டெல்லி பல்கலைக்கழகம் ஆங்கில பாடத்தில் இருந்து நீக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மற்றும் தமிழ் தலித் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை நீக்கியதற்காக மன்னிப்பு தெரிவித்து மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தலித் அறிவுஜீவிகள் ஒன்றிணைவு அமைப்பில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பியுள்ளனர்.
புகழ்பெற்ற வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவியின் சிறுகதை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழக மேற்பார்வை குழு (OC) பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில் இருந்து கடந்த மாதம் நீக்கியது. டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீக்கப்பட்ட பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை நீக்கியதற்காக டெல்லி பல்கலைக்கழகம் மன்னிப்பு தெரிவித்து மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தலித் அறிவுஜீவிகள் ஒன்றிணைவு (Dalit Intelectual Collective) அமைப்பில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தலித் அறிவுஜீவிகள் ஒன்றிணைவு சார்பில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில், “வங்க மொழி மற்றும் தமிழ் மொழியின் முக்கியமான எழுத்தாளர்கள் மகேஸ்வேதா தேவி, பாமா மற்றும் சுகிர்தராணி ஆகிய 3 பேரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பிராமண, ஆணாதிக்க, வகுப்புவாத பாகுபாடு மற்றும் உயர் கல்வியில் உயர் வகுப்பினரின் ஆதிக்கம் மீண்டும் வலிமிகுந்ததாக வெளியே தெரிகிறது.
இந்த ஆசிரியர்களின் எழுத்துக்கள் ஆதிவாசிகள், தலித்துகள், விளிம்புநிலை பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்க்கை கதைகளை வலியுறுத்துகின்றன. அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் உட்பட பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் படிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் அந்தச் சிறுகதை வியப்பூட்டுகிறது. மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி சிறுகதை, பாமவின் சங்கதி நாவல், கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு மற்றும் என் உடல் ஆகிய இரண்டு கவிதைகள்: டெல்லி பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பதினாறு பேரின் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் கல்வி கவுன்சிலால் திடீரென நீக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கிய நூல்கள், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆதிவாசி பெண்களின் எதிர்ப்பு, சாதியால் பாதிக்கப்பட்ட இந்திய கிராமங்களில் தலித் பெண்களின் பாகுபாடான துயரங்கள் மற்றும் அநியாயத்தை வெளிப்படுத்துகின்றன. என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரி படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவற்றை நீக்கியதற்காக டெல்லி பல்கலைக்கழகம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தலித் அறிவுஜீவிகள் ஒன்றிணைவு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.லட்சுமணன், பேராசிரியர் சத்யநாராயணா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கையெழுத்திட்டு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.