Advertisment

தலித் கலை இலக்கிய முன்னோடி புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா மரணம்

தலித் கலை இலக்கிய அரசியல் மேடைகளிலும் பெரியாரிய, இடதுசாரி மேடைகளிலும் இசைப் போர் முழக்கம் செய்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dalit Singer Dalit Subbaiah passed away, Dalit Subbaiah dies, Dalit Subbaiah death, Dalit Subbaiah, Lenin Subbaiah, தலித் சுப்பையா மரணம், தலித் சுப்பையா காலமானார், தலித் சுப்பையா பாடல்கல், தலித் அரசியல், தலித் கலை இலக்கியம் அரசியல், Dalit Subbaiah songs, Dalit Subbaiah singer, Dalit politics, Dalit art and literature

“வெல்ல முடியாதவர் அம்பேத்கார்… அந்த வேங்கையைப் போல் போராடிய வீரன் யார்? வேறு யார்?” என்ற தலித் சுப்பையாவின் பாடல் தலித் கலை இரவுகளை, தலித் அரசியல் மேடைகளை உற்சாகப்படுத்தி அதிரச் செய்தவை. தலித் கலை இரவுகளிலும் தலித் கலை இலக்கிய மேடைகளிலும் பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கக்கள் மற்றும் முற்போக்கு மேடைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடல்களைப் பாடி வந்தவர் பாடகர் தலித் சுப்பையா.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் தலித் கலை, இலக்கிய, அரசியல் மேடைகளில் ஓங்கி ஒலித்த குரல் தலித் சுப்பையாவின் குரல். மதுரை மாவட்டம், மேலூர் அருகே முனியாண்டிப்பட்டி கிராமத்தில் 24.10.1952-ல் பிறந்தவர். மதுரை தியாகராயர் கல்லூரியில் இளங்கலை, அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை படிப்பையும் பெங்களூருவில் சட்டப் படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே சாதி திண்டாமை கொடுமைகளை சந்தித்த சுப்பையா இடதுசாரி இயக்கங்களின் தொடர்பால் தனது அரசியல் பாதையைத் தேர்ந்தார். மக்கள் இசையில் ஆர்வம்மிக்க சுப்பையா அரசியல் பாடல்களைப் பாடினார். தீண்டாமை, சாதி பாகுபாடு, ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த தலித் அரசியல் எழுச்சியின் அடையாளமாக தலித் என்பதை தனது பெயருடன் இணைத்துக்கொண்டு தலித் சுப்பையா என்று தனது பெயரை அறிவித்துக்கொண்டார்.

1980களில் மதுரையில் தலித் ஆதார மையம் நடத்திய தலித் கலை இரவுகளில் வேகம் அடைந்த தலித் சுப்பையாவின் இசைப் பயணம் அவருடைய வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்தது. 1980-களிலேயே பாண்டிச்சேரிக்கு குடியேறிய தலித் சுப்பையா, தனது வீரியமான பாடல்கள் மூலம் தலித் அரசியலுக்கு பலம் சேர்த்தார். தலித் மேடைகளில் மட்டுமல்லாமல், திராவிடர் விடுதலைக் கழகம், இடதுசாரி கலை இலக்கிய மேடைகள் மற்றும் முற்போக்கு மேடைகளில் தனது பாடல்களால் அரசியல் கருத்துகளை பரப்பியவர்.

publive-image

“வெல்ல முடியாதவர் அம்பேத்கார்… அந்த வேங்கையைப் போல் போராடிய வீரன் யார்? வேறு யார்?”

“பணிந்து போகமாட்டோம் எவனுக்கும் பயந்து வாழமாட்டோம்.. தலித்து என்று சொல்லுவோம் - எவனுக்கும் தலைவணங்க மாட்டோம்…”

“அடங்கி வாழ்வதே அடிமைத் தனம்… அதை அடித்து நொறுக்குவதே தலித்து குணம்…”

“சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா…
அம்பேத்கர் சந்தித்த விவரம் கேளுடா”
என்ற பாடல்கள் தலித் அரசியல் கலை இரவு மேடைகளில் தலித் சுப்பையாவின் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். சுமார் 400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு மேலாக 1000க்கும் மேற்பட்ட மேடைகளில் புரட்சிகரப் பாடல்கலைப் பாடியவர்.

தலித் சுப்பையா பாடகர் மட்டுமல்ல. எழுத்தாளர் கவிஞர், கள செயல்பாட்டாளர் என பன்முக ஆளுமை மிக்கவர். யுத்தம் துவங்கட்டும், இசைப் போர் 1, 2, தீர்க்கப்படாத கணக்குகள், எளிய மாந்தர்களின் அரிய செய்தி, யோக்கியர்கள் வருகின்றார்கள், காலத்தை வென்ற களத்துப் பாடல்கள், கலைப் பயணத்தில் கரு.அழ.குணசேகரன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தலித் சுப்பையா இறப்பதற்கு முன்பு எழுதிய ‘கவலைக்கிடமாகவே உள்ளது’ என்ற புத்தகம் அச்சுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளது.

சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தலித் சுப்பையா, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70. பாடகர் தலித் சுப்பையாவுக்கு லட்சுமி என்ற மனைவியும் ஸ்பார்ட்டகஸ், கார்க்கி என 2 மகன்கள் உள்ளனர்.

தலித் கலை இலக்கிய மேடைகளில் தொடர்ந்து தனது தலித் விடுதலை இசைப் போர் முழக்கம் செய்து வந்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா, நீலம் பண்பாட்டு மையம் சென்னையில் நடத்திய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பாடினார் என்று நினைவு கூர்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சே அஜித், தலித் கலை இரவுகளில் தலித் சுப்பையாவின் பாடல்கள் மிகவும் புரட்சிகரமாக ஒலித்தது என்று கூறினார்.

புதுச்சேரியில் 1964ம் ஆண்டுக்கு பிறகு குடியேறியவர்களுக்கு அம்மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்பதை எதிர்த்து பேசியவர். அதற்கு பாண்டிச்சேரி தலித்துகள் மத்தியிலேயே ஆதரவு இல்லாததால் கருத்து வேறுபாடு அடைந்த அவர், இடதுசாரிகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதமாக தலித் சுப்பையா என்ற தனது பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக்கொண்டு செயல்பட்டார். அவருடைய பாடல்கள் தலித் எழுச்சியை வலுபடுத்தும் பாடல்கள், அவர் வெறும் பாடகராக மட்டுமல்லாமல், கள செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுள்ளார். தலித் கலை இலக்கிய அரசியலில், தலித் சுப்பையாவின் பங்களிப்பு முக்கியமானது. அவர் லெனின் சுப்பையா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டாலும் அவர் தலித் சுப்பையா என்றே அறியப்பட்டார் என்று சே அஜித் கூறினார்.

புரட்சிப் பாடகர் தலித் சுப்பையாவின் மறைவுக்கு தலித் ஆளுமைகள், தலித் ஆய்வாளர்கள், தலித் அரசியல் இயக்கங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Puducherry Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment