கேள்விகளோடு நிற்கிறது கொரோனா..!

உலக சமுதாயத்திற்கு கொரோனா உணர்த்தியிருக்கும் பாடம் குறித்து, கோபமும் ஆதங்கமும் கலந்த அவரது கவிதை வரிகள் இங்கே!

By: Published: April 4, 2020, 6:44:49 PM

கவிஞர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு கிராமத்தை சேர்ந்தவர். உலக சமுதாயத்திற்கு கொரோனா உணர்த்தியிருக்கும் பாடம் குறித்து, கோபமும் ஆதங்கமும் கலந்த அவரது கவிதை வரிகள் இங்கே!

கவிஞர் க.சந்திரகலா

ஒரேயொரு உயிர் வைத்துக்கொண்டு
ஆளாளுக்கு
ஆயிரம் திமிர் வளர்த்தீர்கள்

மதத்திமிர்
ஜாதித்திமிர்
பணத்திமிர்
அரசியல்திமிர்
அதிகாரத்திமிர்
ஆடம்பரத்திமிர்
….. …… …….
…… …… ……
ஒரேயொரு உயிர் வைத்துக்கொண்டு
ஆளாளுக்கு
ஆயிரம் திமிர் வளர்த்தீர்கள்

எதற்கும் பயப்பட மாட்டோம்
எவருக்கும் பயப்பட மாட்டோம்
என
நெஞ்சு நிமிர்த்தி நின்ற
உலக சமுதாயத்தை
நான்கு சுவருக்குள் தள்ளி விட்டு
வாசலில்
கேள்விகளோடு நிற்கிறது கொரோனா..

பதில் இல்லை..

நாகரீக சமூகம்
நாங்களென சொல்லிக்கொண்டு
கைபடாமல் கரண்டியால் தின்றவன்
தினம் பதினைந்து முறை கை கழுவுகிறான்
ஆனாலும் பலன் இல்லை

அன்புச் சங்கிலி
செய்யாமல்
ஆயுதங்களை குவித்து
அடுத்த நாடுகளுக்கு
அடிமை சங்கிலி தயார் செய்தவன்
அண்ணாந்து பார்க்கிறான்
அவனிடத்திலும் பதில் இல்லை

ஏதோ கொஞ்ச காலம்
இரவல் வாழ்க்கை வாழ
பூமிக்கு வந்தவனே
என் செய்தாய்…?

மனிதம் மறந்தாய்
அடுத்தவர் துயர் துடைப்பது புனிதம்
அதையும் மறந்தாய்

பூக்கள் கிடைத்தால்
உனது கழுத்துக்கு
மாலைகள் செய்தாய்;
மற்றவர்களுக்கு
மலர் வளையம் தயாரித்தாய்

உறவுகள் மறந்தாய்
சுயநலச்சேற்றுக்குள் அல்லவா
உன்னை
புதைத்துக் கொண்டாய்.

வாழ்க்கை ஓட்டத்தில்
உங்களோடு ஓடிவர முடியாதவர்களுக்கு
நீங்கள் கால்களை தர வேண்டாம்
வீசி எறியும் செருப்புகளையாவது தாருங்கள்

அதிக பட்சம்
உனது அடுத்த தலைமுறை
உன்னை அறியும்.
அவனுக்கு சேர்த்து வை;
அதைவிடுத்து
எவனைச்சுரண்டியாவது
எழுபது தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறாய் பார்..
சொல்
எதை எடுத்துச் செல்லப் போகிறாய்..?

நீ என்ன மதம்
தெரியவில்லை..

மருத்துவரும் செவிலியரும்
மாத்திரமல்ல..
உன்னைத் தொட்டுத் தூக்குகிறவர்கள் மட்டுமே
இப்போது உனக்கு கடவுள்

மரணவாசலை அடைக்க ஆயிரம் கதவு கண்டு வைத்தவன் என்கிற
மனித திமிர் இப்போது விலகியிருக்கும்

உன்னிடத்திலிருந்து மாத்திரமல்ல..
உலக வரைபடத்திலிருந்து!

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus tamil poem by kavignar k chandrakala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X