இரா.குமார்
நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர் காரைக்கால் அம்மையார். சிவன் கோயில்களில் 63 நாயன்மார்களின் சிலைகள் வரிசையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில், எல்லா நாயன்மார்களும் நின்ற கோலத்தில் இருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் இருந்த கோலத்தில் (உட்கார்ந்த நிலையில்) இருப்பார். இதற்குக் காரணம் உண்டு.
காரைக்கால் அம்மையாரின் இயற் பெயர் புனிதவதி. திருமணம் ஆகிறது அவருக்கு. சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுகிறார். புனிதவதியின் தெய்வத் தன்மையை அறிந்த அவரது கணவன், தெய்வத்தன்மை உடைய பெண்ணிடம் இல்லற சுகம் காண்பது தவறென்று எண்ணி, மனைவியை பிரிந்துவிடுகிறான்.
பின்னர் பேய் வடிவம் எடுத்து, சிவனைக் காண கயிலாய மலைக்குச் செல்கிறார் காரைக்கால் அம்மையார். சிவன் குடிகொண்டுள்ள மலையில் காலால் நடப்பது கூடாது என்று தலையால் நடக்கிறார். அவர் வருவதைக் கண்ட, பார்வதி, அது யார் என்று சிவபெருமானிடம் கேட்கிறார். “அன்பினால் நம்மைப் பேண வரும் அம்மை” என்று சொல்கிறார் சிவன். காரைக்கால் அம்மையாரைப் பார்த்து “அம்மையே” என்று அழைக்கிறார். பெண்மை நிறைவடைவது தாய்மைப் பேற்றில்தான். தான் ஆட்கொண்டதால்தான், புனிதவதியை விட்டு அவரது கணவன் பிரிந்தான். அதனல் அவள் தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனது. அந்தக் குறையைத் தீர்க்கவே, காரைக்காலம்மையாரை தாயாக ஏற்று, சிவனே மகன் ஆனார். இப்படி, சிவனுக்கே தாயானதால்தான், காரைக்கால் அம்மையார் மட்டும் இருந்த(உட்கார்ந்த) கோலத்தில் காட்சி தருகிறார்.
காரைக்காலம்மையார் பாடியவற்றுள் முக்கியமானது அற்புதத் திருவந்தாதி என்னும் நூல். சிவனைப் பற்றி அதில் ஒரு பாடல்
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு
சிவபெருமானே! உன் உள்ளங்கையிலே தீயை ஏந்தி நிற்கிறாய். அந்தத் தீ சிவந்திருக்கிறது. உன் உள்ளங்கையும் சிவந்திருக்கிறது. உன் கையின் சிவப்பால் தீ சிவப்பானதா? அல்லது தீயின் சிவப்பால் உன் கை சிவப்பானதா? சிவ பெருமானே நீயே பதில் சொல். உன் கால்களில் அணிந்த கழல்கள் ஆட, இடுகாட்டில் பேய்களோடு சேர்ந்து ஆடும் சிவபெருமானே நீயே சொல் என்று சொல்கிறார் காரைக்காலம்மையார்.
சிவன் அந்த அளவுக்கு சிவப்பாக இருக்கிறானாம். தீக்கனல் மேனியன் அல்லவா? சிவப்பாகத்தானே இருப்பான். சிவ பெருமானை சிலர் நீல நிறத்தில் வரைகின்றனர். அது தவறு. சிவந்தமேனியன்தான் சிவபெருமான்.
காரைக்கால் அம்மையார் 7 அல்லது 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல் இது. இப்போது உள்ள தமிழ் போல எவ்வளவு எளிமையாக இருக்கிறது பாருங்கள். அதுதான் தமிழின் சிறப்பு. அதனால்தான் ”சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து போற்றுதுமே” என்று பாடினார் சுந்தரம் பிள்ளை. தமிழ் தவிர வேறு எந்த மொழியும் இப்படி எளிதாக, மாற்றம் பெறாமல் இருந்ததில்லை.
பதிமூன்று நூற்றண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல், படித்தால் இன்றும் புரிகிறது பாருங்கள். அதுதான் தமிழின் இளமைத் திறம்.. இன்று உள்ள கர்நாடக இசையின் பல ராகங்களுக்கு முன்னோடி காரைக்கால் அம்மையார்தான்.