கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், "சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு" என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த பன்னாட்டு கருத்தரங்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தனை கவிஞர் கவிதாசன் கூறியதாவது:-
தமிழ் மீது இருக்கக்கூடிய ஆர்வம் குறைந்து வருவதாக போக்கு இருக்கிறது. தற்போது மேல்நிலை வகுப்புகள் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பிளஸ் - 1 படிப்பவர்களுக்கு தமிழ் கிடையாது . அந்த அளவிற்கு தமிழ் மீது இருக்கக்கூடிய ஆர்வம் குறைந்து வருவதாக ஒரு புறம் இருக்கிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழ் என்பது மொழி மட்டுமல்ல அது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்கின்ற முறையை நமக்கு சொல்லித் தருகிறது. ஒரு மரத்தை பார்க்கும் போது அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் புதிதாக வந்து கொண்டிருக்கும் ஆனால் அதனுடைய வேர் பழமையானவே இருக்கும் அதுபோலத்தான் சமுதாயத்தின் தமிழ் சமுதாயத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய பண்பாடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது இந்த ஆய்வு அந்த வகையில் வெளிப்படும் என்று நம்புகிறேன்.
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் மிக்கவராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். நான் இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் 25-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், தன்னம்பிக்கை மேடைப் பேச்சுகள், கவியரங்கப் பதிவுகள், இலக்கியம், இலக்கிய அமைப்புகள் மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்கியுள்ளேன். எனவே, எனது படைப்புகளை கருவாகக் கொண்டு இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில், எனது கவிதைகள், கட்டுரைகள், கவியரங்க கவிதைகள், மேடைப் பேச்சுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி உரைகள் ஆகிய களங்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது. பேராசிரியர்கள், பல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இக்கருத்தரங்கிற்காக தங்களது கட்டுரைகளை வழங்கலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் கருத்தரங்க நாளில் தன்னுடன் இணைந்து அதனை புத்தகமாக வெளிடலாம்.
கட்டுரையாளர்ககள் எவ்வித பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. கருத்தரங்க நாளன்று மதிப்பீட்டாளர்களால் தேர்வு செய்யபடும் சிறந்த 10 கட்டுரைகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கபடும். பல்துறை சாதனையாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல விருதுகளும், சான்றிதழ்களும் வழங்க உள்ளோம்.
சமூக மேம்பாடு, மனித உறவு மேம்பாடு, குடும்ப உறவு மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தலைமை மற்றும் ஆளுமைப் பண்பு, திறன் மேம்பாடு, சமூகச் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள், சமூக முன்னேற்றச் சிந்தனைகள், மேலாண்மைக் கோட்பாடுகள், ஆன்மீகச் சிந்தனைகள், பேச்சுக் கலை, கட்டுரைக் கலை, படைப்பாக்கக் கலை போன்ற பல்துறை நோக்கில் கட்டுரைகள் இருக்கலாம்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் முனைவர் சித்ரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.