சா.ரு.மணிவில்லன்
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு தோராயமாக சுமார் 200 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சுமார் 75 சதவீத தயாரிப்பாளர்கள் புதியவர்கள். அவர்களில் வெற்றி பெற்றவர்கள் என கணக்கிட்டால் மிகவும் குறைவு. ஒரு பத்து சதவீதம் (15 பேர்கள்) அளவுக்குகூட வெற்றி இல்லை. ஆனாலும், தொடர்ந்து புது படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வளவு தோல்விகள் ஏற்படக் காரணங்கள் என்ன என்று யோசித்தால் பல காரணங்களை (கதநாயகர்களின் அதிக சம்பளம், திரையரங்குகளில் வெளியிடும் படங்களின் வசூல் தொகைகளில் ஏமாற்றம், படங்கள் வெளியான அன்றே திரைப்படம் இணையத்தில் வெளியாவது, அரசின் வரிகள், படத்துக்கு கடன் வாங்கியதுக்கு கட்டவேண்டிய வட்டி, படத்தயாரிப்பில் ஏற்பட்ட காலதாமதம், படத்தின் கதைக்கு அதிகமான தயாரிப்பு செலவு) சொல்ல முடியும். இவற்றில் மிகவும் முக்கியமானது தயாரிப்பாளரின் தவறான முடிவுகளினால் ஏற்படும் பொருள் இழப்பாகும்.
ஏன் தயாரிப்பாளர் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று யோசித்தால் புதிதாக படத் தயாரிப்புக்கு வரும் தயாரிப்பாளருக்கு திரைத்துறையின் செயல்பாடுகள் புரியவில்லை அல்லது பிடிபடவில்லை. அதை கற்றுகொள்ள அவருக்கு நேரமில்லை. ஏனெனில், அவர் வேறொரு துறையில் தொழில் செய்து வெற்றி பெற்றவர். அந்த தொழிலை கவனித்துக்கொண்டே திரைப்படம் தயாரிக்கவும் வருகிறார். அவரிடம் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
இப்படி புதிதாக படமெடுக்க வரும் தயாரிப்பாளர் தோற்றுவிடக்கூடாது, அவர்கள் பெரும் தயாரிப்பாளராக வெற்றி பெற்றால் தமிழ் திரைத்துறைக்கு பல வெற்றிப்படங்கள் கிடைக்குமே என்ற சிந்தனையின் விளைவுதான் “ சினிமா தயாரிக்கும் கலை (தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு) “ என்ற புத்தகம். இந்த நூலை ஆம்ஸ்ட்ராங் பிரவின் எழுதியுள்ளார். இவர் தமிழ் திரைத்துறையில் இணை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பணிசெய்துள்ளார். தன் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்த்து புது தயாரிப்பாளர் வெற்றிபெற தேவையான ஆலோசனைகளை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தில் தயாரிப்பாளர் பணிகள் அறிமுகம், படப்பிடிப்புக்கு முன்பான தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு, படபிடிப்புக்கு பின்னான தயாரிப்பு பணிகள் மற்றும் பட வியாபாரம் என நான்கு பெரும் பிரிவுகளில் திரைப்பட தயாரிப்பாளரின் பணிகள் வகைப்படுத்தி எளிமையாக கூறப்பட்டுள்ளது.
ஒரு தயாரிப்பாளர் ஒரு கதையை தேர்வு செய்வது எப்படி, ஒரு இயக்குனரை அடையாளம் காணுவது எப்படி, சரியான தயாரிப்பு நிர்வாகிகளை இனம் காணுவது எப்படி, எந்த செலவுகளில் சிக்கனமாக இருக்க வேண்டும், என்ன மாதிரியான வேலைகளுக்கு கூடுதலாக செலவு செய்யலாம், ஒரு படத்துக்கு உடல் உழைப்பை அதிகம் செலுத்துபவர் யார், ஒரு படத்துக்கு கற்பனாபூர்வமாக வேலை செய்பவர்கள் யார்யார், அவர்களின் பணிகள் எத்தகையது, தயாரிப்பாளர் என்றாலும் பட உருவாக்கத்தின் எந்தெந்த வேலைகளில் தலையிடலாம் எந்தெந்த வேலைகளில் தலையிடக்கூடாது என மிகவும் சிறப்பாக தயாரிப்பாளருக்கு வழிகாட்டியாக இந்த புத்தகம் உள்ளது.
திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்களுக்கு எத்தனை தவணையில் பணம் கொடுக்க வேண்டும், யார்யாரிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும், ஒப்பந்தத்தில் என்ன மாதிரியான விதிகள் இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும், நடிகர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் என்னமாதிரியான தேவைகள் இருக்கும், அதை குறைவான செலவில் நிறைவேற்றுவது எப்படி, இதுபோன்றே இன்னபிற துறை சார்ந்தவர்களின் பணிகள் என்னென்ன அதற்கு எவ்வாறு செலவிடுவது என அனைத்தையும் இப்புத்தகம் விவரிக்கிறது.
கடன் வாங்காமல் படம் தயாரிக்க முடியுமா, கடன் வாங்க வேண்டுமென்றால் எந்த சூழலில் எவ்வளவு கடன் வாங்கலாம், தயாரித்த படத்தை எப்படி, எந்தவகையில் விளம்பரப்படுத்துவது, பிறமொழிகளில் பட உரிமையை விற்பது எப்படி, அதற்கு யாரை அனுகலாம், படத்தை வேறு எந்தெந்த வழிகளில் வியபாரம் செய்யமுடியும் என்பதையெல்லாம் இந்நூல் விரிவாக விளக்குகிறது.
இந்த புத்தகம் அறிமுக தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல அறிமுக இயக்குனருக்கும் உதவியாக இருக்கும். ஒரு நடிகன் தன் நடிப்பு திறமையை மேம்படுத்த நடிப்பு பயிற்சிக்கு செல்வது போல இப்புத்தகம் புது தயாரிப்பாருக்கு ஒரு பயிற்சி கையேடு என்றால் மிகையாகாது. பெரும் தொகையை முதலீடு செய்து படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர் திரைத்துறை சார்ந்து முழுமையாக தெரிந்து கொண்டு படம் எடுத்தால் தன் முதலீட்டை தக்கவைத்து கொள்ள முடியும்,
மொத்த தயாரிப்பு வேலைகளையும் இயக்குனரை நம்பி ஒப்படைத்துவிடும் ஒரு போக்கு தமிழ் திரைத்துறையில் உள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு வேலை குறைவு. ஆனால் சரியான இயக்குனரை தேர்ந்தெடுக்காத பட்சத்தில் தயாரிப்பாளருக்கே பெரும் இழப்பாகும். ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தால் முதலில் தயாரிப்பாளராக தன் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு புது தயாரிப்பாளருக்கு இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகும்.
இந்த புத்தகத்தில் இரண்டு விசயங்கள் எனக்கு குறைகளாக படுகின்றன. ஒன்று அதிகப்படியான ஆங்கில கலப்பு. நடைமுறையில் தமிழில் பயன்படுத்தும் சொற்கள் கூட ஆங்கிலத்தில் உள்ளன. இதை தவிர்த்திருக்கலாம். மற்றொன்று கூறியது கூறல் சொன்ன விசயங்கள் மறுபடியும் மறுபடியும் வருகின்றன. குறிப்பாக தொழில் சார்ந்து எத்தனை தவனையில் பணம் கொடுத்தல் மற்றும் ஒப்பந்தம் போடுதல் போன்ற தகவல்கள் ஒரே மாதிரியே பல இடங்களில் வருகின்றன. இரண்டாவது பதிப்பில் இதெல்லாம் சரி செய்யப்படும் என்று நம்புகிறேன்.
திரைப்படம் சார்ந்து தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வரும் பேசாமொழி பதிப்பகம் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு இந்த ஜனவரி மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
நூல் குறித்து தொடர்புக்கு:
ஆர்ம்ஸ்ட்ராங் வி ஃபைஸி - 8668010488
சினிமா தயாரிக்கும் கலை நூலின் ஆசிரியர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.