எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
தமிழ்ப்பகுதியில் இதழ்கள் அறிமுகமாகத் தொடங்கிய காலத்திலேயே தலித் தரப்பிலிருந்தும் இதழ்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பது பலரும் அறிந்த செய்தியே. நவீன அரசியலின் அடிப்படையான வெளிப்பாட்டு வடிவம் இதழ்கள் தான். நவீன அரசியல் சூழலோடு ஆரம்ப காலத்திலேயே ஊடாட தொடங்கி விட்ட தலித் முன்னோடிகள் இதழ்களை தொடங்கியதில் வியப்பேதுமில்லை.
அவ்விதழ்கள் இன்றைக்கு கிடைக்கவில்லை எனினும் குறிப்புகளாக கிடைத்திருக்கும் சொற்ப செய்திகள் நமக்கு சில வெளிச்சங்களை கொடுத்திருக்கின்றன. அயோத்திதாசரின் சிந்தனைகளாக இன்றைக்கு கிடைத்திருக்கும் எழுத்துகள் யாவும் அவர் நடத்திய தமிழன் (1907 - 1914) இதழிலிருந்து கிடைத்தவையேயாகும். அவ்வாறு 1910 களில் நடத்தப்பட்ட இதழ்களுள் ஒன்று தான் வழிகாட்டுவோன். இவ்விதழும் முழுமையாக கிடைத்திராத நிலையில் இதுவரை கிடைத்த 10 சிறிதும் பெரிதுமான கட்டுரைகளை தொகுத்து "வழிகாட்டுவோன் தலித் இதழ் தொகுப்பு" என்ற சிறு நூலாக கொணர்ந்திருக்கிறார் ஜெ.பாலசுப்பிரமணியம். மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் (1869 - 1943) என்ற முக்கியமான ஆய்வு நூலை வெளியிட்ட ஜெ.பாலசுப்பிரமணியம் அந்த ஆய்வின் தொடர்ச்சியில் அந்நூலில் மூன்று பக்க தகவலாக கூறப்பட்டிருந்த வழிகாட்டுவோன் இதழிலிருந்து கிடைத்திருந்த நறுக்குகளை ஐம்பது பக்கங்களில் தொகுத்திருக்கிறார்.
இத்தொகுப்பு ஒரு வரலாற்று ஆவணம். ஏறக்குறைய நூறாண்டுக்கு முந்தைய தமிழ்ப்பகுதியின் அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த இதழ் ஒரு விசயத்தில் மற்ற தலித் இதழ்களிலிருந்து வேறுபட்டுள்ளது. அதாவது மற்ற இதழ்கள் பெரும்பாலும் வட தமிழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் நாகப்பட்டினத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. இதில் பங்கு பெற்றவர்களும் எழுதியவர்களும் கூட தென் பகுதியினரே. மேலும், இது
இருமொழி இதழாகவும் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரே கட்டுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரமாகும்.
பிரிட்டீஷார் காலத்தில் நவீன தொழிற்களங்களில் பணியாளர்களாகவும், இடம்பெயர்ந்து உழைப்பவர்களாகவும் மாறியதால் ஒரளவு பொருளாதார தற்சார்படைந்து, அதன் விளைவாய் சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபட வாய்ப்பு பெற்றிருந்த தலித் பெரியவர்கள் "தென் இந்திய ஒடுக்கப்பட்ட ஐக்கிய சங்கம்" என்ற பெயரில் சங்கத்தை நிறுவுவதென்று விருதுபட்டியில் (விருதுநகர்) கூடி 1915ம் ஆண்டு முடிவெடுத்தனர். அதே கூட்டத்தில் சங்கம் சார்பாக அக்கால வழக்கப்படி இதழ் ஒன்றை தொடங்குவதென்றும் முடிவெடுத்தனர். பதிப்பாளராக S.A.S தங்கமுத்துவும் ஆசிரியராக டேவிட் பென் என்பவரும் இருக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 1918ம் ஆண்டு ஜனவரியிலிருந்து வழிகாட்டுவோன் வெளியானது.
இந்த தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர் ஐக்கிய சங்கத்திற்கும்,ஏற்கனவே இந்தியாவிலிருந்து சென்றவர்கள் கொழும்பிலிருந்து நடத்திய இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்திற்கும், அவர்கள் நடத்திய ஆதிதிராவிடன் இதழுக்கும் தொடர்பு இருந்துள்ளது. எனினும் வழிகாட்டுவோன் குழுவினர் ஒடுக்கப் பட்டோர், பஞ்சமர் போன்ற அடையாளங்களையே கையாண்டுள்ளார்கள். நாகப்பட்டினம் பாப்பாகோவிலில் பஞ்சமர் கூட்டுறவு கடன் சங்கம் ஒன்றை 1917ம் ஆண்டு தொடங்கியுள்ளனர்.
தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர் ஐக்கிய சங்கத்தில் நெல்லை, தஞ்சை, விருதுநகர், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை போன்ற தென்பகுதியினரே நிர்வாகிகளாக இருந்துள்ளனர். சங்கம் சார்பாக பள்ளிகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.
நூலிலுள்ள பத்து கட்டுரைகளையும் வாசிக்கும் போது ஒடுக்கப்பட்டவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் சிந்தனை வரலாறு எவ்வாறிருந்திருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. இதழ் கட்டுரைகளில் ஒடுக்கப்பட்டவர்களின் தற்கால கீழான நிலை ஒத்துக் கொள்ளப்பட்டாலும் இந்நிலையே அவர்களது எல்லா காலத்தினதும் நிலையாக இருந்திருக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிவ புராண நந்தனாரை சொல்லிய அதேவேளையில் நந்தன் என்னும் அரசன் இருந்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். நந்தன் மன்னன் என்ற கருத்தை இரட்டைமலை சீனிவாசன் குறிப்பாகவும் அயோத்திதாசர் விரிவாகவும் எழுதியிருப்பதால் இக்கருத்து அக்காலத்தில் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது.
பத்திராதிபர் S.A.S தங்கமுத்து பற்றி சொல்ல அவர் பேசியது ஆதிதிராவிடன் இதழில் வெளியான பதிவு ஒன்றே போதும். அப்பேச்சில் "இந்து மத புராணங்களை நம்பி மோசம் போகாமல் சகலருக்கும் சமமாய் விளங்கும் அந்தப் பரம்பொருளை எல்லோரும் சமமாய் வணங்க எந்த மதம் இடம் தருகிறதோ, அத்தகைய மதங்களாகிய கிறிஸ்துமதம், புத்த மதம், மகம்மதிய மதங்களில் சேர்ந்து கொள்ளுவது நன்மையென்றும், இந்து மதத்தில் குருட்டாட்டமாய் பிடித்துக் கொண்டிருக்கும் 'கர்மா' என்னும் சட்டத்தை அநுசரித்தால் நமது ஜாதியார் முன்னேற முடியாமல் சதாகாலமும் அடிமைகளாகவேயிருக்க நேரிடுமென்றும் சொன்னார் " என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் ஓர்மையை அறிந்து கொள்ள இந்த பதிவே தக்க சான்று. இதை அவர் பேசிய ஆண்டு 1919. தலித்துகளின் மதம் பற்றி முன்னோடிகளிடையே விவாதங்கள் இருந்துவந்த சூழ்நிலையில் இந்து மதம் தவிர்த்து சமம் தரும் எந்த மதமும் சரியே என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய குழுவாக இச்சங்கத்தினர் இருந்திருப்பதை அறிய முடிகிறது. ஏறக்குறைய இதேபோன்ற கருத்தையே பின்னாட்களில் இன்னும் விரிவாக பெரியார் அரசியல் களத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பிறரும் பிற அமைப்புகளும் ஆற்றும் பணிகளை வரவேற்கும் அதேவேளையில் "இச்சாதிகள் தாங்களே தங்களை இப்பயங்கரமான நிலைமையிலிருந்து இரட்சித்துக்கொள்ள வழி தேடுவது இயல்பும், நியாயமும், ஞானமுமான தாயிருக்கிறது. ஏனெனில் அவரவர் குறைவும் நிறைவும் அவரவருக்குத் தானே நன்றாகத் தெரியும் " என்று பி.எஸ்.சாமுவேலும் எஸ்.ஏ.எஸ்.தங்கமுத்துவும் எழுதியுள்ளனர். இது " இதர சமூகத்தவர்களும் சமயத்தவர்களும் இச்சமூத்தவர், முன்னேற்றத்தை நாடிச் செய்துவந்திருப்பது தன்னயத் தேட்டம் என்றும், இச்சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள்" என்று சுய சரிதை எழுதத் தொடங்கும் முன் எழுதியதை நினைவுப்படுத்துகிறது. தலித்துகள் எங்கு, எப்போது யாருடன் இணைந்து செயல்பட்டாலும் தங்களின் தனித்துவம் பற்றிய கோரலும் இணைந்தே வந்திருப்பதை இதுபோன்ற வாசிப்புகளின் வழியே அறிந்து கொள்கிறோம்.
