அழகு
மொழிக்கும் கவிதைக்கும் விளங்க முடியாத காதல் இருக்கிறது. கவிதையின் கரம் பற்றும்போதுதான் மொழி தன் அழகை, இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது. தன்னைப் புதுப்பிக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள மொழி தேடும் அரவணைப்பு கவிதையில் இருப்பதாகவும் கொள்ளலாம். அதனால்தான் கவிதையும் காலம் காலமாய் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஹைக்கூக்களும் அடக்கம்.
மூன்று நான்கு வரிகளின் வழி, நமக்குள் சிலுசிலுப்பை அல்லது ஆச்சரியத்தை, ஆஹா என்கிற சிலிர்ப்பை, அட என்கிற புல்லரிப்பை… சுண்டு விரல் நீள ஹைக்கூக்கள் தந்துவிட்டுப் போவது தவிர்க்க முடியாதது.
சமீபத்தில் வாசிக்க நேர்ந்த கவிஞர் பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ நம்மையும் அதற்குள் நீந்த வைக்கிறது, உறங்காத விழிகளோடு. அழகான வடிவமைப்போடு வந்திருக்கிற இந்த ஹைக்கூக்களின் அழகில், வாயசைத்துக்கொண்டே இருக்கிற அருங்காட்சியக எலும்புக் கூடு போல, அதன் கவிதைகளில் உழன்று கொண்டே இருக்கிறது ஹைக்கூ மனது. பொதுவாக முரண் என்பதையே ஹைக்கூ என பெரும்பாலோனோர் சொல்லி வரும் நிலையில் அழகான காட்சிப் படிமங்கள் மூலம், ஆச்சரியப்பட வைக்கிறது, அவரது ஹைக்கூக்கள்.
பிருந்தா சாரதிக்கு கவிதை இயல்பாக வரும். ஹைக்கூவும் வருகிறது.
சாம்பிளுக்கு ஒன்று. இதுதான் இத்தொகுப்பின் கடைசியாக வைக்கப்பட்டி ருக்கிற கவிதை. ஆனால் முதல் நிலை ஹைக்கூ.
வானில் பறந்தபடியே
ஏரியில் நீந்துகின்றன
பறவைகள்.
…..
‘மீன்கள் உறங்கும் குளம்’, டிஸ்கவரி வெளியீடு: விலை ரூ.100.
……………………….
உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை - 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.