பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். 700 சிறுகதைகளையும், 340 நாவல்களையும் 105 தொடர்களையும் எழுதியுள்ளார். மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை எழுதி வந்தார். ஆன்மிக சொற்பொழிவு மூலமும் புகழ்பெற்றவர்.
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ‘என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம்’ உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். டி.வி.எஸ் நிறுவனத்தில் துணை பொறியாளாராக பணியாற்றிவர். தனது தாயின் பெயரான இந்திராவை முன்பு சேர்த்து, இந்திரா செளந்தர்ராஜனாக கதைகளை படைத்து வந்தார். இவரது தனி பாணியான கதையாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தநிலையில், மதுரையில் டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இந்திரா சௌந்தர்ராஜன் மரணமடைந்தார். எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி கீழே விழுந்த நிலையில், உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“