஆசிரியர் : சுந்தரபுத்தன், விலை ரூ. 115, 122 பக்கங்கள். சங்கமி வெளியீடு, 2/47, சிவன்கோயில் வடக்குத் தெரு, கண்கொடுத்தவனிதம் - 610113, திருவாரூர் மாவட்டம். போன் : 9094005600
(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)