scorecardresearch

புத்தக அறிமுகம் : பனிப்புகைக்குப் பின்பாக

எளிமையான மொழியில் உள்ள இக்கதையில் வரும் பெண் பாத்திரம் தனது மகன் நந்துவின் முகத்தைப் போல தனது தந்தையின் முகமும் அமைந்திருக்கிறது என்று சொல்வது அருமை.

SRA book

எஸ்.செந்தில்குமார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் மனவலிமை கொண்டவர்களாகவும் அன்புமிகுந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். சமீபத்தில் வந்துள்ள ’சைக்கிள் கமலத்தின் தங்கை’ என்கிற சிறுகதைத் தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் 15க்கும் மேற்ப்பட்ட கதைகள் பெண்களை மையப்படுத்தியும் பெண் கதாபாத்திரங்களின் சித்திரத்தையும் வித்தியாசமான அணுகுமுறையில் கதையாக்கியுள்ளார்.

இத்தொகுப்பில் வெண்நுரை என்கிற சிறுகதை அப்பா – மகள் என்கிற உறவு எதன்பொருட்டு மேன்மையடைகிறது என்பதை விளக்குகிறது. வழக்கமாக அன்றாட சம்பவங்களின் வழியே எழுதியிருக்கும் இக்கதையின் பல இடங்கள் பனிபுகைக்குப் பின்பாக மறைந்து தெரியும் காட்சிகளைப்போல மங்கலாக இடம் பெறுகிறது. அதற்குக்காரணங்கள் இருக்கின்றன. வழக்கமான குடும்ப சம்பவங்களை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். தாயார் இறப்பு, சகோதரர்கள் டெல்லியும் அமெரிக்காவிலும் இருக்கிறதற்குப் பின்பாக இக்கதை நகராமல் வாசகர்கள் அறியாத பகுதியான தந்தைக்கு மகள் முகச்சவரம் செய்கிற இடத்திலிருந்து வெண்நுரைத் தொடங்குவது அசாத்தியமானது. எளிமையான மொழியில் உள்ள இக்கதையில் வரும் பெண் பாத்திரம் தனது மகன் நந்துவின் முகத்தைப் போல தனது தந்தையின் முகமும் அமைந்திருக்கிறது என்று சொல்லும் இடம் அருமையானது. வயதான தந்தையை மகள் என்பவள் அவ்வாறுதானே பார்க்க முடியும். அதேநேரத்தில் அவளது கணவன் உனது தந்தை இறந்துவிட்டார் என்று சொன்னதும் அவள் தனக்கு அது தெரியும் என்று சொல்வது வேறொரு தளத்திற்கு இக்கதையை நகர்த்தி சென்றுவிடுகிறது.

இதேபோல சின்னஞ்சிறிய கதையான சிசு மற்றும் சிரிக்கும் பெண் ஆகிய இரு கதைகளின் நாயகிகளும் இக்கதாபாத்திரத்தின் நீட்சியென சொல்லவேண்டும். சிசு கதையில் வரும் பெண் தனக்கு மூன்று தலைகள் கொண்டு குறை மாதத்தில் பிறந்த குழந்தையை அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதைப் பார்த்து, குழந்தையைச் வேடிக்கைப் பார்க்கும் மற்றவர்களிடம் அக்குழந்தையின் பெயர் கவின், கவின் என்றால் அழகு என்று சொல்லுமிடம் துயரமானது. சிரிக்கும் பெண் எதற்காக தனது சிரிப்பை சிரிக்க மறுத்து வருடக்கணக்கான வாழ்கிறாள். பிறகு சாதரணமான விஷயத்திற்காக தீடீரென சிரிக்கத் தொடங்கியவளை ஊரே நின்று வேடிக்கைப் பார்க்கிறதே ஏன் என்ன காரணமென யோசிக்க வைக்கிறது. பெண் சப்தமாகச் சிரிக்கக்கூடாது என்பதன் அரசியலை சொல்லுகிற கதையாகவும் இதை வாசிக்கமுடியும்.

