கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். கவிஞர் இன்குலாபுக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை என்பதால், விருதை மறுத்ததாக அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ் படைப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொழிபெயர்ப்பு நூல் பிரிவுக்கான விருது, மலையாள நூலான ‘கசாக்கின் இதிகாசம்’ எனும் நூலை மொழிபெயர்த்த யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசினால் வழங்கப்படும் விருதுகளில் இன்குலாப்புக்கு நம்பிக்கையில்லை எனக்கூறி, அவரது குடும்பத்தினர் சாகித்ய அகாடமி விருதை மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். அரசு முகங்கள் மாறலாம்.ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாதமும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும். இன்குலாப்பிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு.அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும். இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.”, என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறுகையில், “இது அரசால் வழங்கப்பட்ட விருது எனினும், இலக்கிய உலகத்தை சேர்ந்தவர்களால் தான் இந்த விருது பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், இந்த விருதை பெற்றுக்கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை”, என தெரிவித்துள்ளனர்.