புத்தக அறிமுகம் : மிகப் பெரிய ஆளுமையின் நம்ப முடியாத கதை

ஏமாற்றம், அவமானம், துரோகங்கள் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

ச.கோசல்ராம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘ஜெயலலிதாவின் மனமும் மாயையும்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார், மூத்த எழுத்தாளரும், இதழாளருமான வாஸந்தி. இரண்டு பாகங்களாக இருந்தாலும் ஓரே புத்தகமாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் சிறு வயது வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆருடனான நெருக்கம், அரசியல் நுழைவு என நகர்கிறது. இரண்டாவது பாகம் 1991ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னரான அவருடைய அரசியல் வாழ்க்கை என புத்தகம் நகருகிறது.

முதல் பாகத்தில் ஜெயலலிதா விரும்பாமல் சினிமாவுக்குள் நுழைந்தது, கல்லூரி ஆசை, என அவரைப் பற்றி அறிந்திராத பல விஷங்களை, அவருடைய பள்ளி தோழிகளிடம் பேசி எழுதியிருக்கிறார். திரையுலக பிரவேசமும், அதில் அவர் சந்தித்த நிகழ்வுகளையும் படிக்கும் போது ஜெயலலிதா மீது ஒருவித பரிதாபம் ஏற்படுகிறது.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுகும் இடையேயான உறவு, எம்.ஜி.ஆரை திருமணம் செய்ய அவர் விரும்பியது. திருமணம் செய்வதாக எம்.ஜி.ஆர் மூன்று முறை ஏமாற்றிய விபரங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உருவாக்குகிறது. ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுக்கும் இருந்த உறவு பற்றியும், இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா என்பதற்கான பதிலையும் இந்த புத்தகம் தருகிறது.

ஜெயல்லிதா, உயிருடன் இருக்கும் போதே இந்த புத்தகம் கொண்டு வர முயற்சி எடுத்து, கோர்ட்டில் தடை வாங்கப்பட்டப் புத்தகம். அதனால் பல பகுதிகள் நீக்கப்பட்டு இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனாலும் சுவராஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. புதிய பல தகவல்களை பலரை தேடி கண்டுப்பிடித்து திரட்டி தந்துள்ளார்.

இரண்டாவது பாகத்தில், 1991ம் ஆண்டுக்கு பிந்தைய அரசியல், ஜெயலலிதாவின் எழுச்சி, வீழ்ச்சி, எழுச்சியை விவரித்திருக்கிறார். இதழாளராக அவர் பார்வையில் அவர் அதனை சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகால அரசியலை புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அதற்காகவே அவர் நிறைய மெனக்கட்டிருக்கிறார் என்பது புத்தகத்தை படிக்கும் போது தெரிகிறது. ஜெயலலிதாவின் 1991 – 1996 கால ஆட்சியின் அவலங்களை விவிவாக அவர் சொல்லியிருந்தாலும், சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏழுன் பேரை நடு ரோட்டில் போட்டு அடித்தது ஏன்? என்பதை சொல்லாமல் விட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

அதே போல ரஜினிகாந்துக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல், அதன் பின்னர் உருவான அரசியல் அதிர்வுகளை போகிற போக்கில் பதிவு செய்திருப்பது கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்கள் விடுபட்டிருந்தாலும் விறுவிறுப்பு எங்கேயும் குறையவே இல்லை.

சினிமாவிலும் அரசியலிலும் பெரு வாழ்வு வாழ்ந்தாலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை புதிராகவே இருந்தது என்பதை புத்தகத்தைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும். ஆணாதிக்க உலகில் வெற்றி பெற்ற பெண்கள் கூட காதல் என்ற பெயரால் ஏமாற்றப்படுவது நடக்கிறது. ஏமாற்றம், அவமானம், துரோகங்கள் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

ஜெயலலிதாவின் மனமும் மாயையும், ஆசிரியர்: வாஸந்தி, விலை. ரூ.195, கிடைக்கும் இடம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. போன் : 91-4652278525

(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)

×Close
×Close