கிளாடியின் மரணம் : சில காரணங்கள் என்கிற கதையில் கிளாடி என்பவர் கத்திக்குத்துப்பட்டு நடுரோட்டில் நிர்வாணமாக இறந்து கிடக்கிறார் என்பதிலிருந்து தொடங்குகிறது. அவரை அவரது மகனே கொலை செய்திருக்கிறான். எதற்காக கொலை செய்தான்? கிளாடி என்பவர் யார் என்பதே கதை. இக்கதையில் இரண்டு பெண்களை எஸ்.ராமகிருஷ்ணன் கதையின் நகர்வில் வாசகன் எளிதாக கடந்து சென்றுவிடும்படியாக பிரதிக்குள் வைத்திருப்பார். இக்கதையின் பிரதானமான கதாபாத்திரங்கள் அவர்களே என்றபோதிலும் அவர்களைப் பற்றிய சம்பவங்கள் கதையில் அவர்களது இருப்பு ஆகியவை சொற்பமானது. இரண்டு பெண்களில் ஒருத்தி கிளாடியின் தாயார். மற்றொரு பெண் ஆரஞ்சு தோட்டங்களுக்கு மருந்து தெளிக்க வரும் வயதான கிழவனின் விதவை பேத்தி வசுந்தரா. கிளாடியின் குணத்திற்கு அவளது தாயாரும் அவரது மரணத்திற்கு வசுந்தராவும் காரணமாக அமைகிறார்கள். அவர்களது கதாபாத்திரங்களின் நேர்த்தி அசாதாரணமானது. அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச விவரனை கூட இக்கதையில் சொல்லாது விட்டுவிடுகிறார். ஓரு நேர்கோட்டில் அதாவது வசுந்தரா கிளாடி அவரது தயார் ஆகியோரின் கதையை வாசிக்க முடியும். ஈரஉடைகள், வயதின் அடையாளங்கள், கறுப்பு பெத்தான், உடல்கொடு ஆகிய சிறிய கதைகள் புதிய கதை சொல் முறை உருவாக்க முயற்சிக்கிறது.

இத்தொகுப்பில் சர்க்கஸ் புலி என்கிற கதை முன்வைக்கும் பகடி முக்கியமானது. ஓட்டுப்போடுகிற மக்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலங்களில் பணிபுரியும் சிப்பந்திகள், கணவன், மனைவி, குழந்தைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் கேலியுடன் பகடி செய்கிறது. இதன் சிறம்பம்சம் என்னவெனில் நேரடியாக இல்லை மறைமுகமாக. புலி என்கிற குறியீடும் அது சர்க்கஸில் மாட்டிக்கொண்டு அதனுடைய இருப்பிடத்தை வசிப்பிடத்தை ஒரு அடி ஸ்டூல் பலகையின் மேல் வைத்துக்கொள்வது எவ்வளவு நகைச்சுவையானதோ அதுபோல வாழ்க்கையை எதன்பொருட்டோ நாம் சுருக்கிவிட்டோம் என்பதும் கேலிக்குரியதுதான். இதைத்தான் சர்க்கஸ் புலியின் குறியீட்டு மூலம் நகைச்சுவையாக சொல்கிறார்.

சினிமாவைப் பற்றிய நிஜமான நிழல், காலக்கணக்கு, கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சினிமா உலகின் இணை மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர்களின் மற்றொரு பக்கத்தை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. நிஜமான நிழல் கதையில் தன்னை அறிமுகம் செய்த படத்தின் இயக்குநரை பழிவாங்கும் கதாநாயகி அதற்கான காரணமாக என்னவாகயிருக்குமென இணை இயக்குநர் வழியாக வாசகனுக்கு தெரியப்படுத்துகிற இடம் நியாயமானதாகயிருக்கிறது. யூள், வஸ்திரம் போன்ற கதைகள் வாசிப்பில் புது அனுபவத்தைத் தருகின்றன.

சைக்கிள் கமலத்தின் தங்கை/சிறுகதைத்தொகுப்பு/எஸ்.ராமகிருஷ்ணன்/உயிர்மை பதிப்பகம்/விலை ரூ: 140/தொடர்ப்புக்கு: 044-24993448

(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Book review the rapture of the smog