தமிழ்ச்சுவை 3 : வள்ளுவர் காட்டும் பார்வைக்களம்

தாமதமாக வரும் தலைவன் மீது ஊடல் கொள்ளும் தலைவிக்கு, அவன் அருகில் வந்ததும், அவன் மீதான குறைகள் மறைந்து போகிறது. அது எப்படி என்பதை விளக்குகிறார்,...

இரா.குமார்

ஒரு பொருளை புகைப்படம் எடுக்கிறோம். பொருளில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் கேமராவை வைத்து புகைப்படம் எடுத்தால்தான் புகைப்படத்தில் அந்தப் பொருளைக் கொண்டு வரமுடியும். மிக நெருக்கத்தில் வைத்தால் புகைப்படத்தில் அந்தப் பொருள் வராது.

அது போலத்தான், ஒரு பொருளை குறிப்பிட்ட தூரத்தில் வைத்துப் பார்த்தால்தான் அந்தப் பொருள் நம் கண்ணுக்குத் தெரியும். இப்படி, நம் பார்வைக்குத் தெரியக்கூடிய அளவு தூரத்தை பார்வைக்களம் (field of vision) என்று சொல்வார்கள். பார்வைக்களத்தைத் தாண்டி, கண்ணுக்கு மிக நெருக்கமாக அந்தப் பொருளைக் கொண்டு சென்றால், அந்தப் பொருள் நம் பார்வைக்குத் தெரியாது. இதை அப்போதே வள்ளுவர் ஒரு குறளில் சொல்லியிருக்கிறார். அதைப் பார்ப்போம்.

ஒரு குச்சியில் மையை எடுத்து, கண்ணுக்கு பெண்கள் மையெழுதுவதை பார்த்திருக்கிறோம். அந்தக்குச்சியை மைக்கோல் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர். அப்படி மையெழுதும் போது என்ன நடக்கிறது என்ற நுட்பத்தை மிக அழகாகச் சொல்கிறார் வள்ளுவர்.

கோலில் மையை எடுத்து கீழ் இமைக்கும் மேல் இமைக்கும் மையெழுதுகின்றனர். மையை எடுத்து கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும் வரை அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், மையெழுதும்போது அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதை நாம் எப்போதாவது கவனித்துள்ளோமா? வள்ளுவர் கவனித்திருக்கிறார்.

இதை இன்பத்துப்பாலில் ஒரு உவமையாகக் கையாள்கிறார் வள்ளுவர். அந்தக்குறள் இதோ….

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.

பொருள் தேடப் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலம் வரும் முன் பொருள் தேடி, தேரில் ஏறி வருவேன் என, “கார் வரும் முன் தேர் வரும்” என்று சொல்லிச் செல்கிறான்.

கார்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. பிரிவுத்துயரால் வருந்தும் தலைவியை, மழைக்காலக் குளிரும் சேர்ந்து மேலும் வருத்துகிறது. கார் வருமுன் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. என் துயரத்தை அவன் அறியவில்லை. வரட்டும் அவன்… சண்டை போடாமல் விடப்போவதில்லை… என்று கோபத்தில் இருக்கிறாள் தலைவி.

தலைவன் வந்துவிடுகிறான். அவனைக் கண்டதும், அதுவரை அவன் மீது இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை. தூரத்தில் இருக்கும்போது அவன் மீது தெரிந்த குறைகள் எல்லாமும் அவன் அருகில் வந்ததும் மறைந்து விடுகின்றன. எதைப் போல? 

வள்ளுவர் சொல்கிறார்….

தூரத்தில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியும் மைக்கோல், விழிக்கு அருகில் அருகில் வந்து கண்ணில் மையெழுதும்போது தெரிவதில்லை. அதைப்போல, அவன் அருகில் வந்ததும் அவன் மீதான குறைகள் தெரிவதில்லை என்று சொல்கிறார். 

கண்ணுக்கு மையெழுதுவதைக்கூட எவ்வளவு நுட்பமாக கவனித்திருக்கிறார் பாருங்கள் வள்ளூவர்.

கண்ணுக்கு மையெழுதும்போது ஏற்படும் அனுபவம் வள்ளுவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஆண்களும் கண்ணுக்கு மையெழுதும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. இது பற்றிய குறிப்பை பழைய இலக்கியங்களில் காண முடிகிறது.

×Close
×Close