அக்கால சூழலை ஒட்டி பிரிட்டீஷ் அரசை ஆதரித்த இச்சங்கம் இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தீர்மானகரமான முடிவையெடுத்த மாண்டேகு (செம்ஸ்போர்டு) கமிட்டியிடம் தந்த விண்ணப்பத்தினை இதழில் வெளியிடப்பட்டு இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. அதில் எட்டு கோரிக்கைகள் அடங்கியுள்ளன. இந்தியாவுக்கான சுயாட்சி பற்றிய கோரிக்கையின் போது கண்ணுக்கே தெரியாமல் சமூகத்தின் அடித்தளத்தில் நிலவும் கொடுமைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அயல்நாடுகளுக்கு பிழைக்கச்செல்வதற்கு ஏதுவாக நிலவி வந்த ஒப்பந்தக்கூலி முறையை கைவிட வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார்கள். நிர்வாகத்தை நடத்தும் புதிய உள்ளாட்சி சபைகளில் அவர்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தர வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள். இக்கோரிக்கைகளுள் பலவும் பிற்காலத்தில் முக்கிய அரசியல் கோரிக்கைகளாக மாறியதையும் அவற்றுள் சில கைகூடியதையும் பார்த்தோம்.
எட்டு கோரிக்கைகளுள் ஒன்று இம்மக்களின் பிரச்சினை எந்த அளவிற்கு நுட்பமாகவும் ஆழமாகவும் சமூகத்தில் விரவியிருந்தது என்பதைக் காட்டுகிறது. சாசனங்கள் (கையெழுத்து) என்ற தலைப்பில் அக்கோரிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது: சாசனங்கள் முதலியன எங்களுடையவர்கள் படியாதவர்களும் தேசநடபடிகளை (நடவடிக்கைகளை) அறியாதவர்களுமாயிருப்பதால் தங்களுக்கு விரோதமான பத்திரங்கள், தஸ்தாவேஜுகள் முதலிய சாசனங்களுக்குச் சம்மதித்து கையெடுத்துப் பதிலாக பேனா தொட்டுக் கொள்கிறார்கள், அல்லது கைவிரல் பதிந்து கொடுக்கிறார்கள். இதனால் எங்களுக்கு அநேக கெடுதிகள் உண்டாகின்றன. ஆகையால் இப்பேர்பட்ட சாசனங்களில் கவர்மெண்ட்டாரால் அங்கீகரிக்கப்பட்டதும், எங்கள் ஜாதிகளின் முன்னேற்றத்திற்கென்று ஏற்பட்டதுமான ஒரு சங்கத்தால் நியமிக்கப்பட்ட அந்தந்த கிராமத் தலைவரின் சாட்சிக் கையெழுத்து வைக்கப்பட்டாலொழிய அச்சாசனங்கள் சர்க்காரால் ரிஜிஸ்டர் செய்ய அல்லது ஒப்புக் கொள்ளப்படாதென்ற ஒரு நிபந்தனையை ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவிற்கும் நியாய விசாரணை இலாக்காவிற்கும் அனுப்பும்படியாக கேட்டுக்கொள்கிறோம் என்பதே அக்கோரிக்கை ஆகும்.
இங்கிருந்த நிலைமையை இந்த கோரிக்கையே வலுவாக விளக்கி விடுகிறது. இந்த விண்ணப்பம் ஒரு ஆவணம். இந்திய விடுதலைப் போராட்டச் சூழலில் தலித்துகளின் தேவைகளும் எண்ணங்களும் என்னவாக இருந்தன; எவ்வாறு வேறுபட்டிருந்தன; அதற்கேற்ப குரல்களில் எத்தகைய வேறுபாடுகள் வெளிப்பட்டன என்பவற்றை ஒருசேர இந்த விண்ணப்பம் காட்டுகிறது. இவ்வாறுதான் சுயாட்சி என்பதற்கு விளிம்பு நிலை கண்ணோட்டத்தில் புதிய அர்த்தம் உருவாகியிருந்ததை பார்க்கிறோம்.
அரசை நோக்கி கோரிக்கை எழுப்புவதோடு கூட தலித் மக்களிடையேயும் விழுப்புணர்வையும்
தன்மதிப்பையும் உருவாக்கும் பணிகளை இச்சங்கம் செய்து வந்தது. அவை வழிகாட்டுவோன் இதழ் மூலமே பரப்பப்பட்டன. கல்வி பற்றி மட்டுமல்லாது விவசாயம், கைத்தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டு மேம்படுவது எவ்வாறு என்பதான சுய மேம்பாட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றன. விவசாயம்,கைத்தொழில் பற்றி இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. வரவு செலவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டுமென்பதும் எழுதப்பட்டது. ஓரிடத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு வாசகங்களையே இவ்விதழின் அடிநாதங்களாக கூறலாம். அதாவது "படிப்பின் அருமை, சுயாதீனத்தின மேன்மை "
இவ்வாறு குறைந்த பக்கங்களிலேயே குறிப்பிடத்தக்க புரிதல்களை வழங்கி விடுகிறது இந்நூல். இந்நூலை வாசித்து முடிக்கிற போது தலித்துகளின் இதுவரையிலான பயணம் பற்றிய மதிப்பு ஒருபுறமும் இத்தகைய நீண்ட பயணத்திற்கு பிந்தைய பயன்களை யோசிக்கிறபோது மறுபுறம் ஆயாசம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.